தொடர்ந்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவராக சர்பராஸ்

89

பாகிஸ்தான் அணி, நடைபெற்று முடிந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் சிறப்பாக ஜொலிக்காததனை அடுத்து அதன் தலைவர் சர்பராஸ் அஹ்மட் பதவி விலகுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகவும், சிரேஷ்ட தேர்வாளர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் துடுப்பாட்டவீரர் மிஸ்பா உல் ஹக்கின் வேண்டுகோளுக்கு அமைய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவராக சர்பராஸ் அஹ்மட் தொடர்ந்து நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் செல்லும் இலங்கை ஒருநாள் T20 குழாம் அறிவிப்பு

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவிருக்கும் இலங்கை குழாம்களை இலங்கை கிரிக்கெட்…

அதன்படி, இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையில் பாகிஸ்தானின் சொந்த மண்ணில் இடம்பெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களுக்கு பாகிஸ்தான் அணித்தலைவராக சர்பராஸ் அஹமட் இருக்கவுள்ளார். அதேவேளை, இத்தொடர்களின் போது பாகிஸ்தான் அணியின் உப தலைவர் பொறுப்பு இளம் துடுப்பாட்ட வீரரான பாபர் அசாமிற்கு வழங்கப்பட்டுள்ளது. 

அனைத்துவகை போட்டிகளிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவராக 2017ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து செயற்பட்டுவரும் சர்பராஸ் அஹ்மட், இதுவரையில் பாகிஸ்தான் தரப்பினை 13 டெஸ்ட் போட்டிகளிலும், 48 ஒருநாள் போட்டிகளிலும், 34 T20 போட்டிகளிலும் வழிநடாத்தியுள்ளார். அதில், பாகிஸ்தான் அணி 4 டெஸ்ட் வெற்றிகளையும், 26 ஒருநாள் வெற்றிகளையும், 29 T20 வெற்றிகளையும் சுவைத்திருக்கின்றது. அதேநேரம், சர்பராஸ் அஹ்மட் தலைமையில் பாகிஸ்தான் அணி 2017ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றதோடு, T20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அணியாகவும் மாறியிருக்கின்றது.

இவ்வாறான சிறந்த பதிவுகள், உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தனது தரப்பை சிறந்த முறையில் வழிநடாத்தவில்லை என்ற போதிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இனம் கண்ட ஒரு சிறந்த தலைவர்களில் ஒருவராக சர்பராஸ் அஹ்மட் உள்ளார் என்பதற்கு சான்றுகளாக இருக்கின்றன. அத்தோடு இதுவே சர்பராஸ் அஹ்மட் பாகிஸ்தான் அணியின் தலைவராக தொடர்ந்தும் நீடிக்கப்பட பிரதான காரணமாகவும் இருக்கின்றது.

தனது தலைமை பொறுப்பு நீடிக்கப்பட்டது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த சர்பராஸ் அஹ்மட் இவ்வாறு தெரிவித்திருந்தார். 

”எனது அணித்தலைவர் பொறுப்பு நீடிக்கப்பட்ட விடயத்தில் நான் சந்தோஷம் அடைவதோடு அதில் பெருமையாகவும் உள்ளேன். நான் கடந்த காலங்களில் ஒரு மகிழ்ச்சியான அணித்தலைவராக இருந்ததோடு இனிவரும் காலங்களிலும் எனது தலைமைத்துவ பண்புகளை ஏற்கனவே சிறந்த அணித்தலைவர் எனப் பெயர் எடுத்த மிஸ்பா உல் ஹக்கின் புதிய ஆளுகையில் வளர்த்துக்கொள்ள எதிர்பார்க்கின்றேன்.” 

பாகிஸ்தானில் பாதுகாப்பை மீளாய்வு செய்ய அரசின் உதவியை நாடும் இலங்கை கிரிக்கெட் சபை

பாகிஸ்தானுக்கான இலங்கை தேசிய அணியின் திட்டமிடப்பட்டிருக்கும் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பாகிஸ்தானின் பாதுகாப்பு…

”நான் ஏற்கனவே மிஸ்பா உல் ஹக்கின் (தலைமையின்) கீழ் அதிகமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கின்றேன் இதனால், எங்களுக்கு ஒருவரை ஒருவர் நன்கு தெரியும். அதனால், நாங்கள் இருவரும் ஒரு சிறந்த இணைப்பினை உருவாக்க முடியும் என நினைக்கின்றேன்.  மேலும், இது அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தவும் உதவும்.” 

அதேவேளை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான மிஸ்பா உல் ஹக், சர்பராஸ் அஹ்மட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த போது, ”சிறப்பான முடிவுகளை தொடர்ந்து காட்டியதே சர்பராஸ் அஹ்மட்டினை அணித்தலைவராக சிபாரிசு செய்ய பிரதான காரணம், அதுமட்டுமின்றி அவரின் சிறந்த விடயங்களை வெளிக்கொண்டு வருவது ஏனைய விடயமாக இருக்கின்றது. அவர் எனது (தலைமையின் கீழ்) விளையாடியிருப்பதால் அவர் பற்றி ஏனைய கிரிக்கெட் வீரர்களை விட எனக்கு நன்றாக தெரியும். அவர் அணிக்காக எடுத்துக் கொண்டிருக்கும் பொறுப்பினையும் அவர் போட்டிகளில் காட்டும் உற்சாகத்தையும் நான் எப்போதும் ரசிக்கின்றேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

இதேநேரம், இந்த மாத இறுதியில் இலங்கை அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 தொடர்களுக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 19 பேர் அடங்கிய உத்தேச வீரர்கள் குழாம் எதிர்வரும் திங்கட்கிழமை (16) அறிவிக்கப்படவுள்ளதோடு இறுதி வீரர்கள் குழாம் எதிர்வரும் 23 ஆம் அறிவிக்கப்படவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<