ஹபீஸின் விவகாரத்தில் டெய்லருக்கு எதிராக கொந்தளிக்கும் சர்ப்ராஸ்

103
Image Courtesy - cricket.com.au

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர் மொஹமட் ஹபீஸ் பந்துவீசும் முறை குறித்து நியூசிலாந்து அணியின் அனுபவமிக்க வீரரான ரோஸ் டெய்லர் கேள்வி எழுப்பிய விவகாரத்தில் பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ப்ராஸ் அஹமட் தனது அதிருப்தியைத் வெளியிட்டுள்ளார்.

போல்டின் ஹெட்ரிக் சாதனையுடன் பாகிஸ்தானை வீழ்த்தியது நியுஸிலாந்து

பாகிஸ்தான் மற்றும் நியுஸிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு ….

நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டெஸ்ட் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி-20 தொடரை 3-0 என பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.

இந்தநிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் அபுதாபியில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் ட்ரெட் போல்ட்டின் ஹெட்ரிக் சாதனையுடன் நியூசிலாந்து அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 266 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக டெய்லர் 80 ஓட்டங்களைக் குவித்தார்.  

இந்தப் போட்டியின் 18ஆவது ஓவரில் ரோஸ் டெய்லர் 22 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஹபீஸின் பந்தை எதிர்கொண்டார். குறித்த ஓவரில் ஹபீஸ், பந்துவீசும் முறை சரியல்ல என டெய்லர் சைகை மூலம் நடுவரிடம் தெரிவித்தார்.

அவர் முறையற்ற விதத்தில் பந்தை எறிவதுபோல் உள்ளதாக அந்த சைகை இருந்தது. பந்துவீச்சாளர் 15 பாகைக்கு மேல் தனது கைகளை மடக்கக் கூடாது. அவரது பந்துவீச்சு அப்படி இருந்ததாக டெய்லர் நடுவரிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாகப் பேசிய பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ப்ராஸ் அஹமட், டெய்லர் செய்தது தவறு. அப்படி செய்வது அவரது பணியும் கிடையாது. அவரது செயல்பாடு எங்களை அவமானப்படுத்துவது போல் இருந்தது. அவரது வேலை துடுப்பொடுத்தாடுவது மட்டும்தான். அதில் அவர் கவனமாக இருந்தாலே போதுமானது. அவரது செயல் விளையாட்டு வீரருக்கு உகந்ததல்ல என நடுவரிடம் தெரிவித்தேன். அவர் ஒரு தொழில்சார் கிரிக்கெட் வீரர். இரண்டு மூன்று முறை அவர் நடுவரிடம் அவ்வாறு செய்கை மூலம் தெரிவித்தார். அது நடுவரின் பணி. ஹபீஸின் பந்துவீச்சில் எந்தத் தவறும் இல்லை, காரணமே இல்லாமல் டெய்லர் இதை ஒரு பிரச்சினையாக மாற்றிவிட்டார்.

எனவே, ஹபீஸின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவொரு தவறும் இல்லை என நம்புகிறேன். இதற்கு முன் இருந்த முறையற்ற பந்துவீச்சு முறையை அவர் மாற்றிக் கொண்டுள்ளாரே தவிர புதிதாக அவர் எந்தவொரு பிரச்சினையையும் ஏற்படுத்தவில்லை” என்றார்.

வெற்றிக்களிப்புடன் ஹேரத்திற்கு பிரியாவிடை கொடுக்க முடியாமல் போகுமா?

முன்னதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளை மீறி பந்துவீசிய குற்றச்சாட்டில் ஹபீஸ் ஏற்கெனவே கடந்த ஆண்டுகளில் 4 தடவைகள் தடைக்குள்ளானார். சுமார் 14 வருடங்களுக்கு முன், அதாவது பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரில் முதற்தடவையாக போட்டித் தடைக்குள்ளானார். அதன்பிறகு 2014ஆம் ஆண்டு சம்பியன்ஸ் லீக் டி-20 தொடரிலும், அதனைத் தொடர்ந்து 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளிலும் அவர் இவ்வாறு பந்துவீச்சு தடைக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, குறித்த விவகாரம் தொடர்பில் ஐசிசியிடம் பாகிஸ்தான் தரப்பில் போட்டி மத்தியஸ்தரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியிலும் இதேபோல ஒரு சம்பவம் இடம்பெற்றது. சயீட் அஜ்மல் வீசிய தூஸ்ரா பந்து தவறான முறையிலானது என ஷேன் வொட்சன் கள நடுவரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<