இலங்கையின் பாதுகாப்பை புகழ்ந்த தமிம் இக்பால்

692

இலங்கையில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் பங்களாதேஷ் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு என்பன அற்புதமாக உள்ளது என பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் தமிம் இக்பால் பாராட்டியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி இலங்கையில் உள்ள சில கிரிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்களில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.

ஓய்வை அறிவித்த மாலிங்கவின் அதிரடி கருத்து

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ……..

இதன்காரணமாக இலங்கை வரவிருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இலங்கை வருவதனை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்ததுடன், இலங்கையின் பாதுகாப்பை ஆராய்வதற்கு குழுவொன்றினை அனுப்பியிருந்தது. குறித்த குழுவானது இலங்கையில் உள்ள பாதுகாப்பினை உறுதிப்படுத்தியிருந்ததை தொடர்ந்து, பங்களாதேஷ் அணி, இலங்கை வருவதாக அறிவித்தது.

அதன் அடிப்படையில், மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக பங்களாதேஷ் அணியானது இலங்கை வந்துள்ள நிலையில், நேற்றைய தினம் தொடருக்கு முன்னதான ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட பங்களாதேஷ் அணியின் தலைவர் தமிம் இக்பால் இலங்கையின் பாதுகாப்பினை பாராட்டியுள்ளார். இதுதொடர்பில் குறிப்பிட்ட அவர்,

“இலங்கை கிரிக்கெட் சபை எமக்கு வழங்கியுள்ள பாதுகாப்புக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு பாதுகாப்பு மிக அற்புதமாக உள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பின்னரும், நாம் இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்த்திருந்தோம். 

காரணம், இதேபோன்ற பாதுகாப்பற்ற சூழ்நிலை எமது நாட்டில் நிலவிய போதும், எமக்கு முதலில் உதவியது இலங்கை கிரிக்கெட் அணிதான். எமது நாட்டில் மீண்டும் கிரிக்கெட் தொடருவதற்கு அவர்கள் (இலங்கை) தங்களுடைய உதவியை வழங்கியிருந்தனர். கிரிக்கெட்டை பொருத்தவரையில் நாம் ஒரு குடும்பமாக செயற்படுகிறோம் என நான் நினைக்கிறேன். அதனால், இதுபோன்ற தருணங்களில் நாம் ஒருவருக்கொருவர் உதவிகளை வழங்கவேண்டும்”

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுகிறார் மாலிங்க

இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ………

அதேநேரம், இலங்கையில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் இங்கிருக்கும் சூழ்நிலையானது பங்களாதேஷ் வீரர்களுக்கு எவ்விதத்திலும் பாதகமாக இல்லை எனவும் வீரர்கள் ஹோட்டல் மற்றும் ஹோட்டலுக்கு வெளியில் செல்லும் போதும் மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர் எனவும் தமிம் இக்பால் சுட்டிக்காட்டினார். 

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 26ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.  குறித்தப் போட்டியுடன் இலங்கையின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<