இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து ஜாம்பவானான முத்தையா முரளிதரன் ஓய்வுபெற்ற பிறகு இலங்கை அணியின் துரும்புச் சீட்டாக 2010ஆம் ஆண்டிலிருந்து பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற ரங்கன ஹேரத், டெஸ்ட் அரங்கில் இலங்கை அணி அண்மைக்காலமாக சுழற்பந்து வீச்சினால் பெற்ற ஒருசில வெற்றிகளின் முக்கிய வீரராக விளங்குகின்றார்.

கிரிக்கெட் உலகின் பிறப்பிடமாக விளங்குகின்ற இங்கிலாந்து அணியை பின்தள்ளி ஆசிய நாடுகள் கிரிக்கெட் உலகில் நாளுக்குநாள் சாதனை படைத்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இலங்கை கிரிக்கெட் அணி 1996 உலகக் கிண்ணம், 2014 T-20 உலகக் கிண்ணம் ஆகியவற்றைக் கைப்பற்றி உலகின் முன்னிலை அணியாக வலம் வந்தது.

அந்த வகையில், கடந்த காலங்களில் இலங்கை அணி பல நட்சத்திர வீரர்களை கிரிக்கெட் உலகிற்கு பெற்றுக்கொடுத்ததுடன், அவர்களில் ஒரு சிலர் உலக சாதனைகளும் படைத்திருந்தனர். இவர்களுள் முத்தையா முரளிதரன், சனத் ஜயசூரியா, மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார போன்ற வீரர்களின் சாதனைகள் இன்று வரை கிரிக்கெட் முறியடிக்காமல் நிலைத்திருக்கின்றன. இந்நிலையில், இந்த வீரர்களின் பட்டியலில் அண்மைக்காலமாக பல சாதனைகளை படைத்துவருகின்ற 39 வயதான சுழற்பந்து வீச்சாளராக ரங்கன ஹேரத்தைப் பற்றியும் அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

ரங்கன ஹேரத் குறித்த உலக பிரபலங்களின் ஒரு பார்வை

அண்மைய நாட்களில் எப்போதும் தோல்விகளையே பார்த்து துவண்டு போன…

இந்நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத்தின் அபார பந்து வீச்சினால் இலங்கை அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இப்போட்டியில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய உலகின் முதலாவது இடதுகை சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்ததுடன், இலங்கை அணி சார்பாக முத்தையா முரளிதரனுக்குப் பிறகு 400 டெஸ்ட் விக்கெட்டுக்கள் என்ற மைல்கல்லை எட்டிய 2ஆவது வீரராகவும் இடம்பிடித்தார்.

விளையாட்டு உலகில் வீரரொருவர் சாதனை படைப்பது சாதாரண விடயம் எனினும் 35 வயதை தாண்டியும் சாதனை படைப்பது என்பது அபூர்வமான ஒரு விடயம்.  அவ்வாறான ஒரு அந்தஸ்தையே ரங்கன ஹேரத் தற்பொழுது பெற்றுள்ளார்.

பாகிஸ்தானுடனான தொடர் ஆரம்பமாவதற்கு முன் டெஸ்ட் போட்டிகளில் 389 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அதிகளவு டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரர்களுக்கான பட்டியலில் தென்னாபிரிக்காவின் மக்காயா நிட்டினியை முந்தி 14ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட ஹேரத், 400 விக்கெட்டுக்களைக் கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் களமிறங்கியிருந்தார்.

எனினும், துடுப்பாட்டம் மற்றும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக விளங்கிய அபுதாபி மைதானம், போட்டியின் 2ஆவது நாளிலிருந்து சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் சாதகமான ஆடுகளமாக மாறியது. இதனை சரியான முறையில் கையாண்ட ஹேரத், முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

அத்துடன் இப்போட்டியின் இறுதி விக்கெட்டாக பாகிஸ்தான் அணியின் மொஹமட் அப்பாஸை ஆட்டமிழக்கச் செய்த ஹேரத், 400ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றி, இம்மைல்கல்லை எட்டிய உலகின் 14ஆவது வீரராகவும், உலகின் 5ஆவது சுழற்பந்து வீச்சாளராகவும் இடம்பிடித்தார். முரளிதரன் 400 விக்கெட்டுக்கள் மைல்கல்கல்லை 72 டெஸ்ட் போட்டிகளிலும், றிச்சர்ட் ஹேட்லி மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் 80 போட்டிகளிலும் இம்மைல்கல்லை எட்டியுள்ளனர்.

குறைந்த போட்டிகளில் 400 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரர்கள்

வீரர்கள்போட்டிகள்
முத்தையா முரளிதரன்72
றிச்சர்ட் ஹேட்லி      80
டேல் ஸ்டெய்ன்80
ரங்கன ஹேரத்84
அனில் கும்ப்ளே85

அதிலும் குறிப்பாக இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 32ஆவது 5 விக்கெட் பெறுதியைப் பதிவுசெய்த ஹேரத், 2ஆவது இன்னிங்ஸில் மேலும் 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி டெஸ்ட் அரங்கில் தனது 9ஆவது 10 விக்கெட் பெறுதியைப் பதிவு செய்திருந்தார். இதன்மூலம், இந்தியாவின் அனில் கும்ப்ளேயின் சாதனையை முறியடித்த ஹேரத், றிச்சர்ட் ஹேட்லியின் சாதனையை சமப்படுத்தினார். மேலும் ஹேரத்தைவிட அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன்(10), இலங்கையின் முத்தையா முரளிதரன்(22), ஆகியோரே டெஸ்ட் போட்டிகளில் அதிக 10 விக்கெட் பெறுதியைப் பெற்றுக்கொண்ட வீரர்களாக இடம்பிடித்திருந்தனர்.

அதிகளவு 5 விக்கெட்டுக்களைப் பதிவு செய்துள்ளோர்

வீரர்கள்போட்டிகள்5 விக்கெட்
முத்தையா முரளிதரன் 1992 – 201013367
ஷேன் வோர்ன்
1992 – 2010
14537
றிச்சர்ட் ஹேட்லி
1973 – 1990
8636
அனில் கும்ப்ளே
1990 – 2008
13235
ரங்கன ஹேரத்
1999 – 2017
8433

அதிகளவு 10 விக்கெட்டுக்கள் பெறுமதி

வீரர்கள்போட்டிகள்10 விக்கெட்
முத்தையா முரளிதரன் 1992 – 201013322
ஷேன் வோர்ன்
1992 – 2010
14510
றிச்சர்ட் ஹேட்லி    
1973 – 1990
869
ஹேரத்
 1999 – 2017
849
அனில் கும்ப்ளே
  1990 – 2008
1328

 

இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முதல் முறையாக களமிறங்கிய சங்கா, மஹேல

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சரியான நேரத்தில் ஓய்வு பெறுவதாக…

மேலும், பாகிஸ்தான் அணிக்கெதிராக 100 டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற புதிய சாதனையையும் ஹேரத் படைத்தார். எனவே, இந்தியாவின் கபில்தேவ் பாகிஸ்தான் அணிக்கெதிராக அதிக விக்கெட்டுக்கள் (99 விக்கெட்டுக்கள்) கைப்பற்றியிருந்த சாதனையையும் ஹேரத் முறியடித்தார்.

முன்னதாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிராக 23 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி ஹேரத் உலக சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் 127 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி டெஸ்ட் அரங்கில் தனது சிறந்த பந்து வீச்சையும் ஹேரத் பதிவு செய்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக அதிகளவு விக்கெட்டுக்கள்

வீரர்கள்போட்டிகள்விக்கெட்
ரங்கன ஹேரத்  
1999 – 2017
20101
கபில் தேவ்   
1978 – 1994
2999
ஷேன் வோர்ன்  
1992 – 2010
1590
அனில் கும்ப்ளே  
1990 – 2008
1581

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் சுமார் 80 வருடங்களுக்குப் பிறகு அதிகூடிய வயதில் 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரராக இடம்பிடித்த ஹேரத், 35 வயதிற்குப் பிறகு அதிகளவு விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரராகவும் மாறினார்.

35 வயதிற்குப் பிறகு அதிகளவு விக்கெட் பெற்றோர்

வீரர்கள்     போட்டிகள்  விக்கெட்
ரங்கன ஹேரத்(இலங்கை)37200
க்ளெரி ங்கிரிமெட்(ஆஸி)29192
ஷேன் வோர்ன்(ஆஸி)33181
கோர்ட்னி வோல்ஷ் (மே.தீவுகள்)35154

இவ்வருடத்தில் அதிகளவு விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் கிறிஸ் லயனுடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்ட ஹேரத், 372.5 என்ற சராசரியுடன் 46 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.

2017இல் அதிகளவு விக்கெட்டுக்கள்

வீரர்கள்போட்டிகள்விக்கெட்
கிறிஸ் லயன்746
ரங்கன ஹேரத்846
ரவீந்திர ஜடேஜா744
ரவிச்சந்திரன் அஷ்வின்844

இவை தவிர, தனது 11ஆவது போட்டி நாயகன் விருதை தட்டிச் சென்று அதிக தடவைகள் இவ்விருதை வென்றவர்கள் பட்டியலில் 14ஆவது இடத்துக்கு ஹேரத் முன்னேறினார். ஆனால் ஹேரத்துடன் இந்த இடத்தை பகிர்ந்து கொண்டவர்களில் பாகிஸ்தானின் இம்ரான் கான், இலங்கையின் அரவிந்த டி சில்வா தவிர ஏனைய 6 வீரர்களும், 100 இற்கும் அதிகமான போட்டிகளில் விளையாடிவர்களாவர். அதிலும் குறிப்பாக மேற்கிந்திய தீவுகளின் ஷிவ்னரின் சந்திரபோல் மற்றும் இந்தியாவின் ராகுல் ட்ராவிட் ஆகியோர் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 தடவைகள் ஆட்ட நாயகன் விருதுகளை வென்றிருந்தனர்.

அத்துடன், இலங்கையைப் பொறுத்தவரை முத்தையா முரளிதரன் (133 போட்டிகளில் 19), குமார் சங்கக்கார (134 போட்டிகளில் 16), மஹேல ஜயவர்தன (149 போட்டிகளில் 13) ஆகியோரே ஹேரத்தைவிட அதிக தடவைகள் ஆட்ட நாயகன் விருதுகளை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பில் முதல் டெஸ்ட் போட்டியின் பிறகு ஹேரத் கருத்து வெளியிடுகையில், டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட்டுக்கள் என்ற மைல்கல்லை எட்ட முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. எனது இந்த சாதனைக்கு ஒருபோதும் வயது தடையாக இருக்கவில்லை. ஆனால், என்னுடைய குடும்பத்தார், கிரிக்கெட் நிறுவனம், வீரர்கள் மற்றும் ரசிகர்கர்கள் என பலர் எனது இந்த வெற்றிப் பயணத்துக்கு சக்தியாக இருந்தனர். எனவே இந்த நேரத்தில் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என 400 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி புதிய உலக சாதனை படைத்த பிறகு ஊடகங்களுக்கு ஹேரத் கருத்து வெளியிட்டார்.

ரங்கன ஹேரத்தின் அதிரடிப் பந்துவீச்சினால் போராடி வென்ற இலங்கை அணி

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற்று முடிந்திருக்கும், இலங்கை….

1999ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கெதிராக காலியில் நடைபெற்ற போட்டியில் டெஸ்ட் வரம் பெற்றுக்கொண்ட ஹேரத், தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் 97 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். அத்துடன் ஹேரத் வீசிய பந்தில் ரொமேஷ் களுவிதாரனவிடம் பிடிகொடுத்து அவுஸ்திரேலிய அணியின் அப்போதைய தலைவர் ஸ்டீவ் வோவ் ஆட்டமிழந்தார். இதுதான் ஹேரத்தின் முதல் டெஸ்ட் விக்கெட்டாகவும் அமைந்திருந்தது.  

தற்போது 39 வயதான ரங்கன ஹேரத், இலங்கை அணிக்காக இன்று வரை 84  டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 153 இன்னிங்ஸ்களுக்கு முகங்கொடுத்து, 3972.3 ஓவர்களுக்கு 23,835 பந்துதுகளை வீசி 11,128 ஓட்டங்களை எதிரணி வீரர்களுக்காக விட்டுக்கொடுத்து 400 விக்கெட்டுகள் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.

இந்த வயதில் எந்த பந்து வீச்சாளரும் கிரிக்கெட் சரித்திரத்தில் 400 என்ற இலக்கை தொடவில்லை என்பதால், இலங்கை அணியில் உள்ள சிரேஷ்ட வீரரான ஹேரத் ஒரு புதிய சாதனையாளராகுவது  இங்கு குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல செய்திகளைப் படிக்க <<