19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான (இரண்டு நாட்கள் கொண்ட) ‘சிங்கர் கிண்ண’ கிரிக்கெட் தொடரில் இன்றைய நாளில் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளது. அத்தோடு இன்று ஆரம்பமாகிய மருதானை புனித ஜோசப் மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியின் முதல் நாள் நிறைவில் புனித ஜோசப் கல்லூரி முன்னிலை பெற்றுள்ளது.

காலி மஹிந்த கல்லூரி எதிர் மாத்தறை புனித தோமியர் கல்லூரி

மாத்தறை உயன்வத்த மைதானத்தில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில் மஹிந்த கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 104 ஓட்டங்களால் புனித தோமியர் கல்லூரியை வீழ்த்தியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய மாத்தறை புனித தோமியர் கல்லூரி மஹிந்த கல்லூரிக்கு முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை வழங்கியது. இதன்படி முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மஹிந்த கல்லூரி அஷென் கந்தம்பி, வினுர துல்ஷார மற்றும் R.H. வெளிகிந்த ஆகியோரின் அரைச்சதங்களுடன் 71.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 292 ஓட்டங்களைப் பெற்று வலுப்பெற்றிருந்த போது தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

புனித தோமியர் கல்லூரி சார்பாக பந்து வீச்சில், ஒரேயொரு ஆளாக சிறந்த பந்து வீச்சை வெளிக்காட்டிய லஹிரு தில்ஷான் இரண்டு விக்கெட்டுகளை பதம் பார்த்தார்.

தொடர்ந்து மைதான சொந்தக்காரர்களான மாத்தறை புனித தோமியர் கல்லூரி மஹிந்த கல்லூரி வீரர்களின் அபார பந்துவீச்சினால் தமது முதல் இன்னிங்சில் 137 ஓட்டங்களுடன் சுருண்டு கொண்டது. இதில் மஹிந்த கல்லூரி சார்பாக கவிந்து எதிரிவீர 3 விக்கெட்டுகளையும், குஷான் புஞ்சிஹேவ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்சில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதால் மீண்டும் பலோவ் ஒன் (Follow on) முறையில் துடுப்பாடிய புனித தோமியர் கல்லூரி வீரர்களை மீண்டும் அபாரமாக செயற்பட்ட கவிந்து எதிவீர மற்றும் முதல் இன்னிங்சில் துடுப்பாட்டத்தில் சிறப்பாட்டத்தை வெளிக்காட்டிய அஷென் கந்தம்பி ஆகியோர் மிரட்ட 51 ஓட்டங்களை மாத்திரமே இரண்டாம் இன்னிங்சில் பெற்ற புனித தோமியர் கல்லூரி இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது.

பந்து வீச்சில் அபாரமாக செயற்பட்டிருந்த எதிரிவீர இம்முறை 4 விக்கெட்டுகளையும், கந்தம்பி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

மஹிந்த கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்) – 292/5d (71.3) – ஷென் கந்தம்பி 75, வினுர துல்ஷார 68, R.H. வெளிஹிந்த 51, லஹிரு தில்ஷான் 2/32

புனித தோமியர் கல்லூரி, மாத்தறை (முதல் இன்னிங்ஸ்) – 137 (56.3) கவிந்து எதிரிவீர 3/48, குஷான் புஞ்சிஹேவ 2/29

புனித தோமியர் கல்லூரி, மாத்தறை (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 51 (27.4)கவிந்து எதிரிவீர 4/13, அஷன் கந்தம்பி 3/14

லும்பினி கல்லூரி எதிர் ஜனாதிபதி கல்லூரி

கோல்ட்ஸ் மைதானத்தில் நிறைவடைந்த இப்போட்டியில், 7 விக்கெட்டுகளால் ஜனாதிபதி கல்லூரி லும்பினி கல்லூரியை வெற்றிகொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பாடிய லும்பினி கல்லூரி வீரர்களுக்கு எதிர்பார்த்த ஆரம்பம் அமைந்திருக்கவில்லை. ஜனாதிபதி கல்லூரியின் பந்து வீச்சாளர்களால் நிலைகுலைந்த லும்பினி கல்லூரி 107 ஓட்டங்களை மாத்திரமே முதல் இன்னிங்சுக்காக குவித்துக் கொண்டது. ஜனாதிபதி கல்லூரியின் சார்பாக பந்து வீச்சில் தனுல சமோத் 3 விக்கெட்டுகளையும் தினித் நெலும்தெனிய மற்றும் றிபாஸ் மவ்ரூஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கு சிறப்பு விருதுகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கு சிறப்பு விருதுகள்

பாகிஸ்தான் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண..

இந்தப் பருவகாலத்திற்கான பாடசாலைகளுக்கு இடையிலான சிங்கர் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியை தோல்வியுடன் ஆரம்பித்திருந்த ஜனாதிபதி கல்லூரி, பதிலுக்கு துடுப்பாடி தமது முதல் இன்னிங்சில் இரங்க ஹஷான் பெற்றுக்கொண்ட அரைச்சதத்துடன் (60) 212 ஓட்டங்களைப்  பெற்றுக்கொண்டது. இதில் லும்பினி கல்லூரி சார்பாக பந்து வீச்சில் கவீன் பீரிஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

இரண்டாம் இன்னிசுக்காக துடுப்பாடிய லும்பினி கல்லூரி அணி எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 152 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். இம்முறை ஜனாதிபதி கல்லூரியின் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட ஹசிந்து பிரமுக்க 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

லும்பினி கல்லூரியின் இரண்டாம் இன்னிங்ஸ் நிறைவினால், வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 48 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுபாடிய ஜனாதிபதி கல்லூரி போட்டியின் வெற்றியாளர்களாக 3 விக்கெட்டுகளை மாத்திரம் பறிகொடுத்து மாறியது. 

போட்டியின் சுருக்கம்

லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 107 (45.3)பூர்ண சந்தருவன் 25, தனுல சமோத் 3/21, தினித் நெலும்தெனிய 2/14, றிபாஸ் மவ்ரூஸ் 2/33

ஜனாதிபதி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 212 (64)இரங்க ஹஷான் 60, றிபாஸ் மவ்ரூஸ் 32, கவீன் பீரிஸ் 5/56

லும்பினி கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 152 (41.1) சத்சார மதுமல் 35, ஹசிந்து ப்ரமுக்க 5/42

ஜனாதிபதி கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்)  – 48/3 (16.4)

புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி எதிர் ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ

கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெற்று முடிந்த இப்போட்டி சமநிலை அடைய புனித சில்வெஸ்டர் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸ் புள்ளிகளால் ஜோசப் வாஸ் கல்லூரியை வெற்றியீட்டிக் கொண்டது.

புனித சில்வெஸ்டர் கல்லூரி அணியினர் நாணய சுழற்சி முடிவுகளின் அமைவாக முதலில் துடுப்பாடியிருந்தனர். M. பவித்ரனின் அரைச்சதத்துடன் 90.1 ஓவர்களில் 214 ஓட்டங்களை முதல் இன்னிங்சுக்காக சில்வெஸ்டர் கல்லூரி வீரர்கள் பெற்றுக்கொண்டனர். ஜோசப் வாஸ் கல்லூரி சார்பாக 9 ஓட்டங்களுக்கு கனிஷ்க நாணயக்கார 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

அடுத்து துடுப்பாடிய ஜோசப் வாஸ் கல்லூரி, சில்வெஸ்டர் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள தடுமாறி 120 ஓட்டங்களை மாத்திரமே தமது முதல் இன்னிங்சுக்காகப் பெற்றது. சில்வெஸ்டர் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் BRAM. பாலசூரிய, K. ஜயசேகர மற்றும் NH. அத்தரகல்ல ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

மீண்டும் தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடிய சில்வெஸ்டர் கல்லூரி 85 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சை நிறைவு செய்து கொண்டது. இந்த இன்னிங்சில் கனிஷ்க நாணயக்கார 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மொத்தமாக ஜோசப் வாஸ் கல்லூரிக்காக மொத்தமாக இந்தப்போட்டியில் 5 விக்கெட்டுகளை சுருட்டியிருந்தார்.

இரண்டாம் இன்னிங்ஸ் மூலம் புனித சில்வெஸ்டர் கல்லூரியினால், வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 180 ஓட்டங்களை பெற பதிலுக்கு துடுப்பாடிய ஜோசப் வாஸ் கல்லூரி போட்டியின் ஆட்ட நேர நிறைவின் போது 5 விக்கெட்டுகளை இழந்து 58 ஓட்டங்களை தமது இரண்டாவது இன்னிங்சுக்காக பெற்றிருந்தனர். இதனால் போட்டி சமநிலை அடைந்தது. 

போட்டியின் சுருக்கம்

புனித சில்வெஸ்டர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 214 (90.1) – M. பவித்ரன் 51, RMMJ. ராஜபக்ஷ 39, கனிஷ்க நாணயக்கார 2/9

ஜோசப் வாஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 120 (43.4) – BRAM. பாலசூரிய 3/13, K. ஜயசேகர 3/22, NH. அத்தரகல்ல 3/37

புனித சில்வெஸ்டர் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 85/9d (36)கனிஷ்க நாணயக்கார 3/20

ஜோசப் வாஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 58/5 (20)

புனித ஜோசப் கல்லூரி, மருதானை எதிர் புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம்

மருதானை ஜோசப் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி முதலில் மருதானை ஜோசப் கல்லூரியை துடுப்பாட பணித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய ஜோசப் கல்லூரி வீரர்களில் ஜோஹன்னே டி சில்வா 62 ஓட்டங்களையும், சசிந்த மஹிந்தசிங்க ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இவர்களின் துடுப்பாட்டத்தினால் உறுதியடைந்த மருதானை புனித ஜோசப் கல்லூரி 63.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 285 ஓட்டங்களைப் பெற்றிருந்த தருணத்தில் தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டது.

புனித பத்திரிசியார் கல்லூரி சார்பாக J. அனோஜன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி வீரர்களுக்கு ஜோசப் கல்லூரியின் அஷான் டேனியல் மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் மிகவும் நெருக்கடி தந்தனர். இதனால் 22.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த புனித பத்திரிசியார் கல்லூரி வெறும் 38 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பந்து வீச்சில் அபாரத்தை வெளிக்காட்டிய அஷான் டேனியல் 6 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், துனித் வெல்லால்கே 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

பத்திரிசியார் கல்லூரியின் முதல் இன்னிங்ஸ் நிறைவுற போட்டியின் முதல் நாள் நேர ஆட்டநேரமும் நிறைவிற்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்)  – 285/8d (63.5) ஜோஹன்னே டி சில்வா 62, சசிந்த மஹிந்தசிங்க 59*, தினால் அனுருத்த 45, J. அனோஜன் 3/68

புனித பத்திரிசியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) -.38 (22.3)ஷான் டேனியல் 5/6, துனித் வல்லகே 4/10

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்