ஏழு இலங்கை வீரர்களுக்கு நேபாளத்தில் பொதுச் சாதாரணதரப் பரீட்சை 

76

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாத்தில் இடம்பெற்ற ஏழு வீரர்களுக்கு நேபாளத்தில் வைத்து கல்விப் பொதுச் சாதாரணதர பரீட்சைக்கு (G.C.E. O/L)  தோற்றுவதற்கான ஏற்பாடுகளை தேசிய ஒலிம்பிக் சங்கம் செய்து கொடுத்துள்ளது.

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு மற்றும் பொக்கஹரா ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.

இதன்படி, இம்முறை நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் 27 போட்டி நிகழ்ச்சிகளுக்காக இலங்கையிலிருந்து சுமார் 600 வீர, வீராங்கனைகள் பங்கேற்வுள்ளதுடன், அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற ஏழு கனிஷ்ட வீரர்களும் இம்முறை இலங்கை குழாத்தில் இடம்பிடித்துள்ளனர்

இந்நிலையில், குறித்த ஏழு வீரர்களும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கல்விப் பொதுச் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளதால் அதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க தேசிய ஒலிம்பிக் சங்கம் முன்வந்துள்ளது.

தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் ஊடாக கல்வி அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட விசேட கோரிக்கைக்கு அமைவாக கல்வியிலும், விளையாட்டிலும் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற வீரர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் பூரண அனுசரணையுடன், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடன், கத்மண்டுவில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட பரீட்சை நிலையத்தில் வைத்து இந்த வீரர்கள் பரீட்சை எழுதவுள்ளனர்.

அதுமாத்திரமின்றி, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்றும் இந்தப் பரீட்சையை மேற்பார்வை செய்வதற்காக எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி நேபாளம் நோக்கி பயணமாகவுள்ளனர்.

இந்த அதிகாரிகளுக்கான விமானப் பயணசீட்டு, தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும், செலவினங்களையும் தேசிய ஒலிம்பிக் சங்கம் பொறுப்பேற்றுள்ளது.

இலங்கையின் பரீட்சைகள் வரலாற்றில் மாணவர் ஒருவருக்கு வெளிநாடொன்றில் வைத்து கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் தேசிய மட்ட பரீட்சை ஒன்றில் தோற்றுவதற்கு வழங்கப்படும் இரண்டாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.

முன்னதாக கடந்த வருடம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் பங்குகொண்ட இலங்கை நீச்சல் அணியைச் சேர்ந்த அகலங்க பீரிஸ்,   உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்

கல்வியைப் போல விளையாட்டிலும் அதீத திறமை கொண்ட பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த அகலங்க பீரிஸ், ஆசிய விளையாட்டு விழா நடைபெற்ற காலப்பகுதியில் தான் உயர்தரப் பரீட்சைக்கும் தோற்றவிருந்தார்

எனவே, தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் பூரண அனுசரணையுடன், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடன் ஜகார்த்தவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து பொது அறிவு, ஆங்கிலம் மற்றும் கணக்கியல் பகுதி – I உள்ளிட்ட பாடங்களை அவர் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<