மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடருக்கு எப்படியான இலங்கை அணி வரும்?

4660

இலங்கை கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இப்போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கைக் குழாம், அடுத்த மாதத்தின் இரண்டாம் வாரத்தின் போது அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் தெரிவாகும் வீரர்களுக்கு தேசிய அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க புதிய டெஸ்ட் தொடர் ஒன்றுக்கு ஆயத்தமாகுவதற்கான வழிகாட்டுதல்களை  வழங்குவார்.

“சுபர் 4” முதல்தர கிரிக்கெட் தொடரின் சம்பியனாக காலி அணி

இலங்கை கிரிக்கெட் சபை இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்திருந்த மாகாண ..

இந்த தொடர் மூலம், இலங்கை அணி பத்து வருடங்களின் பின்னர் மேற்கிந்திய தீவுகளுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு மாதங்களின் முன்னர் தமது இறுதி டெஸ்ட் தொடரை 1-0 என பங்களாதேஷின் சொந்த மண்ணில் வைத்துக் கைப்பற்றிய தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை அணி, டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் தற்போது ஆறாம் இடத்தில் காணப்படுகின்றது.

நேற்று (24) முடிவடைந்த மாகாண அணிகளுக்கு இடையிலான முதல்தரக் கிரிக்கெட் தொடரின் அடிப்படையில், தேசிய அணியின் தேர்வாளர்கள் மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்காக, 16 பேர் அடங்கிய இலங்கை குழாமை வெளியிட தீர்மானித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தக் குழாத்தில், 8 துடுப்பாட்ட வீரர்களினையும், 3 சுழல்பந்து வீச்சாளர்களினையும், 5 வேகப்பந்து வீச்சாளர்களினையும் அவதானிக்க முடியும்.

அடுத்ததாக மாகாண ரீதியிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இடம்பெறவுள்ளது. இத் தொடருக்கு முன்னர் காயத்துக்குள்ளான சில வீரர்களினை இப்போட்டிகளுக்கு தகுதியாக இருக்கின்றனரா? என்பதை பரிசோதிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.  

இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் தனது காயங்களில் இருந்து குணமடைந்து, முழு உடற்தகுதியுடன் இருக்கின்றார். இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுடனான  தொடரில், 5 வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்ட அணியினை தெரிவு செய்யும் எனில், மெதிவ்சுக்கும் ரொஷேன் சில்வாவுக்கும் முதல் பதினொருவர் அணிக்குள் (First XI) வருவதில்  போட்டி நிகழ வாய்ப்புண்டு. நடைபெற்று முடிந்திருக்கும் மாகாண கிரிக்கெட் தொடரில் 3 போட்டிகளில் ஆடி, ஒரு இரட்டைச் சதம், ஒரு சதம் என மொத்தமாக 535 ஓட்டங்கள் குவித்திருக்கும் ரொஷேன் சில்வா இறுதியாக பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் ஆட்ட நாயகனாகவும் மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்ட் தொடரின் போது, அதிரடி துடுப்பாட்ட விக்கெட் காப்பு வீரர்களான குசல் பெரேரா மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோருக்கும்  வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், தனது இறுதி பத்து டெஸ்ட் இன்னிங்சுகளிலும் ஒரேயொரு அரைச்சதம் மாத்திரம் தாண்டிய திமுத் கருணாரத்ன ஆரம்ப துடுப்பாட்ட வீரராக குசல் மெண்டிசுடன் இணைந்து செயற்படுவார் என நம்பப்படுகின்றது.

நடைபெற்று முடிந்த மாகாண முதல்தரக் கிரிக்கெட் தொடரின் போட்டிகள் எதிலும் பங்கேற்காத இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெறப் போகும் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக உடற்தகுதியினைப் பெறுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

காயத்துக்கு உள்ளான ஏனைய வேகப்பந்து வீச்சாளர்களான நுவான் பிரதீப் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் இன்னும் அதிலிருந்து குணமடையாத காரணத்தினால் இளம் வேகப்பந்து வீச்சாளர்களான கசுன் ராஜித, நிசால தாரக்க ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை டெஸ்ட் போட்டிகள் எதிலும் ஆடாத, வலது கை வேகப்பந்து வீச்சாளரான நிசால தாரக்க மாகாண கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுக்களை (11) கைப்பற்றியவராக இருப்பதோடு, கசுன் ராஜித இரண்டு போட்டிகளில் ஆடி 20.50 என்கிற நல்ல சராசரியுடன் 10 விக்கெட்டுக்களை சாய்த்திருக்கின்றார்.

உலக பதினொருவர் அணியில் பங்களாதேஷ், ஆப்கான் வீரர்கள் இணைப்பு

அடுத்த மாத இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் …

அனுபவமிக்க ஏனைய வேகப்பந்து வீச்சாளரான தம்மிக்க பிரசாத்தினையும் டெஸ்ட் அணியில் உள்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, ஹதுருசிங்க மேலதிக வேகப்பந்து வீச்சாளர்களாக லஹிரு குமார, விஷ்வ பெர்னாந்து போன்றோரினையும் அணியில் சேர்க்க ஆலோசனை செய்ய முடியும் எனவும் நம்பப்படுகின்றது.

இத்தொடரில் இலங்கை அணியின் சுழல்பந்துவீச்சுத் துறையினை முன்னெடுக்க இளம் வீரர் அகில தனன்ஞயவுடன், தில்ருவான் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் உள்ளனர்.

இலங்கைக் குழாம்

தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), அஞ்செலோ மெதிவ்ஸ், திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, ரோஷேன் சில்வா, நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, தில்ருவான் பெரேரா, அகில தனன்ஞய, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால், தம்மிக்க பிரசாத், லஹிரு கமகே, நிசால தாரக்க, கசுன் ராஜித

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் போட்டி அட்டவணை

பயிற்சிப் போட்டி – மே 31 தொடக்கம் ஜூன் 1 வரை, ட்ரினிடாட்

முதல் டெஸ்ட் போட்டி – ஜூன் 6 தொடக்கம் 10 வரை, ட்ரினிடாட்

இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஜூன் 14 தொடக்கம் 18 வரை, பார்படோஸ்

மூன்றாவது டெஸ்ட் போட்டி – ஜூன் 23 தொடக்கம் 27 வரை, சென். லூசியா

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…