இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் பிரிவு 2 அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டித் தொடரின் முதல்கட்ட அரையிறுதிப் போட்டியில் சொந்த மண்ணில் களம் கண்ட குருநகர் பாடும்மீன் அணியை, பலமான பின்களம் துணை புரிய 2-0 என்ற கோல்கள் கணக்கில் கொழும்பு ரட்னம் விளையாட்டுக் கழகம் வீழ்த்தியுள்ளது.

நேற்று யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கில் பெருந்தொகையான யாழ். ரசிகர்கள் முன்னிலையில் மின்விளக்கு வெளிச்சத்தின் கீழ் இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பமாகியது.

போட்டியின் முன்கள வீரர்களின் சிறந்த பந்துப் பரிமாற்றம் மூலம் பாடும்மீன் அணி ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த வேளையில், முறையற்ற விதத்தில் ஆடியமைக்காக ரட்னம் அணியின் ஷினேடு ஜோனிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

நேர்த்தியாகப் பந்தைப் பரிமாறிக்கொண்டிருந்த பாடும்மீன் அணி வீரர்களுக்கு, போட்டியில் முன்னிலை பெறுவதற்கு பெனால்டி உதைக்கான வாய்பொன்று கிடைத்தது. எனினும் அவர்களது அந்த சிறந்த வாய்ப்பை முறியடிக்கும் விதத்தில் ரட்னம் அணியின் கோல் காப்பாளர் அதனை தடுத்தார்.

Photos: Ratnam SC v Singing Fish SC – Premier League Div II – SF (1st Leg)

ரட்னம் எதிர் பாடும்மீன் இடையிலான போட்டியின் புகைப்படங்கள்

பாடும்மீன் அணியினர் பந்துப் பரிமாற்றத்தில் விட்ட தவறின் காரணமாகப் பந்தைப் பெற்ற ரட்னம் அணியினர், பாடும்மீனின் கோல்பரப்பை ஆக்கிரமிக்க முற்பட்டவேளை, முறையற்ற விதத்தில் ஆடிய பாடும்மீனின் பிராங்கோவிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்தும் பாடும்மீன் ஆதிக்கம் செலுத்திய போதும், அணியின் முன்கள வீரர்கள் கோல் கம்பத்தினுள் பந்தை உதையத் தவறியமை அவர்களது கோல் வாய்ப்புக்கான சந்தர்ப்பத்தை இழக்கச் செய்தது.

அதேவேளை, அவர்கள் நுட்பமாக கோல்பெற முயற்சித்த போதும் ரட்னம் அணியின் தலைவரும் கோல் காப்பாளருமான சேகான் அதனை லாவகமாகத் தடுத்தார். ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில் பாடும்மீனின் கிறிஸ்ரியனிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் வேகமாக பாடும்மீனின் கோல் எல்லையை ஆக்கிரமித்த ரட்னம் அணியின் தியாகோ, 33ஆவது நிமிடத்தில் கோல் பெற்றுக்கொடுக்க, அவ்வணி 1-0 என முன்னிலை பெற்றது. இந்தமுறை பாடும்மீன் அணியினரின் பந்துப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட தவரே தியாகோவிற்கு பந்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது.

அதுவே முதல் பாதியின் ஒரே கோலாகவும் இருந்தது.

முதல் பாதி : ரட்னம் விளையாட்டுக் கழகம் 01 – 00 பாடும்மீன் விளையாட்டுக் கழகம்

மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பமாகிய இரண்டாவது பாதியின் ஆரம்பம் முதலே இரு அணியினரும் கோலினைப் பெற முயற்சித்த போதும், அவற்றை பின்கள வீரர்கள் லாவகமாய்த் தடுத்தனர். ஆட்டத்தின் 51ஆவது நிமிடத்தில் பாடும்மீனின் மயூரனிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இரண்டாவது பாதியில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த ஆரம்பித்த ரட்னம் அணிக்கு, 70ஆவது நிமிடத்தில் முன்னேறி வந்த ஆகில் பாடும்மீனின் கோல்காப்பாளரை ஏமாற்றி, அழகான ஒரு கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

பின்னர் 72ஆவது நிமிடத்தில் முறையற்ற விதத்தில் ஆடிய பாடும்மீனின் ஞானபிரதாப்பிற்கும், ரட்னமின் சதீஸ் குமாரிற்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.  

யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத் தொடரில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி சம்பியன்

யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தினர் E.S.பேரம்பலம் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடத்திய 2016ஆம் ஆண்டுக்கான கரப்பந்தாட்டத் தொடரில்.

ஆட்டத்தின் 80ஆது நிமிடத்தில் இரசிகர்கள் சிறு கற்களால் ரட்னம் அணியின் மேலதிக வீரர்களைத் தாக்கியமையால் போட்டி சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் விளையாட்டுத்துறைக்கு ஆரோக்கியமில்லை என்பதாலும், யாழ் மண்ணின் விருந்தோம்பலிற்கு இழுக்காக அமைவதனாலும் இவை தவிர்க்கப்பாட வேண்டும் என்பதே விளையாட்டை விரும்பும் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

தொடர்ந்தும் வேகமாக ஆடிய பாடும்மீன் வீரர்கள் தமது அணிக்கான முதலாவது கோலைப் பெற முயற்சித்த போதும் கொழும்பு தரப்பினரின் பின்கள விரர்கள் அந்த வாய்ப்புகளை லாவகமாய்த் தடுத்தனர்.

எனவே, முழுமையான போட்டி நேர நிறைவில் குருநகர் பாடும்மீனின் சொந்த மண்ணில் அவர்களை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியது ரட்னம் விளையாட்டுக் கழகம்.

இதன் அடுத்த கட்டப்போட்டி ரட்னம் விளையாட்டுக் கழகத்தின் மைதானத்தில், அதாவது கொழும்பில் விரைவில் இடம்பெறவுள்ளது.

முழு நேரம் : ரட்னம் விளையாட்டுக் கழகம் 02 – 00 பாடும்மீன் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள் :

ரட்னம் விளையாட்டுக் கழகம் : கேட்ரி திய்யாகு 32’, ஆகில் 70’

மஞ்சள் அட்டைகள்

ரட்னம் விளையாட்டுக் கழகம் – ஷினேடு ஜோன் 6’, சதீஸ் குமார் 72′

பாடும்மீன் விளையாட்டுக் கழகம் – பிராங்கோ 11′, கிறிஸ்ரியன் 28′, மயூரன் 51′, ஞானபிரதாப் 72’


கிரேட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் எதிர் கெலிஓய கால்பந்து கழகம்

இத்தொடரின் மற்றொரு அரையிறுதிப் போட்டியாக கிரேட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் மற்றும் கெலிஓய கால்பந்து கழகங்கள் தமது முதல் கட்டப் போட்டிகளில் மோதின.

கிரேட் ஸ்டார் அணியின் சொந்த மைதானமான பென்தொட காமினி மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் கெலிஓய கால்பந்து கழகம் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் எந்த அணியினரும் கோல்களைப் பெறாத நிலையில் முதல்பாதி நிறைவடைந்துள்ளது. பின்னர் இரண்டாவது பாதியில் சுமார் 10 நிமிடங்கள் கடந்த நிலையில் கெலிஓய அணியினருக்கு பெனால்டி வாய்பொன்று கிடைக்க, அவர்கள் அதனை கோலாக மாற்றியுள்ளனர்.

அதன் பின்னர் இப்போட்டியில் மேலதிகமாக எந்தவித கோல்களும் பெறப்படவில்லை.

முழு நேரம்: கிரேட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் 00 – 01 கெலிஓய கால்பந்து கழகம்

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட அரையிறுதிப் போட்டி, கெலிஓய விளையாட்டுக் கழகத்தின் சொந்த மைதானத்தில் இடம்பெறும்.