புதிய தோற்றத்தில் கட்டாரில் கால்பந்து மைதானம்

200
Qatar-World-Cup-2022
Photo Courtesy -www.dezeen.com

விளையாட்டு உலகின் மிகவும் பிரபல்யமிக்க விளையாட்டாக விளங்குகின்ற கால்பந்து விளையாட்டின் திருவிழாவாகக் கருதப்படுகின்ற உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு உலக நாடுகள் பூராகவும் உள்ள ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு உள்ளது.

ஆனால் 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற உலக்கிண்ண கால்பந்துப் போட்டிகளை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் முண்டியடித்துக் கொள்வதும், அதற்கான ஏலத்தில் கலந்துகொள்வதும் உலகின் வல்லரசு மற்றும் மிகப் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ள நாடுகளின் வழக்கமாக உள்ளது.

இவ்வாறு பலத்த போட்டிகளுக்கு மத்தியில் நாடொன்று உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட பிறகு அப்போட்டிகள் ஆரம்பமாகும் வரை அந்நாட்டில் பல்வேறு கட்டுமானப் பணிகளும், அபிவிருத்தித் திட்டங்களும் மும்முரமாக இடம்பெற்று வருவதையும் நாம் நன்கு அறிவோம். இது பொதுவாக 5 வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இடம்பெறுகின்ற அபிவிருத்திப் பணிகள் என்றால் மிகையாகாது.

இந்நிலையில், 2022ஆம் ஆண்டு பிபா (FIFA) உலகக்கிண்ணக் கால்பந்து போட்டித் தொடர் கட்டாரில் நடைபெவுள்ளது.

தீவிரவாதத்துக்கு கட்டார் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா உள்ளிட்ட ஐந்து அரபு நாடுகள் கட்டார் உடனான உறவை முறித்துக் கொண்டுள்ளன. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகிறது. எனினும் குறித்த நிலைமையினால் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு கட்டார் முகங்கொடுத்திருந்தாலும், கட்டார் உலகக்கிண்ணப் போட்டிகளின் ஆயத்த ஏற்பாடுகளில் எந்தவொரு கால தாமதமும் ஏற்படவில்லை என கட்டார் உலகக்கிண்ணப் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ஹசன் அல் – தவாதி தெரிவித்துள்ளார்.

2018 மே மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனக் கிண்ணம்

2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி பங்காளதேஷில் ஆரம்பமாகவிருந்த 12ஆவது…

இது ஒருபுறமிருக்க, எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பிபா உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடருக்கான முன்னேற்பாடுகளை கட்டார் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒருபகுதியாக, முஸ்லிம்கள் அணியும் தொப்பி வடிவிலான கால்பந்து மைதானத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் கடந்த 20ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தலைநகர் டோஹாவில் அமைக்கப்படவிருக்கும் அல் – துமாமா மைதானம், பாரம்பரிய காஃபியா எனப்படும் அரேபியத் தொப்பி வடிவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த மைதானம் டோஹாவில் இருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டாரில் நிலவுகின்ற அதிக உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த மைதானமும் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், 18 பாகை செல்சியஸ் உஷ்ணத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கிலும் இந்த மைதானம் அமையவுள்ளது. இதன்படி உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளின் முதல் சுற்று மற்றும் காலிறுதிப் போட்டிகளை இந்த மைதானத்தில் நடத்துவதற்கும் போட்டி ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி கட்டார் உலகக்கிண்ணப் போட்டிகளுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 8 மைதானங்களில் 6ஆவது மைதானதமாக இது நிர்மாணிக்கப்படவுள்ளது. எனினும், 2022 உலகக்கிண்ணப் போட்டிகளை 12 மைதானாங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதில் 8 மைதானங்கள் புதிதாகவும், ஏனைய 4 மைதானங்களை புனர்நிர்மாணிக்கவும் ஏற்பாட்டுக் குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சுமார் 40,000 பேர் வரை அமரக்கூடிய வகையில் உருவாக இருக்கும் இந்த மைதானம், கட்டாரைச் சேர்ந்த இப்ராஹிம் எம் ஜாய்யிதாஹ் என்ற கட்டடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களை ஒன்றிணைக்கும் சின்னமாக இந்த மைதானத்தை அரேபியத் தொப்பி வடிவில் அமைக்க இருப்பதாக போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ஹஸன் அல் தவாதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உலக்கிண்ணப் போட்டிகளுக்காக டோஹாவில் முன்னதாக நிர்மாணிக்கப்பட்ட கலீபா சர்வதேச கால்பந்து மைதானம் கடந்த மே மாதம் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் அல் – பாயித் (டோஹா), அல் – ரய்யான் (அல் ரய்யான்), அல் – வக்ரா (அல் ரய்யான்) மற்றும் கட்டார் விளையாட்டு மைதானம் (டோஹா) ஆகியவற்றின் நிர்மாணப்பணிகளும் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

ஏனினும், டோஹாவில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள ராஸ் அபூ அபவுட் மைதானம், போட்டித் தொடரின் மிகப் பெரிய மற்றும் ஆரம்ப, இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ள டோஹாவில் நிர்மாணிக்கப்படவுள்ள லுசாலி மைதானத்தின் திட்ட வடிவமைப்புக்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளுக்காக மாத்திரம் கட்டார் அரசாங்கத்தினால் 5 பில்லியன் பவுண்கள் (கிட்டத்தட்ட 1000 பில்லியன் ரூபா) செலவிடவுள்ளதுடன், அனைத்து விளையாட்டு மைதானங்களினதும் நிர்மாணப் பணிகளை எதிர்வரும் 2021ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்யவும் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.