ரியல் மெட்ரிடுடன் இணைந்தார் செல்சி நட்சத்திரம் ஹசார்ட்

162

பெல்ஜிம் நட்சத்திர வீரர் ஈடன் ஹசார்ட் நீண்ட காலம் காத்திருந்தது போன்று செல்சி அணியில் இருந்து ரியல் மெட்ரிட்டுக்கு ஒப்பந்தமாகியுள்ளார். இது ஸ்பெயின் கழக வரலாற்றில் அதிக விலை கொண்ட ஒப்பந்தமாக மாற வாய்ப்பு உள்ளது.

28 வயதான ஹசார்ட் ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தமாகி இருப்பதாக ரியல் மெட்ரிட் குறிப்பிட்டுள்ளது. இதன்படி 2024 ஜுன் 30 ஆம் திகதி வரை ரியல் மெட்ரிட்டுடன் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

ப்ரீமியர் லீக் கழகமான செல்சியுடனான அவரது ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முடிவடைய இருந்த நிலையில் அவரை தக்கவைத்துக் கொள்ள அந்தக் கழகம் பேரம்பேசி வந்தது. இந்நிலையில் அவர் பூர்வாங்கமாக 100 மில்லியன் யூரோவுக்கும் (113 மில்லியன் டொலர்) அதனுடன் மேலும் 45 மில்லியன் யூரோக்கள் இணைக்கப்பட வாய்ப்புக் கொண்டதுமாக ரியல் மெட்ரிட்டுடன் இணைவதாக செய்தி வெளியாகியுள்ளது.

மக்காவு அணிக்கு பதில்கொடுக்க தயாராகும் இலங்கை கால்பந்து அணி

இது டொட்டன்ஹாமில் இருந்து கரேத் பேல்லை பெறுவதற்கு ரியல் மெட்ரிட் செலவிட்ட 101 மில்லியன் யூரோ மற்றும் மன்செஸ்டர் யுனைடட்டில் இருந்து கிறிஸ்டியானோ டொனால்டொவை 91 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்ததை விஞ்சுவதாக உள்ளது.    

இந்நிலையில் சனிக்கிழமை கசகஸ்தான் அணிக்கு எதிராகவும் செவ்வாய்க்கிழமை ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராகவும் பெல்ஜியம் அணியின் 2020 யூரோ கிண்ண தகுதிகாண் போட்டியில் பங்கேற்ற பின் ஹசார்ட் அடுத்த வாரம் ரியல் மெட்ரிட் அணியுடன் அதன் சண்டியாகோ பெர்னாபே அரங்கில் தோன்றவுள்ளார்.

ரியல் மெட்ரிட் பின்கள வீரர் எடர் மிலிடோ மற்றும் முன்கள வீரர் லூகா ஜோவிக் ஆகியோரை முறையே போர்டோ மற்றும் எயின்ட்ரச் பிரான்க்பேர்ட் கழகங்களிடம் வாங்கியதன் தொடர்ச்சியாகவே ஹசார்ட்டின் வருகை உள்ளது.

எனினும் ஸ்பெயினின் பலம்மிக்க கழகமான ரியெல் மெட்ரிட்டை மீண்டும் கட்டி எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பயிற்சியாளர் சினடின் சிடேனின் முயற்சியில் ஹசார்ட்டின் வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த பருவத்தில் அந்த அணியில் இருந்து ரொனால்டோ ஜுவாண்டஸ் அணிக்கு தாவியதற்கு சிறந்த மாற்றாக இது உள்ளது.  

ரொனால்டோவின் வெளியேற்றத்திற்குப் பின் தடுமாற்றம் கண்ட ரியல் மெட்ரிட் லா லிகாவில் கோல்கள் பெற போராடிய நிலையில் 19 புள்ளிகளுடன் பார்சிலோனாவுக்கு பின்தங்கியதோடு ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கில் கடைசி 16 அணிகள் சுற்றில் அயாக்ஸிடம் (Ajax) தோல்வியை சந்தித்து வெளியேறியது.

2012 இல் லில்லி அணியில் இருந்து செல்சியில் இணைந்த ஹசார்ட் அந்தக் கழகத்திற்காக இதுவரை 352 போட்டிகளில் 110 கோல்களை பெற்றுள்ளார். கடந்த வாரம் ஐரோப்பிய லீக் கிண்ணத்தை செல்சி வெல்வதற்கு இரட்டை கோல் புகுத்தி இருந்தார்.  

“செல்சியில் இருந்து வெளியேற எடுத்த முடிவு எனது கால்பந்து வாழ்வில் கடினமானதாக இருந்தது” என்று ஹசார்ட் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<