ரெட்புல் பல்கலைக்கழக உலகக் கிண்ணத்தினைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா

682

நடப்புச் சம்பியனான இலங்கை அணியை வீழ்த்தி 2௦17ம் ஆண்டுக்கான  ரெட்புல் பல்கலைக்கழக உலகக் கிண்ணத்தினை தென்னாபிரிக்க அணி கைப்பற்றியது.  

ரெட்புல் பல்கலைக்கழக உலகக் கிண்ணத் தொடரின் இறுதிபோட்டி இன்று காலை 1௦.3௦ மணிக்கு காலி சர்வதேச கிரிகெட் மைதானத்தில் ஆரம்பமானது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை இலங்கை அணிக்கு வழங்கியது. இதன்படி ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியாக விமலதர்ம மற்றும் சரத்சந்திர ஆகியோர் களம் இறங்கினர். போட்டியின் முதலாவது ஓவரிலேயே விமலதர்ம LBW முறையில் விய்ங்கார்ட்யினால் ஆட்டமிழக்கச் செய்யப்பட எவ்வித ஓட்டமும் பெறாமல் ஓய்வறை திரும்பினார் விமலதர்ம.

எனினும் அடுத்து களம் புகுந்த விக்ரமநாயக்க சரத்சந்திரவுடன் இணைந்து நிதானமாக ஆட இலங்கை அணி 5 ஓவர்கள் நிறைவில் 39 ஓட்டங்களைப் பெற்றது. 6 வது ஓவரின் 2 வது பந்தில் சிறப்பாக ஆடி வந்த விக்கிரமநாயக்கவும் அடுத்து களம் வந்த லியனகே அதே ஓவரின் 5 வது பந்து வீச்சிலும் ஆட்டமிழக்க இலங்கை அணி தடுமாற ஆரம்பித்தது.

அடுத்து ஆடுகளம் வந்த ஜயதிலக்கவும் சற்று நிதானமாக ஆட எத்தனித்த போதும் 8 வது ஓவரின் 5 வது பந்து வீச்சில் அவரும் ஆட்டமிழக்க இலங்கை அணியின் நிலை மிக மோசமாகியது.

களத்தில் நம்பிக்கை தரும் விதத்தில் ஆடிவந்த சரத்சந்திரவும் 9வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழக்க இலங்கை அணி 1௦ ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 59 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து துடுப்பாட்டத்தில் சொதப்பிய இலங்கை அணி டயில்லின் மெதிவ்சின் பந்து வீச்சின் அடுத்தடுத்த பந்துகளில் சில்வா மற்றும் லியனாராச்சி ஆட்டமிழக்க 11 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 7௦ ஓட்டங்களைப் பெற்றது.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 1௦௦ ஓட்டங்களைத் தாண்டுமா என கேள்வி எழும்பிய நிலையில் சாமிக்க கருணாரத்ன பெற்ற 29 ஓட்டங்களுடன் இலங்கை அணி 118 ஓட்டங்களைப் பெற்றது. எனினும் 18வது ஓவரில் சாமிக்க போல்ட் முறையில் ஆட்டமிழக்க ஏனைய வீர்களும் மறுமுனையில் ஆட்டமிழந்தனர்.

எனவே இலங்கை அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இலங்கை அணி சார்பில் அதிக பட்சமகா சாமிக்க 26 பந்துகளுக்கு முகம் கொடுத்து 29 ஓட்டங்களைப் பெற்றதுடன் சரத்சந்திர 23 பந்துகளில் 24 ஓட்டங்களையும், விக்ரமநாயக 16 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் முன்கள வீரர்கள் பலர் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தமை இலங்கை அணியின் பின்னடைவுக்கு காரணாமாகும்.

பந்து வீச்சில் ஜே சௌட்டர் 4 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற டயில்லன் மெதிவ்ஸ் 4 ஓவர்கள் பந்து வீசி 22 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். விங்கார்ட், லீ ரௌக்ஸ் மற்றும் துரௌவ் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

மிக இலகுவான வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடக் களம் இறங்கிய தென்னாபிரிக்க அணி தொடரில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவரான ஜெரமி மாலன் ஆட்டமிழக்காது பெற்ற 64 ஓட்டங்களுடன் 15.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து மிக இலகுவாக வெற்றியடைந்தது.

தென்னாபிரிக்க அணி சார்பில் மாலன் 7 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 47 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பெற்றார். இது தவிர அகேர்மன் 18 பந்துகளில் 2 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஓட்டத்துடன் 23 ஓட்டங்க்களைப் பெற்று ஆட்டமிழந்த அதேவேளை, ஹாஸ்ப்ரோக் ஆட்டமிழக்காது 17 பந்துகளில் 2௦ ஓட்டங்க்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் ஜயவிக்கிரம 4 ஓவர்கள் பந்து வீசி 31 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய அதேவேளை, விமலதர்ம 3.2 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக 4 ஓவர்கள் வீசி 16 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய ஜூலியன் சௌட்டர் தெரிவுசெய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை –   121/1௦ (2௦)  சாமிக்க 29, சரத்சந்திர 24, விக்ரமநாயக 21.   சௌட்டர் 3/16, மெத்திவ்ஸ் 3/22

தென்னாபிரிக்கா – 122/3 (15.2) மாலன் 64*, அகேர்மன் 23, ஹாஸ்ப்ரோக் 2௦*.   ஜயவிக்கிரம 2/31,  விமலதர்ம 1/16       

போட்டி முடிவு: தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி