இரண்டாம் பாதியில் போராடி வென்றது ட்ரிபல் செவன் அணி  

236
Puttalam Drugons Trophy (New Friends SC vs Trible Seven SC)

விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற போட்டியில் இரண்டாம் பாதியில் மொஹமட் கையும் ஹெட்ரிக் கோல் அடிக்க மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் பலம் மிக்க நியு ப்ரண்ஸ் கழகத்தை 4-3 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி கொண்ட ட்ரிபல் செவன் அணியினர் ட்ரகன்ஸ் லீக் தொடரில் தனது ஐந்தாவது போட்டியில் மூன்றாவது வெற்றியினைப் பதிவு செய்தனர்.  

புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் பெருமையோடு ஏற்பாடு செய்து நடாத்திக்கொண்டிருக்கின்ற ‘ட்ரகன்ஸ் லீக் – 2017’ போட்டிகளின் 22வது லீக் ஆட்டம் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் புத்தளப் பிரதேசத்தின் தலை சிறந்த கழகங்களான ட்ரிபல் செவன் மற்றும் நியு ப்ரண்ஸ் விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் இடம்பெற்றது.

நஸீமின் ஹட்ரிக் கோல் உதவியோடு ஒடிடாஸை பந்தாடிய லிவர்பூல்

முதற்பாதியில் நஸீம் பெற்ற அசத்தலான ஹட்ரிக் கோலின் உதவியோடு இளம் ஒடிடாஸ்…

தீர்மானமிக்க இந்தப் போட்டி ஆரம்பிக்கப்பட்ட நேரம் முதல் இரு அணி வீரர்களும் பந்தினை சம விகிதத்தில் தக்கவைத்துக்கொண்டனர்.

ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் நியு ப்ரண்ஸ் அணி வீரர் பர்மான் கொடுத்த பந்தினைப் பெற்ற தலைவர் இம்தியாஸ் வேகமாக கம்பம் நோக்கி அடிக்க அதை சிறப்பாகச் செயற்பட்ட கோல் காப்பாளர் மாஹிர் கையால் தடுத்து பந்தினை வெளியேற்ற முதல் முயற்சி வீணானது.

மேலும் 4 நிமிடங்கள் கழித்து நியு ப்ரண்ஸின் இம்தியாஸ் கொடுத்த பந்தினைப் பெற்ற 18 வயதின் கீழ் இலங்கை தேசிய அணிக்குத் தெரிவு செய்யப்பட்ட ஜஹீர், கம்பம் நோக்கி சென்று மாஹிர் தனித்து நிற்கையில் அவரின் கைகளுக்கே பந்தை தாரை வார்க்க இலகுவான கோல் வாய்ப்பு கை தவறிப்போனது.

போட்டி தொடர்ந்து செல்ல 29வது நிமிடத்தில் ட்ரிபல் செவன் வீரர் அஸ்மத் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை கையும் கம்பத்திற்குள் அனுப்பினார்.  எனினும், நடுவர் அதனை ஓப் சைட் என அறிவிக்க தோல்வியில் முடிந்தது அந்த முயற்சி.

ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் ரினூஸ் பந்தினை அஸ்மத்திடம் கொடுக்க அதைப் பெற்ற அஸ்மத் கம்பம் நோக்கி உதைத்தார். அது நியு ப்ரண்ஸின் தடுப்பு வீரர்களின் கால்களில் பட்டு வெளியேற ட்ரிபல் செவன் அணிக்கு கோர்ணர் வாய்ப்பு கிடைத்தது.

35வது நிமிடத்தில் கிடைத்த கோர்ணர் உதையினை அம்ஜத் உதைக்க உயரே வந்த பந்தினை அப்ரார் தலையால் முட்டி கம்பம் திருப்பினார். பந்து சபீக்கின் தலைக்கு செல்ல சபீக் கோல் காப்பாளர் இல்லாத பகுதியினூடாக பந்தை கோலுக்குள் அனுப்பி தன் முதல் கோலினைப் பதிவு செய்தார்.

மேலும் 3 நிமிடங்களின் பின்னர் கம்பத்திற்கு சற்று தொலைவிலிருந்து இம்தியால் வேகமாக கம்பத்திற்கு அடிக்க கைக்கு வந்த பந்தினை மாஹிர் கையிலிருந்து நழுவவிட்டார். வேகமாக செயற்பட்ட பர்மான் பந்தினை கம்பத்திற்குள் அனுப்பி ட்ரிபல் செவனுக்கு பதிலடி கொடுக்க, நியு ப்ரண்ஸ் கோல் கணக்கை சமன் செய்தது.

கோல் கணக்கு சமனிலை பெற்றிருக்க போட்டி சற்று உக்கிரம் அடைந்து காணப்பட இரு அணிகளினதும் தடுப்பு வீரர்கள் பந்தினை அடித்து அகற்றிய வண்ணமே காணப்பட்டனர்.

முதற் பாதியின் இறுதி முயற்சியாக நியு ப்ரண்ஸின் இம்தியாஸ் கொடுத்த பந்தினைப் பெற்று பர்மான் கம்பம் நோக்கி அடிக்க அதை மாஹிர் லாபகமாகப் பற்றிக்கொண்டார்.

முழு நேரம்: ட்ரிபல் செவன் விளையாட்டுக் கழகம் 1-1 நியு ப்ரண்ஸ் விளையாட்டுக் கழகம்   

முதற் பாதி சமனிலை பெற்றதால் இரு அணிகளினதும் வெற்றியினைத் தீர்மானிக்கும் தீர்மானமிக்க இறுதிப் பாதி ஆட்டம் இன்னும் விறுவிறுப்பாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆட்டம் ஆரம்பித்த அடுத்த நிமிடமே (46) நியு ப்ரண்ஸ் கழகத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது. மாற்று வீரராக களம் கண்ட ரிபாஸ்தீன் கொடுத்த சிறப்பான பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற இளம் வீரர் கையும் வந்த வேகத்திலே வலக் காலால் கம்பத்திற்குள் அடித்தார். பந்தை தடுக்கும் முயற்சியில் அஸ்பான் தோற்றுப் போக தன் கோல் கணக்கை இரட்டிப்பாக்கி மீண்டும் முன்னிலை பெற்றது ட்ரிபல் செவன்.

2018 மே மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனக் கிண்ணம்

2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி பங்காளதேஷில் ஆரம்பமாகவிருந்த 12ஆவது…

மீண்டும் 56வது நிமிடத்தில் மதன் ராஜ் கொடுத்த உயரமான பந்துப் பரிமாற்றத்தை ஜகீர் உயரே எழுந்து தலையால் முட்ட பந்து ட்ரிபல் செவனின் தடுப்பு வீரரின் கால்களில் பட்டு இம்தியாஸின் கால்களுக்கு வர அதை இம்தியாஸ் கம்பத்திற்குள் வேகமாக அடித்தார். இதன்போது மாஹிரின் கைகளில் பட்டவாரே பந்து கோலுக்குள் நுழைய மீண்டும் கோல் எண்ணிக்கை சமநிலையடைந்தது.

இரு கழகங்களும் கோல் முயற்சியில் முழுமையாக ஈடுபட பந்து இரு கம்பங்களுக்கும் மாறி மாறி செல்லத் தொடங்கியது.

ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் ட்ரிபல் செவன் வீரர் அப்ரார் கொடுத்த பந்தினை கையும் கம்பத்திற்குள் அனுப்பி சந்தோசத்தினை வெளிப்படுத்துகையில் நடுவர் ஓப் சைட் என அறிவித்தார். அது அவ்வணியின் இரண்டாவது ஓப் சைட் கோலாக மாற வீணாகிப் போனது கையுமின் முயற்சி.

போட்டியின் 72வது நிமிடத்தில் நியு ப்ரண்ஸ் கழகத்திற்கு கோல் அதிர்ச்சி கொடுத்தது ட்ரிபல் செவன்.

முன் கள வீரர் ரிபாஸ்தீன் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை கையும் பெற்று அஸ்பான் இல்லாத திசைக்கு வேகமாக உதைத்தார். பந்தை அஸ்பான் தடுக்க எத்தனிக்க முன் பந்து கோலாக மாற கையுமின் கோல் கணக்கு இரட்டிப்பாகி ட்ரிபல் செவனின் கோல் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.

தொடர்ந்த ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் மதன் ராஜ் விதிமுறைக்கு மாறாக கையுமைத் தள்ளிவிட ஆத்திரம் கொண்ட ட்ரிபல் செவன் வீரர் அப்ரார் மதன் ராஜைத் தாக்கினார். ஏற்கனவே அப்ரார் மஞ்சள் அட்டை பெற்றிருந்த நிலையில் நடுவர் இரண்டாவது மஞ்சள் அட்டையையும் காட்டி, சிவப்பு அட்டையும் காட்டி அவரை மைதானத்தில் இருந்து வெளியேற்றினார். மதன் ராஜிற்கும் நடுவர் மஞ்சள் அட்டையை காட்டி எச்சரித்தார்.

போட்டி முக்கிய கட்டத்தினை அடைந்திருந்த நிலையில் அப்ராரின் இழப்பு ட்ரிபல் செவன் கழகத்திற்கு மிகப் பெரும் இழப்பாகக் கருதப்பட மற்றைய வீரர்கள் அதிகமாக உழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் நியு ப்ரண்ஸ் அணியின் இம்தியாஸ் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற பர்மான், இரண்டு தடுப்பு வீரர்களையும் தாண்டி பெனால்டி பகுதிக்குள் பந்தைக் கொண்டு சென்றார். இதன்போது, நாஸிம் அதை முறையற்ற விதத்தில் பர்மானிடமிருந்து பறிக்க முயல பர்மான் கீழே விழுந்தார். இதனால் நடுவர் நியு ப்ரண்ஸ் கழகத்திற்கு பெனால்டி உதைக்கான வாய்ப்பினை வழங்கி நாஸிமுக்கு மஞ்சள் அட்டையும் காட்டி எச்சரித்தார்.

பேனால்டி உதையினை ஜஹீர் பொருப்பேற்று வலது பக்கமாக வேகமாக அடிக்க எந்தத் தடையுமின்றி பந்து கம்பத்தினுள் சரணடைய போட்டி மீண்டும் 3-3 என சமநிலை பெற்றது.

ஜாவித்தின் ஹட்ரிக் கோலினால் எவரடி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது ஒலிம்பிக்

நிந்தவுர் கெண்ட் விளையாட்டுக் கழகம் அம்பாரை மாவட்ட கால்பந்தாட்ட லீக்கின் ஆதரவுடன்…

சுமநிலைத் தன்மை நீடிப்பதற்குள் போட்டியின் 83வது நிமிடத்தில் மீண்டும் நியு ப்ரண்ஸ் கழகத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் கையும்.

ஸாபிக் கொடுத்த சிறப்பான பந்துப் பரிமாற்றத்தினைப் பெற்ற கையும் நியு ப்ரண்ஸின் இரண்டு தடுப்பு வீரர்களையும் நிலைகுலையச் செய்து கம்பம் நோக்கி அடிக்க அதை அஸ்பான் பாய்ந்து தடுத்தார். பந்து அஸ்பானின் கைகளில் பட்டவாரே கம்பத்திற்குள் செல்ல தன் முதலாவது ஹட்ரிக் கோலைப் பதிவு செய்து அணியின் கோல் கணக்கினை 4-3 என கையும் முன்னிலைப்படுத்தினார்.

எஞ்சி இருக்கின்ற செற்ப நிமிடங்களுக்குள் கோல் கணக்கினை சமன் செய்து விட வேண்டும் என்ற நோக்கோடு நியு ப்ரண்ஸ் காணப்பட முன்னிலையை இறுதிவரை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் ட்ரிபல் செவன் ஆடத் தொடங்கியது.

நியு ப்ரண்ஸின் இறுதி முயற்சிகள் பலனளிக்காமல் போக போட்டி நிறைவு பெற்றதாக நடுவர் அறிவிக்கையில் கையுமின் இரண்டாம் பாதி ஹட்ரிக் கோல் கை கொடுக்க பலம் மிக்க நியு ப்ரண்ஸ் கழகத்தை 4 -3 என போராடி வென்று தனது ஐந்தாவது போட்டியில் மூன்றாவது வெற்றியினைப் பதிவு செய்தது ட்ரிபல் செவன் கழகம்.

முழு நேரம்: ட்ரிபல் செவன் விளையாட்டுக் கழகம் 4-3 நியு ப்ரண்ஸ் விளையாட்டுக் கழகம்  

கோல் பெற்றவர்கள்

ட்ரிபல் செவன் விளையாட்டுக் கழகம் – சாபிக் 35’, கையும் 46’, 72’, 83’

நியு ப்ரண்ஸ் விளையாட்டுக் கழகம் – பர்மான் 38’, இம்தியாஸ் 56’, ஜஹீர் 78’

மஞ்சள் அட்டை

ட்ரிபல் செவன் விளையாட்டுக் கழகம் –  அஸ்மத் 37’, பஸீர் 73’, அப்ரார் 74’, 75’, நாஸிம் 78’

நியு ப்ரண்ஸ் விளையாட்டுக் கழகம் – இம்ஜாத் 22’, முதன் ராஜ் 75’, இம்தியாஸ் 88’

சிவப்பு அட்டை

ட்ரிபல் செவன் விளையாட்டுக் கழகம் – அப்ரார் 75’