பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படுகின்ற 3ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்கவுள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்களுகளின் விடுவிப்பு தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டன.

கடந்த வருடத்தைப் போல நடப்புச் சம்பினான பெஷாவர் சல்மி, இஸ்லாமாபாத் யுனைடட், கராச்சி கிங்ஸ், லாகூர் கிளெண்டர்ஸ், குவாட்ட கிளெடியேட்டர்ஸ் மற்றும் இவ்வருடம் முதல் புதிதாக இணைந்து கொண்ட முல்தான் சுல்தான்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் பங்கேற்றுள்ளன. முல்தான் சுல்தான்ஸ் அணியைத் தவிர மற்றைய 5 அணிகளும் 9 வீரர்களை தமது அணியில் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதுடன், ஏனைய வீரர்களை விடுவிக்கவும் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியில் தொடரும் வீரர்களுக்கான போட்டித்தடையும், அபராதமும்

உலகிலுள்ள அனைத்து மக்களையும்…

இதன்படி, விடுவிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் புதிதாக ஏலத்தில் இணையவுள்ள வீரர்கள் உள்ளடங்கலாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 3ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் பங்கேற்கவுள்ள வீரர்களைத் தெரிவு செய்வதற்கான பிரதான ஏலம் எதிர்வரும் ஜனவரி மாதம் முற்பகுதியில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஏனைய 5 அணிகளாலும் நேற்றைய தினம் (05) விடுவிக்கப்பட்ட வீரர்களில் இருந்து தமது அணிக்கான பிரதான வீரர்களை எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள விசேட ஏலத்தில் சுல்தான் முல்தான்ஸ் அணியினால் ஒப்பந்தம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வருடம் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடியிருந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார, T-20 போட்டிகளின் சிக்ஸர் மன்னன் என வர்ணிக்கப்படுகின்ற மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில், கிரன் பொல்லார்ட், சொயிப் மலிக் உள்ளிட்ட முக்கிய வீரர்களை விடுவிக்க கராச்சி கிங்ஸ் அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளின் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற சங்கக்கார, உலகின் பல்வேறு நாடுகளில் இடம்பெற்றுவருகின்ற T-20 போட்டித் தொடர்களில் விளையாடி வருகின்றார். அத்துடன், கடந்த 2 வருடங்களாக இங்கிலாந்தின் கவுண்டி அணியான சர்ரே அணிக்காகவும் விளையாடி வந்த சங்கக்கார, முதல்தர போட்டிகளில் இருந்து கடந்த மாதம் ஓய்வுபெற்றதுடன், இப்பருவகாலத்துடன் சர்ரே அணிக்கும் விடைகொடுத்தார்.

இலங்கையின் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் சந்திமாலின் இலக்கு இதுதான்

அண்மையில் நிறைவடைந்த கரீபியன் பிரீமியர் லீக்கில் ஜமைக்கா தலைவாஸ் அணியின் தலைவராகச் செயற்பட்ட சங்கக்கார, முன்னதாக இங்கிலாந்தின் T-20 நெட்வெஸ்ட் பிளாஸ்ட் தொடரிலும் சிறப்பாக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணியின் தலைவராக குமார் சங்கக்கார செயற்பட்டிருந்தபோதும், அவரால் அவ்வணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்ல முடியாமல் போனது.

அத்துடன், கடந்த இரண்டு பருவகாலங்களிலும் கராச்சி அணிக்காக விளையாடியிருந்த மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரர்களான கிறிஸ் கெயில் மற்றும் கிரென் பொல்லார்ட் ஆகியோரை விடுவிக்கவும் கராச்சி அணி உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். திடீர் உபாதை மற்றும் போட்டித்தடை உள்ளிட்ட காரணங்களால் கெயில் மற்றும் பொல்லார்ட் ஆகியோர் கடந்த காலங்களில் நடைபெற்ற T-20 தொடர்களில் பெரிதும் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் அனுபவமிக்க நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரரான சொஹைப் மலிக்கும் கராச்சி அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த சில காலங்களாக பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் T-20 அணிகளில் தனக்கென தனியொரு இடத்தைப் பெற்றுக்கொண்ட சொஹைப் மலிக், பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் முதல் பருவகாலத்தில் கராச்சி கிங்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை, கடந்த 2 பருவகாலங்களிலும் பெஷாவர் சல்மி அணிக்காக விளையாடியிருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர அதிரடி வீரருமான சஹீட் அப்ரிடி தனிப்பட்ட காரணங்களுக்காக அவ்வணியுடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டார். இதனையடுத்து கராச்சி கிங்ஸ் அணி கடந்த சில தினங்களுக்கு முன் அப்ரிடியை ஒப்பந்தம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணியின் தலைவராக அப்ரிடி செயற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

இங்கிலாந்தில் இருந்து மீண்டும் ஜிம்பாப்வே திரும்பும் நட்சத்திர வீரர்கள்

இந்நிலையில் இவ்வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட குவாட்டா கிளெடியேட்டர்ஸ் அணி, அஹமட் ஷேசாத் மற்றும் உமர் குல், டைமல் மில்ஸ் மற்றும் சுல்பிகர் பாபர் ஆகிய வீரர்களை விடுவித்துள்ளதுடன், சர்பராஸ் அஹமட், கெவின் பீட்டர்ஸன், ரிலி ரொசோ, அசாத் ஷபீக் மற்றும் அன்வர் அலி ஆகிய வீரர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இதேவேளை, முதலாவது பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் சம்பியன் பட்டத்தை வென்ற இஸ்லாமாபாத் யுனைடட் அணிக்காக விளையாடியிருந்த மொஹமட் இர்பானை விடுவிக்க அவ்வணி நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் இடம்பெற்ற சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய வீரர்களில் ஒருவராகவும், விசாரணைகளின் பிறகு முக்கிய குற்றவாளியாகவும் இனங்காணப்பட்ட இர்பானுக்கு 6 மாதகால போட்டித் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஊக்கமருந்து குற்றச்சாட்டில் போட்டித்தடைக்கு உள்ளாகியுள்ள மேற்கிந்திய தீவுகளின் அன்ட்ரூ ரஸல் மற்றும் அண்மையில் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்ற மிஸ்பா உல் ஹக் ஆகிய வீரர்களை அவ்வணி தக்கவைத்துக்கொண்டுள்ளது.

அத்துடன் லாகூர் கிளெண்டர்ஸ் அணி, தமது வீரர்களான அசார் அலி, சொஹைல் தன்வீர், ஜேசன் ரோய் மற்றும் கிரேன்ட் எலியெட் ஆகிய வீரர்களையும், பெஷாவர் சல்மி அணி ஜுனைத் கான், இயென் மோர்கன், மார்லன் சாமுவெல்ஸ், தமீம் இக்பால் மற்றும் டேவிட் மாலன் ஆகிய வீரர்களையும் விடுவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளைப் படிக்க