அதிர்சித் தோல்விகளால் பயிற்சியாளரை நீக்கியது ரியல் மெட்ரிட்

321

ரியல் மெட்ரிட் கால்பந்து கழகத்தின் பயிற்சியாளர் ஜூலன் லோபெட்டிகுய் அந்தக் கழகத்திற்கான தனது முதல் பருவத்தின் மூன்றாவது மாதத்திலேயே பதவி நீக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய சம்பியனான ரியெல் மெட்ரிட் ஸ்பெயினின் தனது பலம்மிக்க போட்டி அணியான பார்சிலோனாவிடம் வார இறுதியில் தோல்வியை சந்தித்த நிலையிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

சிடானின் இடத்திற்கு ஸ்பெயின் தேசிய அணியின் பயிற்சியாளரை இணைக்கும் ரியெல் மெட்ரிட்

ஸ்பெயின் தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளர் ….

கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி எஸ்பான்யோல் அணியை வீழ்த்தியது தொடக்கம் ரியல் மெட்ரிட் லா லிகா தொடரில் வெற்றி ஒன்றை பெற தவறியுள்ளது. அந்த அணி செவில்லா, அலவெஸ், லெவான்டே அணிகளிடம் தால்வியை சந்தித்தது. அட்லடிகோ மெட்ரிட் அணியுடனான போட்டியை சமநிலை செய்த ரியல் மெட்ரிட் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற பார்சிலோனாவுடனான போட்டியில் 5-1 என்ற கோல் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

தலைமைப் பயிற்றுவிப்பாளரின் அதிரடி நீக்கத்தையடுத்து, முன்னாள் வீரரும் மேலதிக பயிற்சியாளருமான சன்டியாகோ சொலாரி ரியல் மெட்ரிட்டின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

‘ரியல் மெட்ரிட் (இயக்குனர்) சபை இன்று (29) கூடியதோடு, கழகத்துடனான ஜூலன் லோபெட்டிகுய்யின் ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டது’ என்று அந்தக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இப்போது வரை கிடைத்த முடிவுகள் படி…. ரியல் மெட்ரிட் குழாத்திற்கு இடையில் அபரிமிதமான வேறுபாடுகள் இருப்பதாக சபை உணர்கிறது’ என்றும் கூறப்பட்டுள்ளது.

ரியெல் மெட்ரிட்டுக்கு வெற்றிகள் தேடிக்கொடுத்த சிடான் திடீர் ராஜினாமா

ரியெல் மெட்ரிட் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் …..

இதன்படி லோபெட்டிகுய் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டு பணிகளை இழந்துள்ளார். இதற்கு முன்னர் ஸ்பெயின் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக இருந்த அவர் கடந்த ஜுன் மாதம் உலகக் கிண்ணம் ஆரம்பிக்க ஒரு தினம் இருக்கும்போது, தான் ரியல் மெட்ரிட் அணிக்கு செல்லும் அறிவிப்பை வெளியிட்டு ஸ்பெயின் அணியின் உலகக் கிண்ண ஏற்பாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தினார். இதனை அடுத்து அவர் அதிரடியாக அந்த பதவியில் இருந்த நீக்கப்பட்டார்.   

சினேடின் சிடேனுக்குப் பதிலாகவே 52 வயதான லோபெட்டிகுய் ரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். மூன்று முறை தொடர்ச்சியாக சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்று கொடுத்த பின்னரே கடந்த மே மாதம் ரியல் மெட்ரிட் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகும் அறிவிப்பை முன்னாள் பிரான்ஸ் அணி வீரரான சிடேன் வெளியிட்டார்.

ரியல் மெட்ரிட்டில் அதிக கோல் பெற்ற வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த ஜூலையில் ஜுவண்டஸ் அணிக்கு சென்ற பின்னர், லோபெட்டிகுய்வுக்கு கடினமான ஆரம்பம் ஒன்றே கிடைத்தது. அந்த அணி UEFA சுப்பர் கிண்ணத்தில் தனது நகரின் போட்டி அணியான அட்லடிகோ மெட்ரிட்டினால் 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து.    

எனினும், அவரின் பயிற்சியின் கீழ் லா லிகாவின் நான்கு ஆரம்ப போட்டிகளிலும் ரியல் மெட்ரிட் வெற்றிகளை அள்ளியது. அதேபோன்று சம்பியன்ஸ் லீக்கின் தனது ஆரம்பப் போட்டியிலும் ரியல் மெட்ரிட் AS ரோமா அணியை 3-0 என வென்றது.     

எனினும், கடந்த மாதம் செவில்லாவிடம் 3-0 என தோல்வியை சந்தித்தது தொடக்கம் ரியல் மெட்ரிட்டின் வீழ்ச்சி ஆரம்பமானது. அது தொடக்கம் அனைத்து போட்டித் தொடர்களிலும் அந்த அணி ஆடி ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியை சந்தித்தது. இந்தக் காலத்தில் ரியல் மெட்ரிட் எட்டு மணித்தியாலங்களில் எந்த ஒரு கோலையும் போட தவறியுள்ளது.   

லோபெட்டிகுய் பொறுப்பாக இருந்த நிலையில் 10 லா லிகா போட்டிகளில் ஆடிய ரியல் மெட்ரிட் நான்கு போட்டிகளில் வெற்றி, இரண்டு சமநிலை மற்றும் நான்கு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  

ஸ்பெயின் கால்பந்து சம்மேளன விதிகளின்படி நிரந்த பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க கழகங்களுக்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது. இந்நிலையில் 2000 மற்றும் 2005 க்கு இடைப்பட்ட காலத்தில் ரியல் மெட்ரிட் அணிக்காக ஆடிய ஆர்ஜன்டீனாவின் சொலாரி அவ்வணிக்கு அடுத்து வரும் நான்கு போட்டிகளுக்கு பயிற்சியாளராக இருக்க வாய்ப்பு உள்ளது.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<