இறுதி நிமிட த்ரில் வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது பாடும்மீன்

876

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு இரண்டிற்கான பிரீமியர் லீக் கால்பந்து சுற்றுத் தெடரின், காலிறுதியாட்டத்தில் தமிழர் ஜக்கிய விளையாட்டுக் கழகத்தை இறுதித் தருவாயில் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பாடும்மீன் விளையாட்டுக் கழகம் தொடரின் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. 

தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டங்களின் நிறைவில் குழு A இன் சம்பியன்களான யாழ்ப்பாணம் பாடும்மீன் அணியினை எதிர்த்து குழு C இன் சம்பியன்களான வலிகாமம் தமிழர் ஐக்கிய அணி இந்த தீர்மானம் மிக்க காலிறுதி ஆட்டத்தில் மோதியது.

பசாலின் அபார கோலினால் பங்களாதேஷை வீழ்த்தியது இலங்கை

பங்களாதேஷ் கால்பந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற..

யாழ்ப்பாணத்தின் பல பிரபல வீரர்களை உள்ளடக்கி, முதலாவது தொழில்முறை கழகமாக உருவாக்கப்பட்டிருக்கும் தமிழர் ஜக்கிய அணியும், கடந்த வருடம் தொடரில் அரையிறுதி வரை முன்னேறிய பாடும்மீன் அணியும் துறையப்பா அரங்கில் களம் கண்டன.  

போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் பாடும்மீனின் இளம் வீரர்களான ஹெய்ன்ஸ், சாந்தன் ஆகியோரது முயற்சிகளை, தமிழர் ஐக்கிய அணியின் இளம் கோல் காப்பாளர் அமல்ராஜ் லாவகமாகத் தடுத்தார்.

வேகமாக சுதாகரித்துக்கொண்ட தமிழர் ஐக்கிய அணிக்கு மத்திய களத்திலிருந்து மகீபனினால் சிறப்பான பந்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டபோதும் முன்கள வீரர்கள் அதனைக் கோலாக்கத் தவறினர்.

போட்டியின் 26ஆவது நிமிடத்தில் பாடும்மீனின் கப்டன் மத்திய கோட்டிற்கு அண்மையிலிருந்து கோலினை நோக்கி உதைந்தபோதும் பந்து நேரடியாக அமல்ராஜின் கைகளுக்கே சென்றது.    

36ஆவது நிமிடத்தில் தமிழர் ஜக்கிய அணியின் பிறேம்குமார் கோலினை நோக்கி பந்தினை நகர்த்திச் சென்றவேளை, கோல் காப்பாளர் தடுமாறியபோதும், பாடும்மீனின் பின்கள வீரர்களால் லாவகமாக பந்து தடுக்கப்பட்டது.

கிரேட் ஸ்டார் அணியை வீழ்த்திய பாடும்மீன் அணிக்கு டிவிஷன் 2 தொடரின் மூன்றாம் இடம்

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால்..

அடுத்த நிமிடத்திலேயே ஜக்கிய அணி வீரர்  ஜெகன் கோலை நோக்கி உதைந்த பந்து கோல் காப்பாளரின் கைகளில் பட்டபோதும், பாடும்மீன் பின்கள வீரர் கேர்ஷோனின் உடலில் பட்டு பந்து ஓவ்ன் கோலாக மாறியது. இதனால், வலிகாமத் தரப்பு முன்னிலை பெற்றது.

தமிழர் ஐக்கிய அணிக்கு பிறேம்குமார்  உள்ளனுப்பிய பந்தினை, அன்ரனி உதயதாஸ் கோலினை நோக்கி உதைந்தபோதும் பந்து கம்பத்தின் அருகால் வெளியே சென்றது.  

தமிழர் ஜக்கிய அணியின் ஒரே கோலுடன் நிறைவிற்கு வந்தது முதலாவது பாதியாட்டம்.

முதல் பாதி: தமிழர் ஜக்கிய வி.க 01 – 00 பாடும் மீன் வி.க

இரண்டாவது பாதியின் ஆரம்ப நிமிடத்திலேயே, பாடும்மீன் தரப்பிற்கு கிடைத்த ப்ரீ கிக்கை சாந்தன் உள்ளனுப்பிய போதும் கீதன் ஹெடர் மூலம் கோலாக்கத் தவறினார்.   

தமிழர் ஜக்கிய அணியின் பிறேம் குமாரிற்கு மேலுமொரு வாய்ப்புக் கிடைத்தபோதும் பந்து நேரடியாக கோல்காப்பாளர் பிரதீபனின் கைகளிற்கே சென்றது.   

போட்டியின் 52ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு வாய்ப்புக்கள் கிடைத்தபோதும், அவற்றை கோலாக்க தவறினார் ஹெய்ன்ஸ்.

அடுத்த முயற்சியாக, மயூரன் கோலை நோக்கி அடித்த பந்து அமல்ராஜின் கைகளில் பட்டு தவறியபோதும் ரூபன்ராஜ் அந்தப் பந்தினை வெளியேற்றினார்.

இரண்டாவது பாதியில் பாடும் மீனின் ஆட்டம் வேகமெடுக்க மைதானத்தின் எல்லையினைச் சூழ்ந்தனர் ரசிகர்கள்.  

சாந்தன், விசோத்,  மயூரன் ஆகியோரது அடுத்தடுத்த முயற்சிகள் தடுக்கப்பட்ட போதும், தொடர் முயற்சிகளின் பலனாக போட்டி நிறைவடைவதற்கு 10 இற்கும் குறைவான நிமிடங்களிருக்கையில் சாந்தன் உதைந்த ப்ரீ கிக் பந்தை ஹெடர் செய்த வேளையில், ஐக்கிய அணியின் பெனால்டி எல்லையினுள் அவ்வணி வீரரது கைகளில் பந்து பட்டமையினால் பாடும் மீன் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.  

கிடைக்கப் பெற்ற பெனால்டி வாய்ப்பினை பிராங்கோ கோலாக மாற்றினார். கோல் கணக்கை சமப்படுத்திய பாடும்மீன் அணி வெற்றி கோலிற்காக விரைவான முயற்சிகளை மேற்கொண்டனர்.

பாடும்மீன் வீரர் ஜோசெப் உள்ளுதைந்த பந்தை அமல்ராஜ் சேகரித்த போதும், போட்டியின் இறுதி நிமிடத்தில் வலது பக்கத்திலிருந்து கோல் கம்பத்தினை நோக்கி உதையப்பட்ட பந்தினை கோலாக மாற்றினார் விசோத்.   

பிஃபா சிறந்த வீரர் விருதுக்கு ரொனால்டோ, மொட்ரிக், சலாஹ் போட்டி

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின், 2018 பிஃபா..

இரண்டாவது பாதியில் அபாரமான அட்டத்தினை வெளிப்படுத்திய பாடும்மீன் அணி இறுதி நிமிட கோலுடன், தொடர்ச்சியான இரண்டாவது வருடமாகவும் பிரிவு 2 பிரீமியர் லீக் போட்டித்தொடரின் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

இந்த அணி அரையிறுதிப் போட்டியில் இலங்கை சிறைச்சாலைகள் விளையாட்டுக் கழக அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம் – தமிழர் ஜக்கிய வி.க 01 – 02 பாடும் மீன் வி.க

போட்டியின் நிறைவில் பாடும்மீன் அணியின் பயிற்றுவிப்பாளர் உதயனன் Thepapare.comஇற்கு கருத்து தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தின் முன்னணி வீரர்களை உள்ளடக்கிய தமிழர் ஜக்கிய அணியை வெற்றிபெற்றது மிகுந்த நம்பிக்கையையும் மகிழ்வையும் அளிக்கின்றது. இன்றைய வெற்றிக்கு இரண்டாவது பாதியில் எமது வீரர்கள்  வெளிப்படுத்திய ஆக்ரோசமான ஆட்டமே காரணம்என குறிப்பிட்டார்.

அரையிறுதிப் போட்டி குறித்து கருத்துத் தெரிவித்த அவர் கடந்த வருட தொடரின் அனுபவத்தினை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அடுத்துவரும் போட்டியை மிகவும் சிறப்பாக எதிர்கொள்வோம்.“ என்றார்.  

மேலும், இந்த போட்டித் தொடரில் எமது பிரதேச அணிகள் எமக்குள்ளேயே அடுத்தடுத்து மோதுகின்றமையினால் வடக்கின் ஒரு அணிக்கு மட்டுமே தொடரில் முன்னேறும் வாய்ப்பு கிடைக்கின்றது. இனிவரும் காலங்களில் போட்டி அட்டவணை இவ்வாறாக அல்லாது நாடு பூராகவும் பரவலாக தயாரிக்கப்படுமாயின் எமது பிராந்திய வீரர்களுக்கு பெரிய அனுபவக்களமாக அது அமையும். “ எனவும் உதயனன் குறிப்பிட்டார்.

கோல் பெற்றவர்கள்

தமிழர் ஜக்கிய வி.க கேர்சோன் 37′ (OG)

பாடும்மீன் வி.க பிறாங்கோ (P), விசோத் 91′

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<