19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – I பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய நாளில் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளது.

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி எதிர் திரித்துவக் கல்லூரி

கண்டி அஸ்கிரிய மைதானத்தில் நிறைவுற்ற இந்தப் போட்டி சமநிலை அடைந்ததுடன், முதல் இன்னிங்ஸ் புள்ளிகள் அடிப்படையில் திரித்துவக் கல்லூரி போட்டியின் வெற்றியாளராக மாறியிருந்தது.

நேற்று தொடங்கியிருந்த இப்போட்டியில் தமது முதல் இன்னிங்சை 120 ஓட்டங்களுக்கு டி.எஸ் சேனநாயக்க கல்லூரி நிறைவு செய்திருந்தது. தொடர்ந்து தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த திரித்துவக் கல்லூரி அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

திரித்துவக் கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரிகள் முன்னிலையில்

பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதிற்கு..

இரண்டாம் நாளான இன்று தமது ஆட்டத்தை தொடர்ந்த திரித்துவக் கல்லூரியினர் ட்ரவொன் பெர்சிவேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெற்றுக்கொண்ட 75 ஓட்டங்களின் துணையுடன் 225 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, தமது முதல் இன்னிங்சை நிறுத்திக் கொண்டனர். இதில் திரித்துவ கல்லூரியில் பறிபோயிருந்த விக்கெட்டுகளில் மூன்றை டி.எஸ் சேனநாயக்க கல்லூரியின் பிமல்ஷ பெரேரா கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த டி.எஸ் சேனநாயக்க கல்லூரியில் முதித லக்‌ஷான் மாத்திரமே சிறப்பாட்டத்தை வெளிக்காட்டி 70 ஓட்டங்களை குவித்திருந்தார். ஏனைய வீரர்கள் மோசமான துடுப்பாட்டத்தை வெளிக்காட்ட டி.எஸ் சேனநாயக்க கல்லூரி 198 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

திரித்துவக் கல்லூரியின் பந்து வீச்சு சார்பாக விமுக்தி நெதுமல் 5 விக்கெட்டுகளை 55 ஓட்டங்களுக்கு கைப்பற்றியிருந்தார்.

டி.எஸ் சேனநாயக்க கல்லூரியின் இரண்டாம் இன்னிங்ஸ் காரணமாக வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 99 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த திரித்துவக் கல்லூரி அணி 31 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை பறிகொடுத்திருந்த நிலையில் இரண்டாம் நாளின் ஆட்ட நேரம் நிறைவடைய போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்)120 (34.4)அயந்த டி சில்வா 43, கவிஷ்க சேனாதீர 6/32

திரித்துவக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 225/8d (50)ட்ரவொன் பெர்சிவேல் 75, ஹசிந்த ஜயசூரிய 63, திசரு தில்ஷான் 33, பிமல்ஷ பெரேரா 3/29

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 198 (64.4)முதித லக்‌ஷான் 70, செனால் சந்திரசேகர 36, விமுக்தி நெதுமல் 5/55

திரித்துவக் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 31/1 (2.3)

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது. திரித்துவக் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி


 புனித ஜோசப் கல்லூரி எதிர் புனித சில்வெஸ்டர் கல்லூரி

மருதானை புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டி சமநிலை அடைந்ததுடன் முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் போட்டியின் வெற்றியாளராக புனித ஜோசப் கல்லூரி தெரிவாகியிருந்தது.

நேற்று ஆரம்பித்த இப்போட்டியில் முதல் இன்னிங்சுக்காக 186 ஓட்டங்களை புனித ஜோசப் கல்லூரி பெற்றுக்கொண்டது. பதிலுக்கு தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்த போது போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

போட்டியின் இரண்டாம் நாளில் தமது முதல் இன்னிங்சைத் தொடர்ந்த புனித சில்வெஸ்டர் கல்லூரி ஜோசப் கல்லூரியின்  லக்‌ஷான் கமகே மற்றும் சலிந்த செனவிரத்ன ஆகியோரின் அபார பந்து வீச்சினால் வெறும் 123 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் லக்‌ஷான் 5 விக்கெட்டுகளையும், சலிந்த 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த புனித ஜோசப் கல்லூரி வீரர்கள் இலங்கையின் கனிஷ்ட அணி வீரர்களான ரெவான் கெல்லி மற்றும் ஜெஹான் டேனியல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்துடன் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று தமது இரண்டாம் இன்னிங்சை நிறுத்தி எதிரணிக்கு வெற்றி இலக்காக 215 ஓட்டங்களை நிர்ணயித்தனர்.

இதனைப்பெற பதிலுக்கு துடுப்பாடிய புனித சில்வெஸ்டர் கல்லூரி போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில் அவர்களின் இரண்டாம் இன்னிங்சுக்காக 6 விக்கெட்டுகளை இழந்து 109 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்ததால் போட்டி சமநிலை அடைந்தது. இந்த இன்னிங்சில் அதிரடிப்பந்து வீச்சினை வெளிக்காட்டிய ஜோசப் கல்லூரியின் விரங்க விக்ரமகே 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்)186 (65.2)சச்சிந்த மஹிந்தசிங்க 58*, ஜெஹான் டேனியல் 54, எரான் குணரத்ன 29, நதீர பாலசூரிய 2/26, உசிந்து நிஸ்ஸங்க 2/42 

புனித சில்வெஸ்டர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 123 (46..1)அவிந்து ஹேரத் 44, மஞ்சித் ராஜபக்ஷ 39, க்‌ஷான் கமகே 5/20, சலிந்த செனவிரத்ன 4/43

புனித ஜோசப் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 151/4d (43)ரெவான் கெல்லி 46, ஜெஹான் டேனியல் 45*, நிம்சார அத்தரக்கல்ல 2/33

புனித சில்வெஸ்டர் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 109/6 (36)அவிந்து ஹேரத் 33, விரங்க விக்ரமகே 4/42

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது. புனித ஜோசப் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி 


டி மெசனொட் கல்லூரி எதிர் குருகுல கல்லூரி

மெசனொட் கல்லூரி மைதானத்தில் நிறைவடைந்த இப்போட்டியில் மூன்று விக்கெட்டுகளால் குருகுல கல்லூரியை டி மெசனொட் கல்லூரி வீழ்த்தியது.

நேற்று ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் தமது முதல் இன்னிங்சை குருகுல கல்லூரியினர் 210 ஓட்டங்களுடன் நிறைவு செய்திருந்தனர். தொடர்ந்து தமது துடுப்பாட்டத்தை தொடங்கிய டி மெசனொட் கல்லூரியினர் தமது முதல் இன்னிங்சுக்காக 90 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை பறிகொடுத்திருந்த போது போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது.

போட்டியின் இரண்டாம் நாளில் சவாலான இலக்கு ஒன்றை எதிர்பார்த்த டி மெசனொட் கல்லூரிக்கு அதிரடி பந்து வீச்சை வெளிக்காட்டி குருகுல கல்லூரி வீரர்கள் அதிர்ச்சியளித்தனர். இதனால் 145 ஓட்டங்களுக்கு தமது அனைத்து விக்கெட்டுகளையும் டி மெசனொட் கல்லூரி வீரர்கள் பறிகொடுத்தனர். இதில் கிரிஷான் சஞ்சுல மெசனொட் கல்லூரி சார்பாக அதிகபட்சமாக 63 ஓட்டங்களை பெற்றிருந்தார். குருகுல கல்லூரியின் பந்து வீச்சில் மலிந்து விதுரங்க 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

திரித்துவக் கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரிகள் முன்னிலையில்

பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதிற்கு..

தொடர்ந்து குருகுல கல்லூரியினர் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்து அபாரமான எதிரணியின் பந்துவீச்சினால் 102 ஓட்டங்களுடன் சுருண்டனர். குருகுல கல்லூரியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக பத்தும் மகேஷ் 36 ஓட்டங்களைப் பெற்றிருக்க, டி மெசனொட் கல்லூரியின் பந்து வீச்சில் திமுத் ஜயக்கொடி 3 விக்கெட்டுகளையும் அசித்த சில்வா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 168 ஓட்டங்களைப் பெற இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த டி மெசனொட் கல்லூரி அணி வெற்றி இலக்கை 38.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து அடைந்தது. இந்த இன்னிங்சிலும் சிறப்பாக செயற்பட்ட டி மெசனொட் கல்லூரி வீரர் கிரிஷான் சஞ்சுல 65 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

ப்ருத்துவி ருசார 4 விக்கெட்டுகளை குருகுல கல்லூரிக்காக கைப்பற்றியிருந்த போதும் அது எதிரணியை வீழ்த்த போதுமாக அமைந்திருக்கவில்லை. 

போட்டியின் சுருக்கம்

குருகுல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்)210 (64.4)மலிந்து விதுரங்க 58, பெத்தும் மகேஷ் 36, பிருத்வி ருசர 32, பிரவீன் நிமேஷ் 25, ரொமால் பெர்னாண்டோ 4/71, மலித் பெர்னாண்டோ 3/23, அசித சில்வா 3/37

 டி மெசனொட் கல்லூரி (முதலாம் இன்னிங்ஸ்) – 145 (41.2)கிரிஷான் சஞ்சுல 63, மலிந்து விதுரங்க 3/38, லசிந்து அரோஷ 2/21, யிஷான் மலித் 2/26

குருகுல கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 102 (38.4) பத்தும் மஹேஷ்  36*, திமுத் ஜயக்கொடி 3/8, அசித்த சில்வா 2//17

டி மெசனொட் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 171/7 (38.2)கிரிஷான் சஞ்சுல 65, சந்துன் தில்ஷான் 37, ப்ருத்துவி ருசார 4/46

முடிவு – டி மெசனொட் கல்லூரி 3 விக்கெட்டுகளால் வெற்றி