வட மாகாண விளையாட்டு விழாவில் சம்பியனாகிய யாழ் மாவட்டம்

481

வட மாகாண சபையும், வட மாகாண விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 12 ஆவது வட மாகாண விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த கடந்த 27 ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் யாழ். துரையப்பா மைதானத்தில் நடைபெற்றது.

இம்முறைப் போட்டித் தொடரில் தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற பல வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், 7 புதிய போட்டி சாதனைகளும் இங்கு நிகழ்த்தப்பட்டன.

இதில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்களான எம். பிரேம்தாஸ் (100 மீற்றர்), ஏ. அபிஷான் (400 மீற்றர் சட்டவேலி ஓட்டம்), பி. நவீன்ராஜ் (உயரம் பாய்தல்) ஆகியோர் புதிய போட்டி சாதனைகளை நிகழ்த்தியிருந்ததுடன், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். பிரகாஷ்ராஜ் (சம்மட்டி எறிதல்), ஏ. புவிதரன் (கோலூன்றிப் பாய்தல்), எஸ். ஜதூர்ஷன் (உயரம் பாய்தல்) ஆகியோரும் போட்டி சாதனைகளைப் படைத்திருந்தனர்.

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் திறமைகளை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு வீரர்கள்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று (06) நிறைவுக்கு வந்த 3ஆவது..

அத்துடன், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் மன்னார் மாவட்ட அணி, புதிய போட்டி சாதனைகளை நிகழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, 79 தங்கம் 54 வெள்ளி 29 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தமாக 162 பதக்கங்களைப் வென்ற யாழ். மாவட்டம் ஒட்டுமொத்த சம்பியனானது.

அத்துடன், 28 தங்கம் 20 வெள்ளி 40 வெண்கலப் பதக்கங்களை வென்ற வவுனியா மாவட்டம் இரண்டாமிடத்தையும், 24, தங்கம், 33 வெள்ளி மற்றும் 39 வெண்கலப் பதக்கங்ளை வென்ற முல்லைத்தீவு மாவட்டம் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், சுவட்டு நிகழ்ச்சிகளில் பிறேமதாஸும், மைதான நிகழ்ச்சிகளில் ஏ. புவிதரனும் வருடத்தின் சிறந்த மெய்வல்லுனர் வீரர்களுக்கான விருதுகளை தட்டிச் சென்றனர். அத்துடன், பெண்கள் பிரிவில் சௌமியா பெர்னாண்டோ (சுவட்டு நிகழ்ச்சி) மற்றும் மேரி தயாந்தினி (மைதான நிகழ்ச்சி) ஆகியோர் சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனைகளுக்கான விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

பிரகாஷ்ராஜுக்கு இரட்டை தங்கம்

ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட யாழ். ஹார்ட்லி கல்லூரி மாணவன் எஸ்.பிராகாஷ்ராஜ், 36.12 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

கடந்த வருடம் நடைபெற்ற வட மாகாண மெய்வல்லுனர் போட்டிகளில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சி. ஜெனோஜனினால் (30.29 மீற்றர்) நிலைநாட்டப்பட்ட சாதனையை அவர் முறியடித்தார்.

Photo Album – 12th Northern Provincial Sports Festival | Athletics |Day 1

எனினும், கடந்த மாதம் நடைபெற்ற 56 ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதலிலும் (39.73 மீற்றர்) பிரகாஷ்ராஜ் புதிய போட்டி சாதனை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சம்மட்டி எறிதலில் பிரகாஷ்ராஜுடன் போட்டியிட்ட வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சி. ஜெனோஜன் (33.14 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த வி.ஜெயதர்சன் (32.32 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்ததுடன், முன்னைய போட்டி சாதனையையும் இவ்விரு வீரர்களும் முந்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதலில் கலந்துகொண்ட பிரகாஷ்ராஜ், 38.85 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், அண்மையில் நிறைவுக்கு வந்த 3 ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த பிரகாஷ்ராஜ், 44.11 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அதற்கு முன்னதாக நடைபெற்ற 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் கலந்துகொண்டு, (42.50 மீற்றர்) 2ஆவது இடத்தை அவர் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தட்டெறிதல் போட்டியில் சிறந்த தூரத்தைப் பதிவு செய்த பிரகாஷ்ராஜுக்கு, குறித்த போட்டியில் வட மாகாண சாதனையான 39.13 மீற்றர் தூரத்தை முறியடிக்க முடியாமல் போனது.

இதேவேளை, குறித்த போட்டியில் பங்குபற்றியிருந்த வி. ஜதார்த்தன் (34.21 மீற்றர்), எஸ். தேவகுமாரன் (31.49 மீற்றர்) ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

கிந்துஷனுக்கு ஹெட்ரிக் தங்கம்

அண்மையில் நிறைவுக்கு வந்த 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமையைப் பெற்றுக்கொடுத்த வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த  எஸ். கிந்துஷன், ஆண்களுக்கான 1500, 5000, 10000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருந்ததுடன், மரதன் மற்றும் நகர்வல ஓட்டப் போட்டிகளில் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதில், ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியை நிறைவு செய்வதற்கு 16 நிமிடங்களும் 28.06 செக்கன்கள் நேரத்தை அவர் எடுத்துக்கொண்டார். எனினும், அண்மையில் நிறைவுக்கு வந்த தெற்காசிய மெய்வல்லுனரில் குறித்த போட்டியை 16 நிமிடங்களும் 18.43 செக்கன்களில் நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Photo Album – Northern Provincial Sports Festival 2018 | Athletics| Day 2

கடந்த 2 வருடங்களாக வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் மரதன் ஓட்ட வீரரான நவனீதன் ஆசிரியரிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற கிந்துஷன், கடந்த மாதம் நிறைவுக்கு வந்த 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனரில் ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியை 33 நிமிடங்களும் 56.87 செக்கன்களிலும், 5000 மீற்றர் ஓட்டப் போட்டியை 15 நிமிடங்களும் 56.10 செக்கன்களிலும் நிறைவு செய்து தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.

 

இந்நிலையில், ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் கிந்துஷனுடன், அவருடைய பயிற்சியாளரான கே. நவனீதனும் பங்குபற்றியிருந்தார். எனினும், குறித்த போட்டியில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த கே. கிருஷ்னரூபன் (2மணி. 58.37 செக்.), முதலிடத்தையும், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்களான கே நவனீதன் (3மணி. 14.18 செக்.) இரண்டாவது இடத்தையும், எஸ். கிந்துஷன் (3மணி. 14.22 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

புவிதரனின் மற்றுமொரு மைல்கல்

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா மற்றும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் ஆகிய போட்டிகளில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனைகளை நிலைநாட்டிய யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஏ. புவிதரன், இம்முறை வட மாகாண மெய்வல்லுனர் போட்டித் தொடரில் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

குறித்த போட்டியில் 4.60 மீற்றர் உயரத்தைத் தாவிய அவர், கடந்த வருடம் நடைபெற்ற வட மாகாண மெய்வல்லுனர் போட்டிகளில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். டிலக்ஷன் மற்றும் நெப்தலி ஜொய்சன் (4.40 மீற்றர்) ஆகியோரால் நிலைநாட்டப்பட்ட சாதனையை அவர் முறியடித்தார்.

இதன்படி, இம்முறை வட மாகாண விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டிகளின் வருடத்தின் சிறந்த வீரருக்கான இணை விருதையும் அவர் முதற்தடவையாகப் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக, கடந்த மாத இறுதியில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் (4.70 மீற்றர்) புதிய போட்டி சாதனை நிகழ்த்தியிருந்த ஏ. புவிதரன், முதற்தடவையாக தேசிய மட்டப் போட்டியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் பெற்றிருந்தார்.

இதனையடுத்து, இம்மாத முற்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான வீரர்களைத் தெரிவுசெய்யும் தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றியிருந்த அவர், 4.70 உயரத்தைத் தாவி முதலிடத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த போட்டியில் புவிதரனுடன் போட்டியிட்ட யாழ். தெல்லிப்பழை மகஜனாக் கல்லூரி மாணவன் எஸ் டிலக்ஷன் (4.10 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவன் நெப்தலி ஜொய்சன் (4.10 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

அனித்தாவுக்கு இரு தங்கங்கள்

கடந்த ஒரு மாதங்களாக காலில் ஏற்பட்ட காயத்தினால் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதிலிருந்து விலகியிருந்த அனித்தா ஜெகதீஸ்வரன், இம்முறை வட மாகாண மெய்வல்லுனர் போட்டிகளில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் மற்றும் சட்டவேலி ஓட்டத்தில் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார்.

எனினும், அவரது காயம் பூரண குணமடையாத காரணத்தினால் எதிர்பார்த்தளவு திறமையினை அவரால் வெளிப்படுத்த முடியாமல் போனமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட அனித்தா, 3.18 மீற்றர் உயரத்தை தாவி தங்கப் பதக்கம் வென்றார். எனினும், அவர் கடந்த வருடம் நடைபெற்ற வட மாகாண மெய்வல்லுனர் போட்டிகளில் 3.31 மீற்றர் உயரத்தைத் தாவி போட்டி சாதனை நிகழ்த்தியிருந்தார்.

இந்நிலையில், பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் வட மாகாண சாதனையை (16.70 செக்.) தன்னகத்தே வைத்துக்கொண்டுள்ள அனித்தா, இம்முறை போட்டித் தொடரில் 17.6 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்றார்.

யாழ் வீராங்கனை எழிலேந்தினியின் கன்னிப் போட்டியில் இலங்கைக்கு வெற்றி

நான்கு அணிகள் பங்கு கொள்ளும் நட்பு ரீதியிலான…

எனினும், கடந்த மாதம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 3.55 மீற்றர் உயரத்தைத் தாவி தனது சொந்த சாதனையை முறியடித்த அனித்தாவுக்கு, ஆசிய விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டிகளில் எதிர்பார்த்தளவு திறமையினை வெளிப்படுத்த முடியாமல் போனது.

இதேவேளை, அனித்தாவுடன் குறித்த போட்டியில் பங்குபற்றியிருந்த யாழ். மகஜனாக் கல்லூரி மாணவி ஜெ. ஹெரினா (2.80 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியைச் சேர்ந்த பி. திவ்யா (2.70 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

அதிவேக வீரராக முடிசூடிய பிரேமதாஸ்

வட மாகாண மெய்வல்லுனர் போட்டிகளில் வருடத்தின் அதிவேக வீரராக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரேமதாஸ் தெரிவானார். அவர் குறித்த போட்டியை 11.00 செக்கன்களில் ஓடிமுடித்து கடந்த வருடம் அவரால் நிகழ்த்திய சாதனையை சமப்படுத்தினார்.

எனினும், குறித்த போட்டியில் பங்குபற்றியிருந்த யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்களான ஆர். சதீஷன் (11.04 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், டி. விதூஷன் (11.05 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதேநேரம், ஆண்களுக்கான 200 மீற்றரிலும் கலந்துகெண்ட பிரேமதாஸ், 22.5 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

Photo Album – Northern Provincial Sports Festival 2018 | Final day

ஆனால், கடந்த வருடம் நடைபெற்ற வட மாகாண மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர் புதிய சாதனையை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பெண்கள் பிரிவில் வருடத்தின் அதிவேக வீராங்கனையாக சௌமியா பெர்னாண்டோ தெரிவானார். குறித்த போட்டியை அவர் 13.05 செக்கன்களில் நிறைவுசெய்திருந்தார். அத்துடன், பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் அவர் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

  • சுவட்டு நிகழ்ச்சிகளில் சிறந்து மெய்வல்லுனர் வீராங்கனை சௌமியா பெர்னாண்டோ