வலைப்பந்து சம்பியன் கிண்ணத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்ட செலான் வங்கி

230
Seylan Bank retain the Sri lankasports.com netball Challenge Trophy

Srilankasports.com நடாத்திய வலைப்பந்துப் போட்டியில் சம்பியன் கிண்ணத்தினை செலான் வங்கி மீண்டும் தன்வசப்படுத்திக் கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியில் ஹட்டன் நஷனல் வங்கியை மிகவும் கடினமான போராட்டத்தின் பின் செலான் வங்கி வெற்றிகொண்டது.

Srilankasports.com பத்தாவது முறையாகவும் நடாத்திய வலைப்பந்துப் போட்டித் தொடர் இம்மாதம் 21ஆம் திகதி கொழும்பு புனித ஜோசப் கல்லூரி உள்ளரங்கில் இடம்பெற்றது. இத்தொடரில் பங்குபற்றுவதற்காக 13 அணிகள் சமூகமளித்திருந்தன. அதில் 8 அணிகள் பெண்கள் பிரிவிலும் 5 அணிகள் கலவன் பிரிவிலும் கிண்ணத்திற்காக போட்டியிட்டன.

சென்ற வருடத் தொடரின் இறுதிப் போட்டியில் வெறும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் செலான் வங்கியிடம் தோல்வியுற்ற ஹட்டன் நஷனல் வங்கி, இப்போட்டியின் வெற்றியே கடந்த வருட தோல்விக்கு தமக்கு பரிகாரம் எனும் எண்ணத்துடன் இறுதிப் போட்டியில் காலடி எடுத்து வைத்தது.

எனினும் செலான் வங்கி மிகவும் விவேகமான போட்டி நுட்பங்களால் 44-41 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இவ்வருடத்தின் கிண்ணத்தையும் தன்வசப்படுத்திக்கொண்டது.

கலவன் பிரிவு போட்டியிலும் தொடர்ச்சியாக செயலான் வங்கி வீர வீராங்கனைகள் தம் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். CDBF PLC அணியுடனான இறுதிப் போட்டியில் 23-09 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் செலான் வங்கி அணி இலகுவாக வெற்றியை ஈட்டியது.

எனினும் பெண்களுக்கான பிளாட் (Plate) கிண்ண இறுதிப் போட்டியில் CDBF PLC அணி, கொமர்சியல் கிரெடிட் அணியை 18-12 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வென்று கிண்ணத்தைக் கைப்பற்றிக்கொண்டது.

இப்போட்டித் தொடரில் முதன்முறையாக பங்கேற்ற மாஸ் சேடலின் நிறுவன வீராங்கனைகள் தொடருக்கான போல் (Ball) கிண்ணத்தை தன்வசப்படுத்திக்கொண்டனர். மற்றொரு விறுவிறுப்பான போட்டியாக இடம்பெற்ற இந்த இறுதிப் போட்டியில் டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவன அணியை 20-18 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மாஸ் சேடலின் தரப்பு வெற்றி கொண்டது.

இத்தொடரில் வெற்றிபெற்ற அணிகளின் வீர வீராங்கனைகளுக்கான பரிசில்களை வழங்குவதற்கான சிறப்பு அதிதியாக பாராளுமன்ற சீர்திருத்த அமைச்சகத்தின் செயலாளர் நிமல் போபகே அவர்கள் பரிசளிப்பு நிகழ்வின்போது கலந்துகொண்டார்.