தேசிய விளையாட்டு விழா முப்பாய்ச்சலில் மீண்டும் தங்கம் வென்றார் சப்ரின்

106

45 ஆவது தேசிய விளையாட்டு விழா பதுளையில் நேற்று (27) நிறைவுக்கு வந்தது. போட்டிகளின் இறுதி நாளான நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் தென் மாகாணத்தைச் சேர்ந்த சப்ரின் அஹமட் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக சப்ரின் அஹமட் தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

பல முன்னணி வீரர்கள் பங்குபற்றியிருந்த இப்போட்டிக்கு சீரற்ற காலநிலையால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. எனினும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில் ஆரம்பம் முதல் அபாரமாக விளையாடிய சப்ரின் அஹமட், 15.42 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து திறமையை வெளிப்படுத்தியதுடன், தங்கப் பதக்கத்தையும் தனதாக்கினார். 

கடந்த 8 வருடங்களாக தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான முப்பாய்ச்சல் மற்றும் நீளம் பாய்தல் ஆகிய போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்த சப்ரின் அஹமட், கடந்த வருடம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் தான் முதல் தடவையாக தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

இதேநேரம், தனது வெற்றி குறித்து சப்ரின் அஹமட் கருத்து வெளியிடுகையில், தேசிய விளையாட்டு விழாவில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் தங்கப் பதக்கம் வெல்லக் கிடைத்தமை தொடர்பில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 

இந்த வெற்றியைப் பெற்றுக் கொள்ள காரணமாக இருந்த எனது பயிற்சியாளர், இலங்கை இராணுவம் மற்றும் பெற்றோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அத்துடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டுப் விழாவுக்கான பயிற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறேன். நிச்சயமாக, அதில் எனது 100 சதவீத திறமைகளை வெளிப்படுத்தி நாட்டுக்காக தங்கப் பதக்கத்தை வென்று கொடுப்பேன் என அவர் தெரிவித்தார்.

தேசிய மட்டப் போட்டிகளில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இலங்கை இராணுவத்துக்காக விளையாடி வருகின்ற வெலிகமையைச் சேர்ந்த சப்ரின் அஹமட், இறுதியாக, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 16.33 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து முதலிடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பையும் அவர் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக இவ்வருட முற்பகுதியில் ஆசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் 16.79 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட சப்ரின் அஹமட், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுனரில் உஷான், லக்ஷிகா சிறந்த வீரர்களாக தெரிவு

விளையாட்டுத்துறை அமைச்சும்……………..

இதேநேரம், ஆண்களுக்கான முப்பாய்சசல் போட்டியின் முன்னாள் சம்பியனும், 2016 ஆம் மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாக்களில் தொடர்ச்சியாக 2 தடவைகள் தங்கப் பதக்கத்தினை வென்றவருமான சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த சன்ஜய ஜயசிங்க, 2 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். போட்டியில் அவர் 15.32 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்தார்.

இவர் கடந்த வருடம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் 3 ஆவது இடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம், மேல் மாகாணத்தைச் சேர்ந்த WC குமாரசிரி, 15.28 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தினை வெற்றி கொண்டார். 

மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க