அகலங்க கனேகமவின் பந்துவீச்சால் தமிழ் யூனியனுக்கு நெருக்கடி

119

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் மூன்று போட்டிகள் இன்று (05) ஆரம்பமாகின.

NCC எதிர் இலங்கை இராணுவப் படை விளையாட்டுக் கழகம்

மத்தியவரிசையில் வந்த அணித் தலைவர் அஞ்செலோ பெரேரா வேகமாக பெற்ற 80 ஓட்டங்கள் மூலம் NCC அணி, இலங்கை இராணுவப் படை அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் கௌரவமான ஓட்டங்களை பெற்றது.

பனாகொடை இராணுவப் படை மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய NCC அணி ஓட்டம் பெறும் முன்னர் ஆரம்ப விக்கெட்டை பறிகொடுத்ததோடு 7 ஓட்டங்களை பெறுவதற்குள் மேலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

குறிப்பாக இராணுவ கழகத்தின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் லியனபதிரன அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதால் NCC அணி 66 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் அடுத்து வந்த அஞ்செலே பெரேரா 99 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்ஸகளுடன் 80 ஓட்டங்களை விளாச NCC அணி 100 ஓட்டங்களை கடந்தது. எனினும் NCC அணி முதல் இன்னிங்சுக்காக 224 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இலங்கை கிரிக்கெட்டுக்காக சேவை புரிய வந்திருக்கும் அவுஸ்திரேலிய உளவியலாளர்

இந்நிலையில் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இராணுவப் படை விளையாட்டுக் கழகம் முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது நிதானமாக துடுப்பெடுத்தாடி விக்கெட் இழப்பின்றி 92 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 224 (59.2) – அஞ்செலோ பெரேரா 80, சாமிக கருணாரத்ன 39, தரிந்து கௌஷால் 30, பானுக்க ராஜபக்ஷ 29, நுவன் லியனபதிரன 3/40, ஜனித் சில்வா 2/27

இராணுவப் படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 92/0 (28) – லக்ஷித மதுஷான் 52*, நவொத் இலுக்வத்த 29*


தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம்

அனுபவ வேகப்பந்து வீச்சாளர் அகலங்க கனேகம ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த இலங்கை துறைமுக அதிகார சபை அணிக்கு எதிராக தமிழ் யூனியன் கழகம் முதல் இன்னிங்சில் 120 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தமிழ் யூனியன் கழகத்தின் ஆரம்ப வரிசையில் வந்த எந்த வீரரும் நின்றுபிடித்து ஆடவில்லை. மத்தியவரிசையில் களமிறங்கிய சகலதுறை வீரர் ஜீவன் மெண்டிஸ் பெற்ற 32 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டமாகும்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை துறைமுக அதிகார சபை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றுள்ளது. அந்த அணி தமிழ் யூனியனை விடவும் 49 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 120 (44.5) – ஜீவன் மெண்டிஸ் 32, ஷாலிக்க கருனநாயக்க 25, அகலங்க கனேகம 5/35, சமிந்த பண்டார 2/34, சானக்க கோமசாரு 2/37  

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 169/6 (41) – என்.ஆர்.டி. கொம்ப்டன் 56, கயான் மனீஷன் 43, கிஹான் ரூபசிங்க 38, தினுக் விக்ரமனாயக்க 4/16


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

அணித் தலைவர் அஷான் பிரியஞ்சன் மற்றும் லசித் அபேரத்னவின் நிதான துடுப்பாட்டத்தின் மூலம் ராகம கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக கொழும்பு கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸில் ஸ்திரிமான ஓட்டங்களை பெற்றது.

சிலாபம் மேரியன்ஸ் மற்றொரு வெற்றியுடன் ப்ரீமியர் லீக் தொடரில் ஆதிக்கம்

தனது சொந்த மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் மத்தியவரிசையில் அஷான் பிரியஞ்சன் 70 ஓட்டங்களையும், லசித் அபேரத்ன 96 ஓட்டங்களையும் பெற்று கைகொடுத்தனர்.

இதன் மூலம் கொழும்பு கிரிக்கெட் கழகம் தனது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்களை எடுத்தது. ராகம கிரிக்கெட் கழகம் சார்பில் சுழல் வீரர்களான நிஷான் பீரிஸ் மற்றும் சஹன் நாணயக்கார ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த ராகம கிரிக்கெட் கழகம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 63 ஓட்டங்களை பெற்றுள்ளது.  

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 273 (62.1) – லசித் அபேரத்ன 96, அஷான் பிரியஞ்சன் 70, லஹிரு மதுஷங்க 33, ரொன் சந்திரகுப்தா 24, நிஷான் பீரிஸ் 3/55, சஹன் நாணயக்கார 3/74, இஷான் ஜயரத்ன 2/55

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 63/3 (24.3) – ஷெஹான் பெர்னாண்டோ 30, லஹிரு மதுஷங்க 2/13

போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்