SAG மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பிடித்த சப்ரின், சண்முகேஸ்வரன் மற்றும் சபான்

107

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 58 பேர் கொண்ட இலங்கை மெய்வல்லுனர் குழாத்தில் மூன்று தமிழ் பேசும் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

முப்பாய்ச்சல் போட்டிகளின் தேசிய சம்பியனான சப்ரின் அஹமட், 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனான குமார் சண்முகேஸ்வரன் மற்றும் அண்மைக்காலமாக தேசிய மட்ட குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் அசத்தி வருகின்ற மொஹமட் சபான் ஆகிய மூன்று வீரர்களும் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ளனர்

SAG செல்லும் மெய்வல்லுனர்களுக்கு விசேட உடற்தகுதி பரிசோதனை

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் ………

தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான இறுதி தகுதிகாண் போட்டியாக கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் தத்தமது போட்டிப் பிரிவுகளில் வெற்றி பெற்றதன் மூலமே இம்மூன்று வீரர்களும் இந்த வாய்ப்பைப் பெற்றுக் கொண்டனர்

இதன்படி, இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் அதிகளவு பதக்கங்களை வென்றெடுக்கும் நோக்கில் ஒரு போட்டிக்கு தலா 2 வீரர்கள் வீதம் 58 பேர் கொண்ட மெய்வல்லுனர் குழாத்தை இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள மெய்வல்லுனர் குழாத்தில் 34 வீரர்களும், 24 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். அவர்களுள் பெரும்பாலானவர்கள் குறித்த விளையாட்டு விழாவில் முதற்தடவையாக பங்கேற்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதில் இலங்கை மெய்வல்லுனர் ஆண்கள் அணியின் தலைவராக ஈட்டி எறிதல் வீரரான சுமேத ரணசிங்கவும், பெண்கள் அணியின் தலைவியாக 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனான வீராங்கனையான நிமாலி லியனாரச்சியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம், இலங்கை மெய்வல்லுனர் அணியின் முகாமையாளராக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் உப தலைவர் மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே நியமிக்கப்பட்டுள்ளார்.  

இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவின் குவஹாட்டியில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை அணி 9 தங்கம், 11 வெள்ளி மற்றும் 17 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 37 பதக்கங்களை வெற்றி கொண்டது.

இதில் குவஹாட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற ஹிமாஷ ஷான், வினோஜ் சுரஞ்சய டி சில்வா, இந்துனில் ஹேரத், நிமாலி லியனாரச்சி உள்ளிட்ட வீரர்கள் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவிலும் இடம்பிடித்துள்ளமை சிறப்பம்சமாகும்

சப்ரின் அஹமட்

தேசிய மட்டப் போட்டிகளில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில், இலங்கை இராணுவத்துக்காக விளையாடி வருகின்ற வெலிகமையைச் சேர்ந்த சப்ரின் அஹமட், நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ளார்

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் 16.33 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்றதன் மூலமாக அவர் இந்த வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார்

SAG செல்லும் இலங்கை அணியின் தலைமை அதிகாரியாக மேஜர் தம்பத் நியமனம்

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு மற்றும் பொக்கஹரா……….

கடந்த 8 வருடங்களாக தேசிய மட்ட முப்பாய்ச்சல் மற்றும் நீளம் பாய்தல் ஆகிய போட்டிகளில் பங்கேற்று வருகின்ற சப்ரின் அஹமட், இவ்வருட முற்பகுதியில் ஆசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் 16.79 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும் அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற அவர், இம்முறை இராணுவ மெய்வல்லுனரில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.  

இந்த நிலையில், கடந்த மாதம் பதுளையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் பங்குகொண்ட சப்ரின் அஹமட் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்

தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக சப்ரின் அஹமட் தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

முன்னதாக, கடந்த வருடம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் முதல்தடவையாக சப்ரின் அஹமட் தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தார்.

குமார் சண்முகேஸ்வரன்

தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டத்தில் இலங்கை சார்பாக பங்கேற்கும் வாய்ப்பை ஹட்டன் புதுக்காடு பகுதியைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் பெற்றுக் கொண்டார்.

தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான தெரிவுப் போட்டியாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் தொடரில் பலத்த போட்டிக்கு மத்தியில் சண்முகேஸ்வரன் முதலிடத்தைப் பெற்று அடுத்த மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்றுக் கொண்டார்.  

இலங்கையின் மெய்வல்லுனர் அரங்கில் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள சண்முகேஸ்வரன், கடந்த வருடம் மாத்திரம் தேசிய மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் எட்டு தங்கப் பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்திருந்தார்

இதில் தேசிய விளையாட்டு விழா, தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் மற்றும் வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் வென்ற தங்கப் பதக்கங்களும் உள்ளடங்கும்.

முன்னதாக, இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ படைப்பிரிவுகளுக்கிடையிலான அரை மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடத்தையும், ஆசிய மெய்வல்லுனர் போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தையும் பெற்றுக் கொண்ட அவர், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்று அசத்தினார்

இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இராணுவ பீரங்கிப் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற அவர், இறுதியாக, பதுளையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கத்தையும் வெற்றி கொண்டார்.  

மொஹமட் சபான்

ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய கனிஷ் சம்பியனான குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த மொஹமட் சபான், இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை சார்பாக போட்டியிடவுள்ளார்

தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான தெரிவுப் போட்டியாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான 200 மீற்றரில் வெள்ளிப் பதக்கத்தினை வென்றதன் மூலம் இந்த வாய்ப்பை அவர் பெற்றுக் கொண்டார்

கடந்த ஒக்டோபர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்ற உலக முப்படைகள் விளையாட்டு விழாவில் பங்குபற்றியிருந்த சபான், இறுதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் போட்டிகளில் முதல்தடவையாக வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

இராணுவ பீரங்கி படைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மொஹமட் சபான், போட்டித் தூரத்தை 21.48 செக்கன்களில் நிறைவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றார். இராணுவ மெய்வல்லுனர் சார்பாக சபான் வெற்றியீட்டிய முதல் பதக்கம் இதுவாகும்

அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றியிருந்த அவர், ஆண்களுக்கான 200 மீற்றரில் போட்டித் தூரத்தை 21.59 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை மெய்வல்லுனர் குழாம் 

ஆண்கள் 

சுமேத ரணசிங்க (அணித் தலைவர்) ஹிமாஷ ஏஷான், வினோஜ் சுரஞ்சய டி சில்வா, மொஹமட் சபான், அருண தர்ஷன, பி. குணதிலக்க, இந்துனில் ஹேரத், ருசிரு சத்துரங்க, குப்புன் குஷாந்த, சஜீவ லக்மால், எஸ். புஷ்பகுமார, திலிப் ருவன், குமார் சண்முகேஸ்வரன், ரொஷான் டி ரணதுங்க, அசங்க ரத்னசேன, யுபுன் அபேகோன், எஸ். தர்மகீர்த்தி, சமோத் யோதசிங்க, என். ராஜகருனா, திலிப் ருவன், . குணரத்ன, உஷான் திவங்க பெரேரா, அமில ஜயசிறி, ஜி. சம்பத், க்ரேஷன் தனஞ்சய, சமித் பெர்னாண்டோ, பந்துல, எல். தயாரத்ன, எஸ். குமார, தம்மிக அருணசிறி, சானுக சந்தீப 

பெண்கள் 

நிமாலி லியானாரச்சி (அணித் தலைவி), லக்கா சுகந்தி, அமாஷா டி சில்வா, ஷர்மிலா ஜேன், நதீஷா ராமநாயக்க, நதீகா லக்மாலி, மதுஷானி, டில்ஷி குமாரசிங்க, நிலானி ரத்னாயக்க, நிலானி ரத்னாயக்க, ஒமாயா உதயங்கனி, கயன்திகா அபேரத்னஹிருணி விஜேரத்ன, இரேஷானி இராஜசிங்க, துலாஞ்சலி ரணசிங்க, கௌஷல்யா மதுஷhனி, விதூஷா லக்ஷானி, அஞ்சானி புலவங்ஷ, தாரிகா பெர்னாண்டோ, மதுமாலி பெரேரா, சாரங்கி சில்வா, சதீபா ஹெண்டர்சன், உதயங்கனி, சபியா யாமின், ஹசினி பாலசூரிய

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<