சங்காவின் சதத்துடன் முதல் இன்னிங்சில் வலுவடைந்திருக்கும் சர்ரே கழகம்

1178
Sangakkara

இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான போட்டியொன்றில், இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார பெற்றுக்கொண்ட சதத்துடன் சர்ரே (Surrey) அணி யோர்க்ஷையர் (Yorkshire) அணிக்கு எதிராக தமது முதல் இன்னிங்சில் 592 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

டிவிஷன் – I அணிகளான சர்ரே மற்றும் யோர்க்ஷையர் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சர்ரே அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. சர்ரே அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரோரி பர்ன்ஸ் மற்றும் மார்க் ஸ்டோன்மேன் ஆகியோர் உறுதியான அடித்தளம் ஒன்றை வழங்கினர். ஏனெனில் முதல் விக்கெட்டிற்காக 178 ஓட்டங்கள் இவர்களால் இணைப்பாட்டமாக பகிரப்பட்டது.

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக தகுதியான எட்டு கிரிக்கெட் ஆளுமைகள்

இதில் ரோரி பர்ன்ஸ் 75 ஓட்டங்களைக் குவித்து சர்ரே அணியின் முதல் விக்கெட்டாக ஓய்வறை திரும்பினார். அவருக்கு அடுத்தபடியாக மார்க் ஸ்டோன்மேனும் சதமொன்றை கடந்து 131 ஓட்டங்களுடன் ஓய்வறை நோக்கி நடக்க, இன்னுமொரு விக்கெட்டையும் விரைவாக பறிகொடுத்த சர்ரே அணி நல்லதொரு ஆரம்பத்தை பெற்றிருப்பினும் சற்று தடுமாற்றத்தை வெளிக்காட்டியது.

இவ்வாறனதொரு தருணத்தில் களம் நுழைந்திருந்த இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார சர்ரே அணியின் விக்கெட் காப்பாளர் பென் போக்ஸ் உடன் இணைந்து தனது அழகிய துடுப்பாட்டத்தின் மூலம் சரிவுப்பாதை ஒன்றில் விழ இருந்த அணியை மீட்டெடுத்தார்.

இதனால் போட்டியின் முதல் நாள் நிறைவில், சங்காவின் அரைச் சதத்துடன் சர்ரே அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 398 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் இரண்டாம் நாளில், தமது முதல் இன்னிங்சை  மீண்டும் தொடங்கிய சர்ரே அணியில், குமார் சங்கக்கார தனது 63 ஆவது முதல்தர சதத்தை பூர்த்தி செய்தார். இதனால், மேலும் வலுவடைந்த சர்ரே அணி 500 ஓட்டங்களை எட்டியது.  

யோர்க்ஷையர் அணிக்கு மிகவும் நெருக்கடியாக காணப்பட்டிருந்த சங்கக்காரவின் விக்கெட்டை ஜேக் புருக்ஸ் கைப்பற்றியிருந்தார். அடுத்து வந்த ஏனைய துடுப்பாட்ட வீரர்களை ஓய்வறை அனுப்புவது யோர்க்ஷையர் கழக பந்து வீச்சாளர்களுக்கு இலகுவாக காணப்பட 137.2 ஓவர்களில் சர்ரே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 592 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காக குவித்தது.

சர்ரே அணிக்காக அபார சதம் கடந்த குமார் சங்கக்கார 187 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 21 பவுண்டரிகளை விளாசி மொத்தமாக 164 ஓட்டங்களைப் பெற்று தனது திறமையை மீண்டும் வெளிக்காட்டினார். அத்தோடு மறுமுனையில் பென் போக்ஸ் சதம் விளாசி 110 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை கிரிக்கெட் வியூகத்தில் மஹேல, சிதத் வெத்தமுனி, திலின கன்தம்பி

தற்போது நடைபெற்று முடிந்திருக்கும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரிலும் சிறப்பாக செயற்பட்டிருந்த சங்கக்கார இந்த போட்டியிலும் சதம் கடந்ததன் மூலம், இந்தப் பருவகாலத்திற்கான கவுண்டி கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த மூன்று வீரர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்காவின் விக்கெட்டைக் கைப்பற்றிய ஜேக் புருக்ஸ் 5 விக்கெட்டுகளை யோர்க்ஷையர் அணி சார்பாக கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

சர்ரே (முதல் இன்னிங்ஸ்) – 592 (137.2) – குமார் சங்கக்கார 164, மார்க் ஸ்டோன்மேன்  131, பென் போக்ஸ் 110, ஜேக் புருக்ஸ் 113/5, ஸ்டீவன் பெட்டர்சன் 120/3

யோர்க்ஷையர் (முதல் இன்னிங்ஸ்) – 171/1 (51) – ஷோன் மார்ஷ் 77*, டொம் கோஹ்லர் 78