றோயல் கல்லூரியின் தலைமை கால்பந்து பயிற்றுவிப்பாளராக மொஹமட் ரூமி

268
Roomy signs with Royal

றோயல் கல்லூரியானது அவர்களது கால்பந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மொஹமட் ரூமியை ஒப்பந்தம் செய்வதற்குரிய வேலைகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருக்கின்றது.

இதன்படி எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு றோயல் கல்லூரியின் கால்பந்து  பயிற்றுவிப்பாளராக ரூமி செயற்படவுள்ளார். ரூமி தனது கடமையை இந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து பொறுப்பேற்றுள்ளார். ரூமியின் கொடுப்பனவுகள் தொடர்பான விடயங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

கிரிக்கெட்டுக்கும், ரக்பிக்கும் பிரபல்யமாக இருந்த பாடசாலைகளான புனித பேதுரு கல்லூரியும், புனித ஜோசப் கல்லூரியும் அண்மைக்காலமாக கால்பந்திலும் சிறப்பாக செயற்பட்டு வருவதை அடுத்தே, இலங்கையின் முதல்தர கால்பந்து பயிற்றுவிப்பளார் ஸாஹிரா கல்லூரியின் (பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து) விலகியதனை அடுத்தே றோயல் கல்லூரியின் பயிற்றுவிப்பாளராக மாறியிருக்கின்றார்.

ரூமி ஸாஹிரா கல்லூரியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு ஒன்றை அடுத்து, றோயல் கல்லூரியுடன் இணையப் போவதாக ThePapare.com செய்தி ஒன்றை இந்த வருட ஆரம்பத்தில் வெளியிட்டிருந்தது.

பயிற்றுவிப்பாளர் ரூமியின் அதிரடி முடிவு

கொழும்பு ஸாஹிரா கல்லூரி கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மொஹமட் ரூமி…

“நான் றோயல் கல்லூரியின் பயிற்றுவிப்பாளராவதில் மிகவும் சந்தோசமடைகின்றேன். றோயல் கல்லூரி சிறந்த பாடசாலையாக இருந்த போதிலும் அவர்களது கால்பந்து விளையாட்டுக்காக அறியப்படாதவர்களாக இருக்கின்றனர், இக்கல்லூரியினால் கடந்த காலங்களில் சில பிரபல்யமான வீரர்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றனர். இதில் நவீன் ஜூட் கடந்த (சம்பியன்ஸ் லீக் தொடரின்) இரண்டு பருவகாலங்களிலும் நல்ல திறமையை வெளிப்படுத்தியிருந்தார்“ என றோயல் கல்லூரியின் புதிய பயிற்றுவிப்பாளர் ThePapare.com இற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

2015 ஆம் ஆண்டு டிவிஷன்-II பாடசாலை அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் கிண்ணியா அல்-அக்ஸா பாடசாலையை வீழ்த்தியிருந்த றோயல் கல்லூரி டிவிஷன் – I கால்பந்து பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டிருந்தது. முதல்தர கால்பந்து பாடசாலையாக மாறிய போதிலும் றோயல் கல்லூரியினால் கடந்த இரண்டு பருவகாலங்களிலும் ஆதிக்கம் செலுத்த முடியாது போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸாஹிரா கல்லூரியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ரூமி விலகும் போது, ஸாஹிரா வீரர்கள் கடந்த பருவகால டிவிஷன் – I தொடரின் நொக் அவுட் சுற்று வரை முன்னேறியிருந்தனர். அதில், கிங்ஸ்வூட் கல்லூரியை வீழ்த்திய ஸாஹிரா கல்லூரியை அரையிறுதியில் நடப்பு சம்பியனான புனித ஜோசப் கல்லூரி தோல்வியடையச் செய்திருந்ததோடு, மூன்றாவது இடத்திற்கான போட்டியில் புனித பேதுரு கல்லூரியிடமும் ஸாஹிரா அணியினர் தோல்வியடைந்திருந்தனர்.

“நான் எப்போதும் சவால்களுக்கு தயராகவே இருக்கின்றேன். றோயல் கல்லூரி இப்போது எனக்கு அந்த சவாலை தந்திருக்கின்றது. நான் இக்கல்லூரியில் இருக்கும் கனிஷ்ட வீரர் தொடக்கம் சிரேஷ்ட வீரர் வரை அடிமட்டத்தில் இருந்து வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். எனக்கு வீரர்களின் ஒழுக்கம் மிகவும் பிரதானமானது, ஏனெனில் ஒரு வீரர் ஒழுக்கத்துடன் இருப்பராயின் அவரிடம் மற்றைய அனைத்தும் சரியான முறையில் பொருந்திக் கொள்ளும்” என ரூமி மேலும் தெரிவித்திருந்தார்.

அறிக்கையொன்றில் றோயல் கல்லூரி அதிபர் B.A. அபேரத்ன, கல்லூரிக்காக சிறந்த கால்பந்து அணியொன்று உருவாக்கப்பட  வேண்டும் எனக் கூறியதோடு அவ்வாறு உருவாக்கப்படுகின்ற அணி ஒழுக்கத்தைப் பேணும் விதமாகவும்  ஏனையோருக்கு முன்னுதாரணமாக விளங்கும் வகையிலும் கால்பந்து விளையாட்டின் தரத்தை மேம்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

சிரேஷ்ட கால்பந்து வீரர்களில் ஒருவரான மொஹமட் ரியாஸ் ரூமியின் வருகை றோயல் கல்லூரியின் கால்பந்து விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என உறுதியாக நம்புவதாக கூறியிருந்ததோடு, ரூமியின் அனுபவமும் அவரது கால்பந்து மீதான ஈர்ப்பும் பாடசாலை அணிக்கு அதிகம் வலுச்சேர்க்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

>> கொழும்பை சம்பியனாக்கிய ரினெளன் முன்னாள் வீரர் பசால்

இலங்கையின் மிகப் பிரபல்யமான கால்பந்து பயிற்றுவிப்பாளரான ரூமியின் ஆளுகையில் ஸாஹிரா கல்லூரி 2010 ஆம் ஆண்டு வந்திருந்தது. அதனையடுத்து இக்கல்லூரி பலதரப்பட்ட கால்பந்து தொடர்களின் சம்பியனாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டிற்கான 19 வயதின் கீழான பாடசாலை அணிகளுக்கான கொத்மலே கிண்ணம், அகில இலங்கை ரீதியிலான பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளின் 2011, 2012, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுக்கான சம்பியன் பட்டங்கள், 19 வயதின் கீழான டிவிஷன்-I பாடசாலை கால்பந்து தொடரின் 2011, 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளின் சம்பியன் பட்டங்கள் அடங்குகின்றன. ரூமியினால் பயிற்சி வழங்கப்பட்ட பல பாடசாலை வீரர்கள் தற்போது தேசிய அணிக்காகவும், உள்ளூர் முதல்தர கால்பந்து கழகங்களுக்காகவும் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை தவிர்ந்து உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான கால்பந்து தொடர்களிலும் ரூமியினால் சாதனை அடைவுகள் பெறப்பட்டிருக்கின்றன. ரூமியின் வழிகாட்டுதலில் இருக்கின்ற கொழும்பு கால்பந்து கழகம் 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான டயலொக் சம்பியன்ஸ் லீக்  தொடர்களில் தொடர்ச்சியாக வெற்றியாளராக மாறியதும், 2015 ஆம் ஆண்டின் FA கிண்ணத் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்றதும் இதற்கு சான்றுகளாகும்.