இலங்கை பாடசாலைகள் கால்பந்து சங்கம் கடந்த வருடம் நடாத்திய பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் 01 அணிகளுக்கான தொடரின் மூன்றாவது இடத்திற்கான போட்டியின் மறு போட்டியாக, இவ்வருடத்தின் ஜனாதிபதி கிண்ணத்திற்கான இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளது.

இந்த மோதல் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிக்கும் ஜனாதிபதிக் கிண்ணத்தை நடாத்தும் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரிக்கும் இடையில் ஜனவரி மாதம் 22ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு ரேஸ்கோஸ் மைதானத்தில் இடம்பெற உள்ளது.  

கடந்த வருடம் பூராகவும் பல வெற்றிகளை இறுதிக் கட்டத்தில் தவறவிட்ட மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி, அவற்றுக்கு பரிகாரமாக இந்த வருடம் வெற்றியுடன் தமது பயணத்தை ஆரம்பிக்கும் நோக்குடன் இந்த இறுதிப் போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.  

ஜனாதிபதி கிண்ண இறுதிப் போட்டிக்கு மாரிஸ் ஸ்டெல்லா, ஹமீத் அல் ஹுசைனி அணிகள் தெரிவு

ஜனாதிபதி கிண்ணத்துக்கான இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்நோக்கில்,  விறுவிறுப்பாக இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில்..

அதேவேளை, கடந்த வருடம் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட போட்டியின் வெற்றியாளர்களான ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி, கடந்த வருடம் டிவிஷன் 1 போட்டிகளில் மாரிஸ் ஸ்டெல்லாவுடனான தோல்வியினால் வெண்கலப் பதக்கத்தையும் இழந்தது.

அதேவேளை, கடந்த வருட ஜனாதிபதிக் கிண்ண தொடரில் களுத்துறை முஸ்லீம் வித்தியாலயத்துடனான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று வென்ற சம்பியன் கிண்ணத்தை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கிலும் இப்போட்டியில் காலடி எடுத்து வைக்கின்றது.  

இறுதிப் போட்டிக்கான பாதை

ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி

அரை இறுதிப் போட்டியில் புத்தளம் ஸாஹிரா கல்லூரியை 6-0 என்ற கோல்கள் அடிப்படையிலும், காலிறுதியில் நாலந்த கல்லூரியை 4-0 என்ற கோல்கள் அடிப்படையிலும் மிக இலகுவாக வெற்றி கொண்டது. இருந்த போதிலும் தமது முதல் போட்டியில் புனித பெனெடிக்ட் அணியுடன் 2-1 என்ற கோல்கள் கணக்கில் மிகவும் சிரமமான போட்டியின் பின்னே ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி அணி வெற்றி பெற்றது.

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

இவர்கள் மிக கடினமான போட்டிகளின் பின்பே இறுதிப் போட்டியை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயம். அரை இறுதிப் போட்டியிலும் காலிறுதிப் போட்டியிலும் முறையே டி மெசனொட் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரி அணிகளுடன் பெனால்டி முறையிலேயே போட்டியை வென்றது.

இரு போட்டிகளிலும் இறுதி நேர முடிவின் பின்னர் 1-1 என்ற நிலை காணப்பட்ட போதும், டி மெசனொட் கல்லூரியுடன் 4-2 என்றும் பேதுரு கல்லூரியுடன் 3-2 என்றும் பெனால்டி வித்தியாசத்தில் வென்றமை ரசிகர்கள் அனைவரையும் மயிர் சிலிர்க்க வைத்த ஓர் காட்சியாக அமைந்தது.

ஆனால் இவர்களின் முதல் போட்டியான தர்ஸ்டன் கல்லூரியுடனான போட்டியில் 4-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்றமை இவர்களின் திறமைகளை மெம்மேலும் வெளிப்படுத்துவதாக அமைகின்றது.

முக்கிய வீரர்கள்

மாரீஸ் ஸ்டெல்லா கல்லூரி

அணித்தலைவர் அஞ்சன குணவர்தன மத்திய கள நிலையில் இருந்து அணியை முன்னோக்கி நகர்த்தும் அணியின் மிகப்பெரும் சொத்து. இதுவரை மூன்று போட்டிகளில் வெளியாடியுள்ள இவர் தன் பெயரின் கீழ் இரண்டு கோள்களை பதிவு செய்துள்ளார்.

தத்சர பெர்னாண்டோ இலவச உதைகளை மிகவும் சிறப்பான நுட்பங்களை உபயோகித்து கோல்களாக மற்றும் வல்லமை கொண்டவர். அரை இறுதிப் போட்டியில் இவரது இலவச உதைகளை கோல்களாக மாற்றும் வல்லமையே இவரது திறமைக்கும் அணிக்கும் கை கொடுத்தது என்றால் மிகையாகாது.

கோல் காப்பாளர் உமேஷ் சஞ்சய இவ்வணியில் உள்ள மற்றுமோர் குறிப்பிடத்தக்க வீரர். இவரின் திறமையான கோல் காப்பு உத்திகளே பேதுரு கல்லூரியுடனான காலிறுதிப் போட்டியில் மாரீஸ் ஸ்டெல்லா அணியினரை வெற்றிப் பாதையில் இட்டுச் சென்றது.

ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி

இக்கல்லூரி அணியின் தலைவரும் ரட்னம் விளையாட்டுக் கழகத்தின் வீரருமான அமான் பைஸர் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி, அணிக்காக இரண்டு கோள்களை பெற்றுக்கொடுத்துள்ளார். ஹமீத் அல் ஹுசைனி அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற வேண்டுமாயின் இவரின் பங்களிப்பு இன்றியமையாதது.

மொஹமட் சாஜித் மற்றுமோர் சிறப்பான மத்திய கள வீரர். இவர் இப்போட்டித்தொடர் முழுவதும் அணிக்காக தன் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். அதே திறமையை அவர் இறுதிப் போட்டியிலும் காண்பித்தால் அது அவ்வணிக்கு மிகவும் சாதகமாக அமையும்.

இறுதியாக தினேஷ் ஸ்டீவன், இத்தொடரின் மிக உயரமான கோல் காப்பாளர். சென்ற வருடம் அநுராதபுரத்தில் நடந்த தேசிய மட்ட கால் பந்துத் தொடரை ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி கைப்பற்றுவதற்கு பக்க பலமாக இருந்தவர் என இவரைக் கூறலாம்.

அதேபோன்று, இப்போட்டித் தொடரிலும் ஒரேயொரு கோலை மாத்திரம் நழுவவிட்டு, சென்ற வருடத்தைப் போன்றே இடத்தொடரிலும் தனது கல்லூரிக்காக சிறந்த முறையில் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

முன்னைய சந்திப்புகள்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 1 – 0 ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி
(SLSFA 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் 01 தொடரின் மூன்றாவது இடத்திற்கான போட்டி 2016)

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 2 – 0 ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி
(SLSFA 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் 01 தொடரின் இறுதிப்போட்டி – 2015)

போட்டியில் எதிர்பார்ப்பு  

கடந்த சந்திப்புக்களில் இருந்து பார்க்கும்போது மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிக்கு கிண்ணத்தை தன் வசப்படுத்திக்கொள்ள அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிந்தாலும் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி இதுவரை விளையாடி வந்த விதத்தையும் அவர்கள் கடந்த வருடங்களில் வீழ்த்திய அணிகளையும் அவர்களின் ரசிகர்கள் அவர்களுக்கு வழங்கும் ஒத்துழைப்பையும் பார்க்கும்போது இரு தரப்புக்கும் வாய்ப்புகள் உள்ளன.

எவ்வாறிருப்பினும் அனைவரதும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இடம்பெறவுள்ள இந்த தீர்மானம் மிக்க இறுதிப் போட்டி மிகப் பெரிய மோதலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.