கட்டார் T10 லீக்கின் சம்பியனாக முடிசூடிய பேல்கன் ஹன்டர்ஸ்

62

கட்டார் T10 லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பேல்கன் ஹன்டர்ஸ் அணி, ஸ்விப்ட் கல்லோப்பர்ஸ் அணியை 4 விக்கெட்டுக்களால் தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கட்டார் கிரிக்கெட் சபை (QCA) முதன் முறையாக ஏற்பாடு செய்த இந்த கட்டார் T10 லீக் தொடரில் ஆறு அணிகள் பங்குபற்றின. பின்னர், தொடரின் குழுநிலைப் போட்டிகளுக்கு அமைவாக பேல்கன் ஹன்டர்ஸ்  மற்றும் ஸ்விப்ட் கல்லோப்பர்ஸ் அணி ஆகியவை இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

நேற்று (16) டோஹா நகரில் ஆரம்பமான இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பேல்கன் ஹன்டர்ஸ் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை ஸ்விப்ட் கல்லோப்பர்ஸ் வீரர்களுக்கு வழங்கியது.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கம்ரான் அக்மல் தலைமையிலான ஸ்விப்ட் கல்லோப்பர்ஸ் அணியினர் 10 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 85 ஓட்டங்கள் குவித்தனர்.

அவ்வணியின் துடுப்பாட்டம் சார்பாக அலி இம்ரான் 19 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடிய ஓட்டங்களை பதிவு செய்தார். இதேநேரம், பேல்கன் ஹன்டர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் முராத் கான் மற்றும் இக்பால் ஹுசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 86 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பேல்கன் ஹன்டர்ஸ் அணி குறித்த வெற்றி இலக்கை 9.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 87 ஓட்டங்களுடன் அடைந்தது.

பேல்கன் ஹன்டர்ஸ் அணியின் வெற்றியை ஹஷிம் அம்லா, சல்மான் பட் மற்றும் அமாட் பட் ஆகியோர் தலா 18 ஓட்டங்கள் வீதம் பெற்று உறுதி செய்தனர்.

ஸ்விப்ட் கல்லோப்பர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் அலி இம்ரான் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் ஆட்டநாயகன் விருதினை பேல்கன் ஹன்டர்ஸ் வீரரான இக்பால் ஹுசைன் பெற, இலங்கையைச் சேர்ந்த பேல்கன் ஹன்டர்ஸ் அணியின் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான மொஹமட் ரிஸ்லான் கட்டார் T10 லீக் தொடர் நாயகன் விருதை வென்றார்.

போட்டியின் சுருக்கம்

ஸ்விப்ட் கல்லோப்பர்ஸ் – 85/7 (10) அலி இம்ரான் 19(12), முராத் கான் 18/2(2), இக்பால் ஹூசைன் 26/2(2)

பேல்கன் ஹன்டர்ஸ் – 87/6 (10) அமாட் பட் 18(12), அலி இம்ரான் 8/2(2)

 முடிவு – பேல்கன் ஹன்டர்ஸ் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி