சதங்களில் சங்கக்காரவின் சாதனையை சமப்படுத்திய ரோஹித் சர்மா

284
©Getty

ஒரே உலகக் கிண்ணத் தொடரில் நான்கு சதங்கள் அடித்து ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார். இதன்படி, ஒரே உலகக் கிண்ணத் தொடரில் 4 சதங்களை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார். 

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான நேற்றைய (02) லீக் போட்டியில் இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா 92 பந்தில் 104 ஓட்டங்களை விளாசி அமர்க்களப்படுத்தினார்

இந்த உலகக் கிண்ணத்தில் ரோஹித் சர்மாவின் 4-வது சதம் இதுவாகும். ஏற்கனவே தென்னாபிரிக்காவுக்கு எதிராக 122 ஓட்டங்களையும் (144 பந்து), பாகிஸ்தானுக்கு எதிராக 140 ஓட்டங்களையும் (113 பந்து), இங்கிலாந்துக்கு எதிராக 102 ஓட்டங்களையும் (109 பந்து) எடுத்திருந்தார்

இதன்மூலம் உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் அதிக சதங்களைக் குவித்த வீரரான இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரவின் (2015ஆம் ஆண்டு உலக கிண்ணத்தில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்திருந்தார்) சாதனையை சமன் செய்தார்.

அத்துடன், இந்த உலகக் கிண்ணத்தில் ரோஹித் சர்மா அரைச் சதம் அல்லது சதம் அடித்திருக்கும் அனைத்து போட்டிகளிலும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் இருக்கும்பொழுது பிடியெடுப்பு வாய்ப்பை கொடுத்திருக்கிறார். அதனை எதிரணி வீரர்கள் தவறவிட்டுள்ளனர். அதன்பிறகு தான் ரோஹித் சர்மா மிகப்பெரிய ஓட்டங்களைக் குவித்திருந்தார்

இதில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், ஜொப்ரா ஆர்ச்சர் பந்தில் ரோஹித் சர்மா 4 ஓட்டங்கள் பெற்றிருந்த போது கொடுத்த பிடியெடுப்பை ஜோ ரூட் தவறவிட்டார். அதன்பிறகு, ரோஹித் சதமடித்து அசத்தினார்.

உலகக்கிண்ண அரையிறுதிக்கு இரண்டாவது அணியாக தெரிவான இந்தியா

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 40……..

இந்த உலகக் கிண்ணத்தில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை தவறவிட்ட தருணங்கள்

  1. தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக ஒரு ஓட்டத்தை பெற்றிருந்த போது பிடியெடுப்பை தவறவிட்டனர். அதே போட்டியில் 122 ஓட்டங்களை எடுத்தார்.
  2. அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக 2 ஓட்டங்களை பெற்றிருந்த போது பிடியெடுப்பை தவறவிட்டனர். அதே போட்டியில் 57 ஓட்டங்களை எடுத்தார்.
  3. இங்கிலாந்துக்கு எதிராக 4 ஓட்டங்களை பெற்றிருந்த போது பிடியெடுப்பை தவறவிட்டனர். அதே போட்டியில் 101 ஓட்டங்களை எடுத்தார்.
  4. பங்களாதேஷ; அணிக்கு எதிராக 9 ஓட்டங்களை பெற்றிருந்த போது பிடியெடுப்பை தவறதவறவிட்டனர். அதில் 104 ஓட்டங்களை எடுத்தார்.

சிக்ஸர்கள் சாதனை

சதம் அடித்த சாதனையுடன் அவர் மற்றொரு சாதனையையும் படைத்திருக்கிறார். இந்தப் போட்டியில் 5 சிக்சர்கள் அடித்த ரோஹித், ஒருநாள் அரங்கில் 230 சிக்ஸர்கள் அடித்து, அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 4ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இதனால் டோனியின் 228 சிக்ஸர்கள் சாதனையை கடந்து, அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்களில் முதலிடம் பிடித்துள்ளார்.

சிக்ஸர்கள் பட்டியல் 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், சஹீட் அப்ரிடி (351 சிக்சர்கள்) முதலிடத்தில் உள்ளார். 2ஆவது இடத்தில் கிறிஸ் கெயில் (326 சிக்சர்கள்), 3ஆவது இடத்தில் சனத் ஜயசூரிய ( 270 சிக்சர்கள்) உள்ளனர். 4ஆவது இடத்தில் ரோஹித் சர்மா (230 சிக்சர்கள்), 5ஆவது இடத்தில் டோனி (228 சிக்சர்கள்) உள்ளனர்.

ரோஹித் சர்மாவை சிறந்த ஒருநாள் வீரராகப் புகழும் கோஹ்லி

பங்களாதேஷ் அணியுடனான போட்டியை ………

அதிக ஓட்டங்கள்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான சதத்தின் மூலம், நடப்பு உலகக் கிண்ணத்தில் 500 ஓட்டங்களை அவர் கடந்தார். இதன்மூலம் ஒரு உலகக் கிண்ணத்தில் 500 ஓட்டங்களுக்கு மேல் அடித்த 2ஆவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 1996 மற்றும் 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் 500 ஓட்டங்களை கடந்து இருந்தார்.

கங்குலியை முந்திய ரோஹித்

இந்திய அளவில் ஒரு உலகக் கிண்ணத்தில் அதிக சதங்கள் அடித்தவராக இதுவரை முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி (2003ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் 3 சதம்) இருந்தார். கங்குலியின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தார்.

44 ஆண்டு கால உலகக் கிண்ண வரலாற்றில் மொத்தத்தில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 6 சதங்களுடன் (44 இன்னிங்ஸ்) முதலிடம் வகிக்கிறார்

இலங்கையின் குமார் சங்கக்கார, அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங், ரோஹித் சர்மா (2015 உலகக் கிண்ணத்தில் ஒரு சதம் அடித்திருந்தார்) ஆகியோர் தலா 5 சதங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.

இணைப்பாட்டங்களை பெறத் தவறியதால் தோற்றோம் மஷ்ரபி

இந்தியாவுடனான போட்டியில் ………

சதங்களில் 6ஆவது இடம்

ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் 26ஆவது சதம் இதுவாகும். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் அடித்த வீர்களின் பட்டியலில் தென்னாபிரிக்காவின் டிவில்லியர்ஸ், இலங்கையின் குமார் சங்கக்கார, மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் ஆகியோருடன் (தலா 25 சதம்) 6ஆவது இடத்தை பகிர்ந்தனர்

ரோஹித் சர்மா இப்போது அவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு தனியாக 6ஆவது இடத்தில் உள்ளார். முதல் 5 இடங்களில் சச்சின் டெண்டுல்கர் (49 சதம்), விராட் கோஹ்லி (41), ரிக்கி பொண்டிங் (30), சனத் ஜயசூரிய (28), ஹசிம் அம்லா (27) ஆகியோர் உள்ளனர்.

ஹெட்ரிக் சதம்

பங்களாதேஷ் அணிக்கு எதிராக ரோஹித் சர்மா ஹெட்ரிக் சதம் அடித்தார். கடந்த 2015 உலகக் கிண்ணத்தில் 137 ஓட்டங்களையும், 2017 சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் 123 ஓட்டங்களையும் குவித்த அவர், நேற்றைய போட்டியில் 104 ஓட்டங்களைக் குவித்தார்

ஹெட்ரிக் விருது

உலகக் கிண்ணத் தொடரில் மூன்றாவது தடவையாக ஆட்டநாயகன் விருதை ரோஹித் சர்மா வென்றார். இதன்படி, உலகக் கிண்ணத்தில் அதிக தடவைகள் ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தை சச்சின் டெண்டுல்கருடன் (2003) பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் யுவராஜ் சிங் (2011) உள்ளார்

1000 ஓட்டங்கள்

நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா 4 ஓட்டங்களையும், விராத் கோஹ்லி 7 ஓட்டங்களையும் எடுத்த போது இவ்வருடத்தில் 1000 ஓட்டங்களைக் கடந்த 3ஆவது மற்றும் 4ஆவது வீரர்களாக இடம்பெற்றனர். இதில் ரோஹித் 20 போட்டிகளில் 1100 ஓட்டங்களையும், கோஹ்லி 18 போட்டிகளில் 1019 ஓட்டங்களையும் குவித்தனர்

அத்துடன், ஒரு வருடத்தில் ஒருநாள் அரங்கில் அதிகமுறை 1000 ஓட்டங்களைக் கடந்த சச்சினின் சாதனையையும் கோஹ்லி சமன் செய்தார். இதற்கு முன்னர் சச்சின் 7ஆவது தடவைகள் இந்த பதிவை மேற்கொண்டிருந்தார். 

6 ஆவது தடவை

.சி.சி நடாத்தும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் (2013,2017), டி-20 உலகக் கிண்ணம் (2016,2016), உலகக் கிண்ணம் (2015,2019), தொடர்களில் தொடர்ச்சியாக ஆறாவது தடவையாக இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது

இதேநேரம், உலகக் கிண்ணத்தில் இந்திய அணி ஏழாவது தடவையாக அரையிறுதிக்கு முன்னேறியது. இதற்குமுன் 1983 (சம்பியன்), 1987, 1996, 2003, 2011 மற்றும் 2015 ஆகிய வருடங்களில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இதில் 1983, 2003 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன், 1983 மற்றும் 2011இல் சம்பியனாகத் தெரிவாகியது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<