களனிய கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக் 2016 சுபர் 8 சுற்றின் 5ஆம் வாரத்தின் முதலாவது போட்டியில் விமானப்படை விளையாட்டுக் கழகத்தினை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி நான்காவது தொடர் வெற்றியை பதிவு செய்தது ரினௌன் விளையாட்டுக் கழகம்.

நான்கு வாரங்கள் முடிவடைந்த நிலையில் ரினௌன் விளையாட்டுக் கழகம் 9 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் காணப்பட்டது. அவ்வணி இறுதியாக சொலிட் அணியை 4-0 எனத் துவம்சம் செய்தது.

சுப்பர் 8 சுற்றின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது கடற்படை அணி

நடைபெற்று வரும் டயலொக் சம்பியன்ஸ் லீக் சுற்றுத் தொடரின் சுப்பர் 8 சுற்றின் நான்காவது வாரப் போட்டியில்…

மறுமுனையில் விமானப்படை விளையாட்டுக் கழகம் சுபர் 8 சுற்றில் இதுவரை ஒரு வெற்றியையேனும் பதிவு  செய்யவில்லை. மேலும் இறுதியாக கடற்படை அணியிடம் 1-0 என தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற போட்டியின் ஆரம்ப கட்டங்களை விமானப்படை விளையாட்டுக் கழகம் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.  வழமைக்கு மாறாக ரினௌன் அணியினர் தமது பாதிக்குள் முடக்கப்பட்டிருந்தனர்.

பல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் விமானப்படை முன்கள வீரர்களால் கோல் ஒன்றினைப் பெற முடியவில்லை. குறிப்பாக 20ஆவது நிமிடத்தில் விமானப்படையின் நிபுண பண்டாரவிற்கு அருமையான வாய்ப்பு கிடைக்கப்பெற, ரினௌன் அணியின் கோல் காப்பாளர் மொஹமட் உஸ்மான் அதனை சிறப்பாகத் தடுத்தார்.

போட்டியின் 35ஆவது நிமிடத்தில் ரினௌன் அணிக்கு வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. ஜொப் மைக்கலுக்கு கிடைத்த வாய்ப்பை அவர் தவறவிட்டாலும் பந்து மொஹமட் பஸாலின் கால்களுக்குச் செல்ல அவர் அதனை கோலாக்கினார்.

தவறான நடவடிக்கை காரணமாக ரினௌன் அணியின் பஸுல் ரஹ்மான் மற்றும் விமானப்படை அணியின் ஹர்ஷ பெர்னாண்டோ ஆகியோருக்கு மஞ்சள் அட்டைகள் வழங்கப்பட்டன.

முதல் பாதி முடிவடையும் தறுவாயில் பெனால்டி பகுதிக்கு வெளியே நின்று லாவகமாக கொலொன்றை அடித்து அணியை இரண்டு கோல்களினால் முன்னிலையடையச் செய்தார் ஜொப் மைக்கல்.

முதல் பாதி: ரினௌன் விளையாட்டுக் கழகம் 02 – 00 விமானப்படை விளையாட்டுக் கழகம்

முதலாவது பாதியைப் போன்றே இரண்டாவது பாதியிலும் விமானப்படை அணியே சிறப்பான ஆரம்பத்தை ஏற்படுத்தியது.

முதல் பத்து நிமிடங்களுக்குள் அருமையான மூன்று வாய்ப்புகள் கிடைக்கப்பெற்ற போதிலும் விமானப்படை அணியின் கெலும் பெரேரா, நுவன் வெல்கமகே மற்றும் நிபுண பண்டார ஆகிய மூவரும் கோல் அடிக்கத் தவறினர்.

சொலிட் அணியை வீழ்த்தி வெற்றியை சுவைத்தது ரினௌன் : தொடரும் சொலிடின் சோகம்

களனிய கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக் 2016 இன் சுபர் 8 சுற்றின் நான்காம் வாரத்தின் இரண்டாவது போட்டியில் சொலிட் விளையாட்டுக் கழகத்தை 4-0 என தோற்கடித்து..

ரினௌன் விளையாட்டுக் கழகம் இரண்டாவது பாதியை ஆறுதலாக ஆரம்பித்தாலும் மெதுவாக போட்டியில் தமது ஆதிக்கத்தை உருவாக்கத் தொடங்கியது.

எனினும் விடாது போராடிய விமானப்படை அணி கொலொன்றினை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டது.

ரினௌன் விளையாட்டுக் கழகத்தின் களத் தடுப்பாளர்கள் ஒரு சில இடங்களில் தமது பணியை சரியாகச் செய்யத் தவறியபோதும் கோல் காப்பாளர் மொஹமட் உஸ்மானின் அபார ஆட்டத்தினால் அணி எதிரணியின் கோல்களில் இருந்து காப்பாற்றப்பட்டது.

குறிப்பாக தமக்கான வாய்ப்புகளை விமானப்படை வீரர்கள் ஒழுங்கான முறையில் பயன்படுத்தாததால் அவர்களுக்கான மிகவும் சிறந்த பல வாய்ப்புகள் வீணாகின.

இரண்டாம் பாதியின் நடுவில் ஆட்டம் சூடு பிடிக்க, வீரர்கள் சிலர் தவறான முறையில் பிற அணி வீரர்களை வீழ்த்தியதனால் அதிகமான மஞ்சள் அட்டைகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியில் மொத்தமாக 6 மஞ்சள் அட்டைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் இறுதி நேரங்களில் பல முயற்சிகளை விமானப்படை அணி மேற்கொண்டாலும் அவர்களால் கோல் அடிக்க முடியாமல் போனது.

ரினௌன் விளையாட்டுக் கழகம் முதல் பாதியில் அடித்த இரு கோள்களின் உதவியுடன் வெற்றியினை பதிவு செய்து, புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

முழு நேரம்: ரினௌன் விளையாட்டுக் கழகம் 02 – 00 விமானப்படை விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் சிறப்பாட்டக்காரர் மொஹமட் உஸ்மான் (ரினௌன் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

ரினௌன் விளையாட்டுக் கழகம் மொஹமட் பஸால் 35′, ஜொப் மைக்கல் 45′

மஞ்சள் அட்டை

ரினௌன் விளையாட்டுக் கழகம் பஸுல் ரஹ்மான் 34′, திமுது பிரியதர்ஷன 50′, மொஹமட் உஸ்மான் 79′, ஹக்கீம் காமில் 83′

விமானப்படை விளையாட்டுக் கழகம் ஹர்ஷ பெர்னாண்டோ 36′, கவிந்து இஷான் 72′