விசித்திர முடிவுடன் ஹட்ரிக் சம்பியனாக மகுடம் சூடிக்கொண்ட புனித செபஸ்டியன் கல்லூரி

206
St. Sebastian’s College vs Prince of Wales’

புனித செபஸ்டியன் கல்லூரி மற்றும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் சமர், இம்முறை எதிர்பாராத முறையில் நிறைவுற, சிறந்த பந்துவீச்சு மூலம் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியிருந்த புனித செபஸ்டியன் கல்லூரி டக்வத்-லூயிஸ் முறையில் இச்சமரில் 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றுக் கொண்டது.

இரு பாடசாலைகளுக்கும் இடையில், 32ஆவது தடவையாக இடம்பெற்ற இம்மாபெரும் சமரினை காணவந்திருந்த ரசிகர்கள் கூட்டம் மைதானத்திற்குள் அத்து மீறி நுழைந்து சலசலப்பை ஏற்படுத்தியதன் காரணமாக, நடுவர்கள் போட்டியை நிறுத்த வேண்டி ஏற்பட்டதுன், செபஸ்டியன் கல்லூரி அணி 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாகவும் அறிவிப்பு செய்தனர்.

முன்னதாக, டி சொய்ஸா மைதானத்தில் தொடங்கிய போட்டியின் நாணய சுழற்சியினை தனதாக்கி கொண்ட, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் தலைவர் விஷ்வ சத்துரங்க துடுப்பாட்டத்திற்கு சாதகமாய் அமைந்திருந்த ஆடுகள நிலைகளினைக் கருத்திற் கொண்டு முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

இதன்படி, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியின் ஆரம்ப வீரர்கள், துப்பாக்கியில் இருந்து பாயும் தோட்டாக்கள் போன்று விரைவாகச் செயற்பட்டு, 5.5 ஓவர்களில் 7.8 என்கிற ஓட்ட சராசரியுடன் 43 ஓட்டங்களை குவித்து சிறப்பான ஆரம்பத்தினை தந்தனர்.

கேம்பிரியன்கள் என அழைக்கப்படும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி வீரர்களில் முதல் விக்கெட்டாக, சதுன் பெர்னாந்து 22 பந்துகளிற்கு 15 ஓட்டங்களினைப் பெற்ற நிலையில், இலங்கை அணியின் ஒரு நாள் குழாமினை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த அவிஷ்க பெர்னாந்துவின் துல்லியமான பந்து வீச்சு மூலம் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டார்.

[rev_slider dfcc728]

.

அதனை தொடர்ந்து, சிறிது நேரத்தில் அணித்தலைவர் விஷ்வ சத்துரங்க 26 ஓட்டங்களுடன் ஓய்வறை நோக்கி திரும்பினார்.

பின்னர் மூன்றாம், நான்காம் வீரர்களான சபின் தர்ஷிக்க மற்றும் அவிந்து பெர்னாந்து ஆகியோர், 27 ஓட்ட இணைப்பாட்டத்துடன் அணியை ஓரளவு வலுப்படுத்தினர்.

தர்ஷிக்க 17 ஓட்டங்களுடன், பிரவீன் ஜயவிக்ரமவினால் வீழ்த்தப்பட, மறுமுனையில் சிறப்பாகச் செயற்பட்டிருந்த அவிந்து பெர்னாந்து (21) தாஷிக் பெரேராவின் இரண்டாவது விக்கெட்டாக சுருட்டப்பட்டார்.

பின்னர், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை கைப்பற்றி அழுத்தம் தந்த செபஸ்டியன் பந்து வீச்சாளர்களால், 43.4 சகல விக்கெட்டுக்களையும் இழந்து பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி 159 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில், எதிரணிக்கு அதிக சேதம் விளைவித்த தாஷிக் பெரேரா, வெறும் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். அத்துடன், நிமேஷ் பண்டார ஓட்டமற்ற இரண்டு ஓவர்களை வீசியதோடு, பத்து ஓவர்களிற்கு வெறும் 19 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளிற்கு தன் பெயரினை பதிவு செய்திருந்தார்.

பின்னர், வெற்றியலக்கினை தொடும் பந்தயத்தில் பங்குபெற மைதானம் நுழைந்த புனித செபஸ்டியன் கல்லூரியின் அவிஷ்க பெர்னாந்து மற்றும் மலிந்த பீரிஸ் ஆகியோர் சிறப்பான ஆரம்பத்தினை தந்தனர்.

களத்தில் நின்ற பெர்னாந்து, கெளமல் நாணயக்காரவின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க முன், அணிக்குப் பெறுமதி சேர்க்கும் வகையில் அதிரடி அரைச்சதத்தினை விளாசியதோடு, மொத்தமாக 48 பந்துகளில் 56 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதனையடுத்த துடுப்பாட வந்த செபஸ்டியன் கல்லூரியின் அணித்தலைவர் மிஷென் சில்வா மற்றும் நிமேஷ் பண்டார ஆகியோர் குறைவான ஓட்டங்களுடன் வீழ்ந்தனர்.

எனினும், களத்தில் நின்ற மலிந்த பீரிஸ் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 62 ஓட்டங்களின் துணையுடன், 33.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களினைப் பெற்ற புனித செபஸ்டியன் கல்லூரி டக்வத் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றுக்கொண்டதோடு, இப்போட்டியுடன் தொடர்ச்சியாக கடந்த மூன்று வருட ஆட்டங்களிலும் வெற்றி பெற்று எதிரணியினால் அசைக்க முடியாது இருக்கின்றது.

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியில், சவிந்து பீரிஸ் மாத்திரம் சிறப்பாக செயற்பட்டு 21 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி -159 (43.4) – விஷ்வ சத்துரங்க 26, அவிந்து பெர்னாந்து 21, தஷிக் பெரேரா 4/25, நிமேஷ் பண்டார 3/19

புனித செபஸ்டியன் கல்லூரி – 154/4 (33.1) – மலிந்த பீரிஸ் 62*, அவிஷ்க பெர்னாந்து 56, சவிந்து பீரிஸ் 3/21

போட்டி முடிவு – புனித செபஸ்டியன் கல்லூரி 62 ஓட்டங்களால் வெற்றி (D/L முறையில்)