ரெட் புல் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை வெற்றியுடன் ஆரம்பித்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்

516

ரெட் புல் அனுசரணையில் 7 ஆவது தடவையாக உலகின் சிறந்த பல்கலைக் கழக அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் இறுதிக்கட்ட போட்டிகள் இன்று (23) ஆரம்பமானது. இறுதி கட்ட போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜிம்பாப்வே மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய ஆறு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் பங்குபற்றுகின்றன.

இலங்கையில் நடைபெறும் இறுதிக்கட்ட போட்டிகளில் இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்கலைக்கழக அணிகள் வெற்றி பெற்றிருந்தன.

வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து பிரகாசிக்கும் சதீர

இந்தியா எதிர் பங்களாதேஷ்

இன்றைய (23) முதல் நாள் போட்டியில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி SSC மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஓம்கார் கட்பே அதிக பட்சமாக ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 61 ஓட்டங்களையும் முர்டாசா சபிர் 35 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக அரீபுர் ரஹ்மான் 24 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளையும் ஏனைய நான்கு பந்து வீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட் வீதமும் வீழ்ததியிருந்தனர்.

182 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டு 26 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. பங்களாதேஷ் அணி சார்பாக இன்சமாம் உல் ஹக் 24 ஓட்டங்களையும் சாபித் ஹொஸைன் 20 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக ரொஹான் டம்லே 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் சுப்ஹம் டைஸ்வால் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.


இலங்கை எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்

NCC மைதானத்தில் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் இலங்கை அணியும் ஐக்கிய அரபு இராச்சிய அணியும் மோதியிருந்தது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்பபை ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு வழங்கியிருந்தது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவ்வணி 19.1 ஓவர்களில் 95 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தனர். ஐக்கிய அரபு இராச்சிய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் மூன்று வீரர்களைத் தவிர ஏனைய வீரர்கள் 10 ஓட்டங்களுக்கு குறைந்த ஓட்டங்களுடனே ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக ஜனித் லியனகே 6 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கோஷான் தனுஷ்க 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

96 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மதுஷான் ரவிச்சந்திரகுமாரின் அதிரடி ஆட்டத்தின் மூலம் 9.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை சுவைத்தனர். மதுஷான் ரவிச்சந்திரகுமார் 25 பந்துகளில் 44 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். போட்டியின் ஆட்ட நாயகனாக ஜனித் லியனகே தெரிவு செய்யப்பட்டார்.


பாகிஸ்தான் எதிர் ஜிம்பாப்வே

SSC மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இன்றைய மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 92 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை 183 ஓட்டங்களை குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அப்துர் ரஹ்மான் 53 ஓட்டங்களையும் அர்ஸலான் பர்ஸான்ட் 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் ஜிம்பாப்வே அணி சார்பாக ஐந்து பந்து வீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

இந்திய மகளிர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஜெனிமாஹ் ரொட்ரிகஸ்

வெற்றி இலக்காக 184 ஓட்டங்களைப் பெற வேண்டும் என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி 18.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 91 ஓட்டங்களைப் பெற்று 92 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. ஜிம்பாப்வே அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அனேலெ கெவென்யா ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களும் சடெக் ஜூலு 24 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்றுக் கொண்டதோடு ஏனைய வீரர்கள் அனைவரும் 10 இற்கும் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக மஹ்மூத் அலி நான்கு விக்கெட்டுகளையும் முஹம்மத் அஸாத் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இத்தொடரின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை (23) நடைபெறவுள்ளது. நாளைய போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் SSC மைதானத்தில் மோதவுள்ள அதே நேரத்தில் பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் NCC மைதானத்தில் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன. மூன்றாவது போட்டியாக பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் மோதவுள்ளன.

>>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<<