ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகும் காகிஸோ ரபாடா

39
iplt20.com

ஐ.பி.எல். தொடரில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென்னாபிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் காகிஸோ ரபாடா, அந்த அணியின் இறுதி லீக் போட்டி மற்றும் ப்ளே-ஓஃப் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் ஓவர் வெற்றியுடன் ப்ளே-ஓஃப் சுற்றில் மும்பை

ஐ.பி.எல். தொடரில் நேற்று (02) நடைபெற்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான…

காகிஸோ ரபாடாவின் கீழ் இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள சிறிய உபாதை காரணமாக அவர், முழுத் தொடரிலிருந்தும் விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ரபாடாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. எனினும், போட்டியின் பின்னர் தனக்கு கீழ் இடுப்பு பகுதியில் வலி ஏற்படுவதாக டெல்லி கெப்பிட்டல்ஸ் நிர்வாகத்திடம் ரபாடா கூறியுள்ளார்.

இதன் பின்னர், ரபாடாவுக்கான வைத்திய பரிசோதனைகள் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்ட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் படி, ரபாடாவின் கீழ் இடுப்பு பகுதியில் சிறிய உபாதை ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன், அடிப்படையிலேயே ரபாடா ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. உலகக் கிண்ண தொடருக்கான தென்னாபிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக காகிஸோ ரபாடா உள்ளார். இவ்வாறான தருணத்தில் அவர் பாரிய உபாதைக்கு முகங்கொடுக்க கூடாது என்பதை கருத்திற்கொண்டு ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகி, நாடு திரும்புமாறு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை மேற்கொண்ட அறிவித்தலின் படி,  ரபாடா இந்த முடிவினை எடுத்துள்ளதாக டெல்லி கெப்பிட்டல்ஸ் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 6 வருடங்களாக ஐ.பி.எல். ப்ளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெற்றிருக்காத டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, 2012ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக ப்ளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி ப்ளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு முக்கிய காரணமாக காகிஸோ ரபாடாவின் பந்து வீச்சை குறிப்பிடலாம். இதுவைரயில், 12 போட்டிகளில் விளையாடியுள்ள ரபாடா 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதுடன், இம்முறை ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்திலும் உள்ளார்.

இவ்வாறு, ஐ.பி.எல். தொடரிலிருந்து வெளியேறும் காகிஸோ ரபாடா கருத்து வெளியிடுகையில், “இவ்வாறான சூழ்நிலையில் (ப்ளே-ஓஃப்) டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியிலிருந்து விலகுவது மிகவும் கடினமான ஒரு விடயம். ஆனால், உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாவற்கு இன்னும் ஒருமாதம் மாத்திரமே உள்ளது. அதனால், உபாதை தீவிரமடையாமல் இருப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐசிசியின் வருடாந்த தரவரிசையில் இலங்கைக்கு பாரிய வீழ்ச்சி

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) இன்று (02) வெளியிட்டுள்ள கிரிக்கெட் அணிகளுக்கான…

மைதானத்திலும் சரி, மைதானத்துக்கு வெளியிலும் சரி டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியுடன் இணைந்திருந்தமை மிகவும் சிறந்த அனுபவமாக இருந்தது. அதேநேரம், எமது டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி இம்முறை ஐ.பி.எல். கிண்ணத்தை வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

இதேவேளை, தென்னாபிரிக்க அணியின் உபாதை வரிசையில் தற்போது காகிஸோ ரபாடாவும் இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய டேல் ஸ்டெய்ன் தோற்பட்டை உபாதை காரணமாக வெளியேறியிருந்ததுடன், கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டிருந்த என்ரிச் நோட்ஜே (தோற்பட்டை உபாதை) மற்றும் சென்னை அணியின் லுங்கி என்கிடி ஆகியோர் உபாதை காரணமாக வெளியேறியிருந்தனர்.

இவ்வாறு உலகக் கிண்ணத்துக்கான குழாத்தில் இடம்பெற்றுள்ள தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளமை அந்த அணிக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<