பல்லேகலேயில் ட்ரை மழை பொழிந்த திரித்துவக் கல்லூரி

264
TCK vs POW

கண்டி திரித்துவக் கல்லூரி மற்றும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிகளுக்கிடையில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்ட சிங்கர் கிண்ணத்திற்கான ரக்பி போட்டியில், 94-09 என்ற புள்ளிகள் அடிப்படையில் திரித்துவக் கல்லூரி அபாரமாக வென்று, தமது வெற்றி ஓட்டத்தை தொடர்ந்தது.

பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் திரித்துவக் கல்லூரி அணியானது 80 நிமிடங்களிலும் தனது ஆதிக்கத்தை காட்டி வந்தது. இதனால் திரித்துவக் கல்லூரியானது அதிக புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

அமித் குலதுங்கவிடம் இருந்து பந்தை பெற்றுக்கொண்ட கௌரவ செனவிரத்ன, 2ஆவது நிமிடத்தில் ட்ரை வைத்து திரித்துவக் கல்லூரியின் ட்ரை மழையை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஷவீண் ஏக்கநாயக்க மைதானத்தின் நடுவே புகுந்து சென்று இரண்டாவது ட்ரையை வைத்தார்.

ஹசிறு வெளிவட்ட மற்றும் அணுக போயகொட ஆகியோர் 14 மற்றும் 16ஆவது நிமிடங்களில் தொடர்ந்து ட்ரை வைத்து திரித்துவக் கல்லூரி 16 ஆவது நிமிடத்திலேயே போனஸ் புள்ளியை பெற உதவினர். லஷேன் விஜேசூரிய, 4 கொன்வெர்சன்களில் இரண்டை வெற்றிகரமாக உதைத்தார்.

திரித்துவக் கல்லூரியின் வேகமான ஆட்டத்தை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியினால் கட்டுப்படுத்த முடியவில்லை. திரித்துவக் கல்லூரியானது மேலும் 3 ட்ரைகளை முதற் பாதியில் வைத்தது. ஷநெல் மாறலந்த, பசன் சமரவிக்ரம மற்றும் லஷென் விஜேசூரிய ஆகியோர் ட்ரை வைத்தனர். விஜேசூரிய 7 ட்ரைகளில் நான்கு கொன்வெர்சனை வெற்றிகரமாக உதைத்தார்.

திரித்துவக் கல்லூரியின் ஆதிக்கத்தின் மத்தியிலும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியானது பெனால்டி உதையின் மூலம் முதற் பாதியில் 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

முதல் பாதி: திரித்துவக் கல்லூரி 41 – 03 பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி

இரண்டாம் பாதியிலும் முதல் பாதியைப் போன்றே திரித்துவக் கல்லூரி ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாம் பாதி ஆரம்பித்து முதல் நிமிடத்திலேயே ரிசேன் மாதெனவின் சுயநலமில்லாத விளையாட்டின் மூலம் பந்தை பெற்றுக்கொண்ட ஹசிறு வெளிவிட்ட மைதானத்தின் ஓரத்தில் ட்ரை வைத்தார்.

திரித்துவக் கல்லூரி வீரர் கனீஷ அல்விஸ் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட பொழுதும், சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த அல்விஸ் ட்ரை வைத்து அசத்தினார். அத்தோடு மேலும் ஒரு ட்ரை வைக்க உதவியும் புரிந்தார். இம்முறை வர்ரன் வீரகோன் கொன்வெர்சனை வெற்றிகரமாக உதைத்தார்.

திரித்துவக் கல்லூரி மாற்று வீரர்களை களத்தில் இறக்கியது. இதனால் புது வீரர்கள் தமது திறமையை வெளிக்காட்ட சிறிது நேரம் எடுத்தது. திலுக்ஷ தங்கே மேலும் இரண்டு ட்ரை வைத்து அசத்தினார். மேலும் அகித சகலசூரிய, ஷெனால் அபேவர்ண, பெவிஷான் விஜேவிக்ரம மற்றும் ரேஷான் பண்டாரநாயக்க ஆகியோர் திரித்துவக் கல்லூரி சார்பாக ட்ரை வைத்தனர்.

ரேஷன் பண்டாரநாயக்க இரண்டு கொன்வெர்சன்களை வெற்றிகரமாக உதைத்த அதே வேளை, திலுக்ஷ தங்கே 1 கொன்வெர்சனை வெற்றிகரமாக உதைத்தார்.

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியானது ஆறுதலுக்காக இரண்டு பெனால்டி உதைகளின் மூலம் 6 புள்ளிகளை பெற்றுக்கொண்டு, மொத்தமாக 9 புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

முழு நேரம்: திரித்துவக் கல்லூரி 94 – 09 பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி

திரித்துவக் கல்லூரி முதல் சுற்றில் எந்த ஒரு போட்டியிலும் தோல்வியுறாது, இரண்டாவது சுற்றிற்கு முன்னேறுகின்ற ஒரே ஒரு அணியாக காணப்படுகின்றது. பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியானது முதல் சுற்று போட்டிகளில் தோல்வியுற்றாலும்,  இனி ஆரம்பிக்கவிருக்கும் பிளேட் கிண்ணத்தில் அவர்களுக்கு சிறந்த போட்டி காணப்படும்.

ThePapare போட்டியின் சிறந்த வீரர் – நளின் தரங்க (பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி)

புள்ளிகள் பெற்றோர்

திரித்துவக் கல்லூரி

ட்ரை – திலுக்ஷ தங்கே (2), ஹசிறு வெளிவட்ட (2), கௌரவ செனவிரத்ன, ஷவின் ஏக்கநாயக்க, அணுக போயகொட, லஷென் விஜேசூரிய, ஷநெல் மாறலந்த, ரேஷான் பண்டாரநாயக்க, கணேஷ அல்விஸ், வர்ரன் வீரகோன், பசன் சமரவிக்ரம, ஷெனால் அபேவர்ண, அகித சகலசூரிய, பெவிஷான் விஜேவிக்ரம

கொன்வெர்சன் – லஷென் விஜேசூரிய (4), ரேஷான் பண்டாரநாயக்க (2), டிலுக்ஷ தங்கே

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி

பெனால்டி – நளின் தரங்க (3)