உயரம் பாய்தலில் புத்தளம் மாணவன் அப்ரிட்டுக்கு வெள்ளிப் பதக்கம்

242

தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் சிலாபம் சவரான முஸ்லிம் வித்தியாலத்தைச் சேர்ந்த .எம் அப்ரிட், 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதன்படி, அவர் குறித்த போட்டியில் 1.93 மீற்றர் உயரத்தைத் தாவி, அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் தொடர்ச்சியாக 2ஆவது தடவையாக வெற்றியைப் பதிவுசெய்தார்.

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாணவிகள் ஆதிக்கம்

தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற அகில இலங்கை…

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் சிலாபம் சவரான முஸ்லிம் வித்தியாலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றி வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்ற அப்ரிட், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜோர்ன் டார்பட் மற்றும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர்களில் முதலிடத்தையும், அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.  

எனினும், கடந்த வருடம் .பொ. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியமையால் அவரால் எந்தவொரு வெற்றியையும் பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், இவ்வருடம் நடைபெற்ற ஜோன் டார்பட், தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், இம்முறை நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.  

இந்நிலையில், போட்டியின் பிறகு எமது இணையமான ThePapare.com இற்கு அப்ரிட் கருத்து வெளியிடுகையில், அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 2ஆவது தடவையாகவும் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முதலில் இறைவனுக்கும், பிறகு எனது பெற்றோர், குடும்பத்தார், ஆரம்பகால பயிற்சியாளர்களான சியாம் ஆசிரியர், வசந்த் மற்றும் ஜோசப் ஆசிரியர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தற்போது புத்தளம் ஸாஹிரா கல்லூரியில் உயர்தரப் பிரிவில் கற்றுவருகின்ற அப்ரிட், கல்வியிலும், விளையாட்டுத்துறையிலும் முன்னேறிச் சென்று இலங்கைக்காக ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கமொன்றை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்புடன் இருப்பதாககவும் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, 1.96 உயரத்தைத் தாவிய புதிய வர்ண சாதனையுடன் கல்கிஸை புனித தோமஸ் கல்லூரியைச் சேர்ந்த வி. கஸ்தூரியாரச்சி தங்கப் பதக்கத்தையும், 1.93 மீற்றர் உயரத்தை தாவிய நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியைச் சேர்ந்த சானுக பெர்ணான்டோ வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.