SAG இல் பாலுராஜுக்கு முதல் பதக்கம் : ரனுக மூலம் இலங்கைக்கு முதல் தங்கம்

115

நேபாளத்தின் கத்மண்டுவில் நடைபெற்று வருகின்ற தெற்காசிய விளையாட்டு விழா போட்டிகளின் முதல் நாளான இன்று (02) காலை நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் கராத்தேயில் பங்குகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதன்மூலம் தெற்காசிய விளையாட்டு விழாவில் முதல் பதக்கத்தை வென்ற தமிழ் பேசுகின்ற வீரராக இடம்பிடித்தார்.

இதேநேரம், ஆண்களுக்கான டய்கவொண்டோ போட்டியில் களமிறங்கிய ரனுக பிரபாத் அபாரமாக ஆடி இலங்கைக்கு முதலாவது தங்கப்பதக்கத்தை வென்றுகொடுத்தார்.

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா நேற்று (01) மாலை கத்மண்டுவில் உள்ள தசரத் ரங்கசாலா விளையாட்டரங்கில் கோலாகலமாக ஆரம்பமாகியது.

இந்த நிலையில், தெற்காசிய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று (02) கராத்தே, டய்க்வொண்டோ, பெட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன.

இதில் இலங்கை அணி வீரர்கள் டய்க்வொண்டோவில் 3 தங்கம், 5 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களையும், கராத்தேயில் 2 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களையும், பெட்மிண்டனில் 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று ஒட்டுமொத்தமாக 26 பதக்கங்களை சுவீகரித்தனர். 

பாலுராஜுக்கு வெண்கலம்

இன்று காலை கத்மண்டுவின் சட்டோபட்டோவில் கராத்தே போட்டிகள் ஆரம்கமாகியது. இதில் ஆண்களுக்கான தனிநபர் காடா பிரிவில் பங்குகொண்ட பாலுராஜ் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

குறித்த போட்டியில் நேபாளத்தைச் சேர்ந்த கஜி ஸ்ரேஸ்தா தங்கப் பதக்கத்தையும், பாகிஸ்தானைச் சேர்ந்த நியாமதுல்லாஹ் வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தார்.

இதுஇவ்வாறிருக்க, பெண்களுக்கான தனிநபர் காடா போட்டியில் களமிறங்கிய ஹன்சிகா ஷானி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இதேவேளை, ஆண்களுக்கான காடா குழு நிலைப் போட்டியில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கத்தையும், பெண்களுக்கான காடா குழு நிலைப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டது.

இந்த நிலையில், ஆண்களுக்கான 84 கிலோ கிராம் எடைப் பிரிவு கராத்தேயில் ஆச்சின்கே கபிந்துவும், ஆண்களுக்கான 84 கிலோ கிராம் அதிக எடைப் பிரிவில் சுமேத விமலசிறியும் வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தனர்.

அத்துடன், ஆண்களுக்கான 50 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட கஷ்மியார் ரொசாரிரோ வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொள்ள, பெண்களுக்கான 50 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட தினுஷா குமாரி வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

மேலும், பெண்களுக்கான 45 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட ஆரச்சிகே இஷ;கா வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

ரனுகவுக்கு இரட்டை தங்கம்

இன்று காலை ஆரம்பமாகிய டய்க்வொண்டோ போட்டியில் ஆண்களுக்கான 17 – 23 வயதுப் பிரிவு பும்சே டய்க்வொண்டோவில் களமிறங்கிய ரனுக ப்ரபாத் தங்கப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக முதலாவது தங்கப் பதக்கம் வென்ற வீரராக இடம்பிடித்தார்.

இதே போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இலங்கை தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டது. இதில் ரனுக பிரபாத்துடன், இசுரி சுஹரா போட்டியிட்டு இருந்தார்.

இதேநேரம் 23 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான குழுநிலை பும்சேவில் களமிறங்கிய இலங்கை அணி தங்கப் பதக்கi;த சுவீகரித்தது. 

இதன்படி, முதல் நாளில் இலங்கை வீரர்கள் டய்க்வொண்டோவில் அதிக பதக்கங்களை குவித்தனர். இதில் 3 தங்கம், 5 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தம் 13 பதக்கங்களை டய்க்வொண்டோ அணி அள்ளியது.

தெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா கத்மண்டுவில் இன்று ஆரம்பம்

பெட்மிண்டனில் இரு பதக்கங்கள்

பெக்காராவில் நடைபெற்ற பெட்மின்டண் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழு நிலை போட்டிகளில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கங்களை வெற்றி கொண்டது.

இதன் ஆண்கள் பிரிவில் 3க்கு 1 என்ற செட் கணக்கில் நேபாளத்தையும், பெண்கள் பிரிவில் 3க்கு 0 என்ற நேர் செட் கணக்கில் நேபாள மகளிர் அணியையும் இலங்கை வீழ்த்தியது.

கரப்பந்தாட்டத்தில் வெண்கலம்

இலங்கையின் தேசிய விளையாட்டாகக் கருதப்படும் கரப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்தவில்லை. 

தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வெல்வதற்கான வாய்ப்புகளைத் தவறவிட்ட இலங்கை ஆண்கள் அணி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்களாதேஷ் அணியை 3-1 என்ற செட்கள் அடிப்படையில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

இதேவேளை கரப்பந்தாட்ட பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இலங்கை அணியும் மாலை தீவவுகள் மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் இலங்கை மகளிர் அணி அடுத்தடுத்து மூன்று செட்களையும் வென்று இலகுவில் வெற்றியீட்டி வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தது.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<