இடைநீக்கப்பட்ட அணிகள் மீண்டும் ஐ.பி.எல் தொடரில்

575

ஸ்பொட்-பிக்சிங் ஊழல் (Spot fixing scandal) நிர்ணய சர்ச்சையில் இரண்டு ஆண்டுகள் இடைநீக்கத்திற்கு உள்ளான கழகங்கள் 2018 ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ளதை இந்திய கிரிக்கெட் சபை நிர்வாகிகள் உறுதி செய்துள்ளனர்.

இதன்படி ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் களம் திரும்பவுள்ளன.

அதிக இலாபம் பெறும் ஐ.பி.எல் டி20 தொடரில் 2013 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஸ்பொட் பிக்ஸிங் ஆட்ட நிர்ணய சர்ச்சையை அடுத்து கடந்த இரு பருவங்களிலும் இந்த இரு அணிகளும் விளையாடும் வாய்ப்பை இழந்தன. இந்நிலையிலேயே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் இந்த அணிகள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.

அடுத்த ஐ.பி.எல் தொடருக்கு குறைந்தது இன்னும் ஒன்பது மாதங்கள் இருக்கும் நிலையில் இரு அணிகளும் திரும்ப வரவழைக்கப்படுவதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (14) உறுதி செய்தனர்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் MS தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து ஐ.பி.எல் கிண்ணத்தை சுவீகரித்தது.

மெதிவ்சின் பதவி விலகல் இலங்கை கிரிக்கெட் அணியை வளர்ச்சி செய்யாது : சனத் ஜயசூரிய

அவுஸ்திரேலிய அணியின் திறமையான வீரர்களுடன் இணைந்து செயற்படும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 2008இல் முதல் ஐ.பி.எல் தொடரில் ஷேன் வோர்ன் தலைமையில் களமிறங்கியது. அதற்கடுத்த ஆண்டுகளில் ஷேன் வொட்ஸன் ராஜஸ்தான் அணியின் முன்னணி வீரராக மாறியதோடு 2013இல் தொடர் நாயகன் விருதையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து ஸ்டிவ் ஸ்மித் அந்த அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளிலும் மாற்று அணிகளாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித் தலைமையில் ரைசிங் புனே சுப்பர் ஜயன்ட் அணியும், குஜராத் லயன்ஸ் அணியும் விளையாடின.

இந்நிலையில் இடைநீக்கத்திற்குப் பின் இவ்விரு அணிகளின் வருகையை அறிவித்த இந்திய கிரிக்கெட் சபை ரைசிங் புனே சுப்பர் ஜயன்ட் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகளின் எதிர்காலம் பற்றி எந்த ஒரு உத்தியோகபூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. எனினும் இந்த இரு கழகங்களுக்கும் நீடிப்பு வழங்கப்படமாட்டாது என்று ஐ.பி.எல் தலைவர் ராஜீவ் ஷுக்லா இந்த ஆண்டு ஆரம்பத்தில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருந்தார்.

”உடன்படிக்கை இரண்டு ஆண்டுகளைக் கொண்டதாகவே இருந்தது. 10 அணிகள் கொண்ட லீக்காக நடத்தப்படுவதாக இருந்தாலும் கூட புதிய ஏலத்தின் மூலமே புதிய அணிகள் கொண்டுவரப்படும். இந்த அணிகளுக்கு (புனே மற்றும் குஜராத்) நீடிப்பு அல்லது ஏதேனும் சலுகைகள் வழங்கப்படமாட்டாது” என்றும் ஷுக்லா குறிப்பிட்டார்.

ஏற்கனவே 60 போட்டிகளும் அட்டவணைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் 10 அணிகளாக விரிவுபடுத்தும் திட்டம் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

ஷுக்லா வெள்ளியன்று குறிப்பிடும்போது, ”11ஆவது ஐ.பி.எல் தொடருக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய எமது பழைய அணிகளை மீண்டும் வரவேற்பது எனது பாக்கியமாக கருதுகிறேன்” என்றார்.

தொடருக்கு மீண்டும் திரும்பும் அணிக்கான குழாமை அமைப்பது குறித்து இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. இந்நிலையில் அனைத்து வீரர்களையும் சுருட்டிக்கொள்வதற்காக பிரமாண்ட வீரர்கள் ஏலம் ஒன்று நடத்தப்படவிருப்பதாக கூறப்பட்டபோதும் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

அவ்வாறான ஒரு நிகழ்வு இடம்பெறும் பட்சத்தில் பல வீரர்களுக்கு பண மழை கொட்டுவதாக இருக்கும். இதன்போது ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் விராட் கோஹ்லி போன்ற முன்னணி வீரர்களை கழகங்கள் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட வாய்ப்புள்ளது.

சீன மொபைல் தொலைத்தொடர்பு நிறுவனமான விவோ 2018ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரையான ஐந்து ஆண்டுகளுக்கு ஐ.பி.எல் அனுசரணை உரிமத்தை கடந்த ஜுன் மாதத்தில் ரூபாய் 2199 கோடிக்கு (443 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள்) பெற்றமை குறிப்பிடத்தக்கது.