112ஆவது வடக்கின் பெரும் சமரில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்

997

இலங்கையில் இடம்பெறும் பாடசாலைகளுக்கு இடையிலான பெரும் சமர் போட்டிகளில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையில் இம்முறை இடம்பெற்ற 112ஆவது வடக்கின் பெரும் சமர் பல சாதனைப் பதிவுகளுடன் நிறைவுக்கு வந்தது.

கடந்த 8ஆம், 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டி, வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் விறுவிறுப்பின்மூலம் விருந்து படைத்த ஒரு போட்டியாக அமைந்தது.

கபில்ராஜின் போராட்டம் வீண்; திரில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த 112ஆவது…

மூன்று நாட்களைக் கொண்ட இந்தப் போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளில், போட்டி நிறைவடைவதற்கு 9 பந்துகள் மீதமிருந்த நிலையில், யாழ் மத்திய கல்லூரி அணியினர் ஒரு விக்கெட்டினால் வெற்றி பெற்று, வடக்கின் பெரும் சமரில் தமது 28ஆவது வெற்றியைப் பதிவு செய்தனர்.  

இறுதி நிமிடம் வரை யார் வெற்றி பெறுவார் என்று நம்ப முடியாமல் இருந்த இந்தப் போட்டியில் இரு தரப்பில் இருந்தும் சிறந்த ஆட்டம் காண்பிக்கப்பட, இதுவரை பதியப்படாத சில சாதனைப் பதிவுகள் நிகழ்த்தப்பட்டதுடன் மேலும் சில சாதனைகளும் சமப்படுத்தப்பட்டன.

கபில்ராஜின் தொடர்ச்சியான 10 விக்கெட்டுக்கள்  

சென் ஜோன்ஸ் கல்லூரி அணியின் வேகப்பந்து வீச்சாளர் கனகரத்தினம் கபில்ராஜ் கடந்த முறை பெரும் சமரில் தனது அணி இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கு பந்து வீச்சில் மிகப் பெரிய அளவில் பங்காற்றியவர்.

இம்முறை போட்டியில் 10 விக்கெட்டுகளைப் பெற்ற சென் ஜோன்ஸ் வீரர் கபில்ராஜ்

கடந்த முறை மோதலில், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்களும் என பெற்ற 10 விக்கெட்டுக்கள் யாழ் மத்தி அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரும் நெருக்கடியாக இருந்தது.

அதே அச்சுறுத்தலையே கபில்ராஜ் இந்த வருடமும் எதிரணிக்கு வழங்கினார். இம்முறை அசத்துவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர், தன்னை நம்பி இருந்த எவரையும் ஏமாற்றாமல் இரு இன்னிங்ஸ்களிலும் தலா ஐந்து விக்கெட்டுக்களைப் பெற்று போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுக்களைப் பெற்றார். முதல் இன்னிங்ஸில் 95 ஓட்டங்களை எதிரணி வீரர்களுக்கு வழங்கிய அவர், தீர்மானம் மிக்க இரண்டாவது இன்னிங்ஸில் 45 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்தமை சிறப்பம்சமாகும்.

Fan Photos: St. John’s College vs Jaffna Central College | 112th Battle of the North – Day 3

Photo of St. John’s College vs Jaffna Central College | 112th Battle of the North.

எனவே, வடக்கின் பெரும் சமரில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் 10 விக்கெட்டுக்களைப் பெற்ற இரண்டாவது வீரராக கபில் தன்னைப் பதிவு செய்தார். இதற்கு முன்னர் இந்த சாதனையை யாழ் மத்திய கல்லூரியின் முன்னாள் வீரர் V.S ரத்தினம் மாத்திரமே தன்வசம் கொண்டிருந்தார். அவர் 1908ஆம் மற்றும் 1909ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 10 விக்கெட்டுக்களைப் பெற்றிருந்தமையே சாதனைப் பதிவாக இருந்தது.  

மதுசனின் 2 அரைச் சதங்கள்

யாழ் மத்திய கல்லூரிக்காக சகலதுறையிலும் சிறப்பித்த செல்வராசா மதுசன் இம்முறை போட்டியின் ஆட்ட நாயகனாகத் தெரிவானார். குறிப்பாக இரண்டு இன்னிங்ஸிலும் துடுப்பாட்டத்தில் இவர் வழங்கிய பங்கு அணிக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

முதல் இன்னிங்ஸில் யாழ் மத்திய அணி 127 ஓட்டங்களுக்கு தனது மூன்றாவது விக்கெட்டை இழந்த நிலையில் களம் புகுந்த மதுசன், தனது அதிரடி வான வேடிக்கை மூலம் மைதானத்தில் இருந்த அனைவரையும் வியப்படையச் செய்தார். வெறும் 35 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகளுடன் அரைச் சதம் கடந்த அவர் 37 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

அதேபோன்று, இரண்டாவது இன்னிங்ஸில் 109 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய மத்திய கல்லூரி வீரர்களுக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக இருந்தது. வெறும் 20 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் தமது முதல் 3 விக்கெட்டுக்களையும் இழந்த அவ்வணிக்கு, 5ஆம் இலக்கத்தில் களமிறங்கிய மதுசன் தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார்.

காலிறுதிக்குள் நுழைந்தது யாழ் மத்திய கல்லூரி அணி

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு..

முதல் இன்னிங்ஸில் அபாரம் காண்பித்த இவர், இரண்டாவது இன்னிங்ஸிலும் அவ்வாறான ஒரு ஆட்டத்திற்கே முயற்சிப்பார் என பலராலும் நம்பப்பட்டது. எனினும், நிலைமையைப் புரிந்து விளையாடிய அவர் 77 பந்துகளுக்கு முகம்கொடுத்து 8 பௌண்டரிகளுடன் 53 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை அணியின் 7ஆவது விக்கெட்டாக வீழ்த்தப்பட்டார்.

இரண்டு இன்னிங்ஸிலும் அரைச் சதம் கடந்த யாழ் மத்திய கல்லூரி வீரர் S. மதுசன்

இவர் இரண்டு இன்னிங்ஸிலும் பெற்ற அரைச் சதமானது, இதுவரை இடம்பெற்றுள்ள 112 வடக்கின் பெரும் சமர் போட்டிகளில் நான்காவது முறையாக ஒரு வீரரால் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பெறப்பட்ட அரைச் சதமாகப் பதிவாகியது.

இதற்கு முன்னர், யாழ் மத்திய கல்லூரி வீரர்களான W. தம்பையா (75, 65) 1939ஆம் அண்டிலும், R மஹிந்த (75, 79) 1983ஆம் ஆண்டும், இறுதியாக K ஷெல்டன் (78, 76) 2009ஆம் ஆண்டும் ஒரே போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைச் சதம் பெறப்பட்டிருந்தது.

இதன்படி, யாழ் மத்திய கல்லூரியின் வீரர்கள் நால்வரே இந்த பெரும் மோதலில் ஒரே போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைச் சதம் கடந்த சாதனைப் பதிவை கொண்டுள்ளனர்.  

அதிக அரைச் சதங்கள் பெறப்பட்ட போட்டி

இம்முறை போட்டியில் இரு அணி வீரர்களாலும் மொத்தம் 7 அரைச் சதங்கள் பெறப்பட்டிருந்தன. இதில் யாழ் மத்திய கல்லூரி வீரர்களால் 4 அரைச் சதங்களும், சென் ஜோன்ஸ் வீரர்களால் 3 அரைச் சதங்களும் பெறப்பட்டன.

இது வடக்கின் பெரும் சமர் வரலாற்றில் ஒரு போட்டியில் பெறப்பட்ட அதிக அரைச் சதங்களாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் 1956ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியில் இரு அணியினராலும் தலா 3 அரைச் சதங்கள் என மொத்தம் 6 அரைச் சதங்கள் பெறப்பட்டமையே சாதனையாக இருந்தது.

  • D. செரோபன்

இம்முறை பெறப்பட்ட அரைச் சதங்கள்

D. செரோபன் – 65 (சென் ஜோன்ஸ்) – முதல் இன்னிங்ஸ்
A. ஜயதர்சன் – 77 (யாழ் மத்தி.) – முதல் இன்னிங்ஸ்
S. மதுசன் – 52 (யாழ் மத்தி.) – முதல் இன்னிங்ஸ்
R ராஜ்கிளின்ரன் – 54 * (யாழ் மத்தி.) – முதல் இன்னிங்ஸ்
V யதுசன் – 50 (சென் ஜோன்ஸ்) – இரண்டாம் இன்னிங்ஸ்
K. கபில்ராஜ் – 50 (சென் ஜோன்ஸ்) – இரண்டாம் இன்னிங்ஸ்
S. மதுசன் – 52 (யாழ் மத்தி.) – இரண்டாம் இன்னிங்ஸ்

 

Photos: Jaffna Central College vs St. John’s College | 112th Battle of the North – Day 3

Photos of the Third day’s action of 112th Battle of the North..

9ஆவது முறையான 300+ ஓட்டங்கள்

ஆட்டத்தின் நாணய சுழற்சியை வெற்றி கொண்ட யாழ் மத்தியின் தலைவர் சிவலிங்கம் தசோபன் முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தார். அதன்படி முதலில் ஆடிய சென் ஜோன்ஸ் வீரர்கள் தமது முதல் இன்னிங்சிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றனர்.  

பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ் மத்திய கல்லூரி அணியினர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 328 ஓட்டங்களைப் பெற்றனர். மத்தி வீரர்களின் இந்த ஓட்ட எண்ணிக்கையானது, வடக்கின் பெரும் சமரில் ஒரு இன்னிங்ஸில் 300 அல்லது அதனை விட அதிக ஓட்டங்கள் பெறப்பட்ட ஒன்பதாவது தடவையாகப் பதிவாகியிருந்தது.

அதேபோன்றே, இந்த மொத்த ஓட்ட எண்ணிக்கை வடக்கின் பெரும் சமர் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸிற்காகப் பெறப்பட்ட மூன்றாவது அதிக ஓட்டங்களாகவும் உள்ளது. யாழ் மத்திய கல்லூரி 1993ஆம் ஆண்டு பெற்ற 354 ஓட்டங்களும், 1992ஆம் ஆண்டு பெற்ற 344 ஓட்டங்களுமே இப்பட்டியலில் முதல் இரு இடங்களிலும் உள்ள பதிவுகளாகும்.

எனவே, ஒரு இன்னிங்ஸில் பெறப்பட்ட அதிகமான ஓட்ட எண்ணிக்கையில் முதல் 3 இடங்களிலும் யாழ் மத்திய கல்லூரியின் பதிவே இருக்கின்றன.

வடக்கின் பெரும் சமர் வரலாற்றில் பெறப்பட்ட மொத்த ஓட்டங்கள்  

இந்த தனிப்பட்ட சாதனைகள், அணியின் சாதனைகள் அனைத்திற்கும் மேலாக இம்முறை போட்டியில் விளையாடிய இரு அணியினராலும் சேர்ந்து ஒரு சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதுவரை வடக்கின் பெரும் சமரின் ஒரு போட்டியில் இரண்டு அணிகளாலும் பெறப்பட்ட மொத்த ஓட்ட எண்ணிக்கையாக 2009ஆம் ஆண்டு பெறப்பட்ட 799 ஓட்டங்களே பதிவாகியிருந்தது.

35 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறாத ஜிம்பாப்வே

ஐக்கிய அரபு இராச்சியத்திடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த ஜிம்பாப்வே அணி அடுத்த …

எனினும், இம்முறை அந்த சாதனை முறியடிக்கப்பட்டு, இரு அணிகளும் இணைந்து மொத்தமாக 874 ஓட்டங்களைப் பெற்றன. இதில் சென் ஜோன்ஸ் கல்லூரி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 219 ஓட்டங்களையும் பெற்றது. ஆட்டத்தை வெற்றி கொண்ட மத்திய கல்லூரி வீரர்கள் முதல் இன்னிங்ஸில் 328 ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை, இரண்டாம் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றனர்.

எனவே, மொத்த ஓட்ட எண்ணிக்கைக்காக பதியப்பட்டிருந்த பழைய சாதனை 9 வருடங்களின் பின்னர் தற்பொழுது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பல சாதனைகள் முறியடிக்கப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க போட்டியாகவே இம்முறை இடம்பெற்ற 112ஆவது வடக்கின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டி அமைந்திருந்தது.

வீரர்களின் திறமைகளின் வெளிப்பாட்டின்மூலம் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனைகளானது வடக்கின் கிரிக்கெட் மிகப் பெரிய ஒரு வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது என்பதையே எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

குறிப்பு – பதிவாகியுள்ள தகவல்களுக்கு அமைவாகவே இந்த ஆக்கத்தில் உள்ள தகவல்களும் உள்ளன.