டிவிஷன் II சம்பியனாக முடிசூடிய பேருவளை கிரேட் ஸ்டார்

775

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் பிரீமியர் லீக் பிரிவு 2 அணிகளுக்கு இடையிலான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்றைய (21) தினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மின்னொளியில் இடம்பெற்றிருந்தது.

நேற்றைய போட்டியில்  மாவனல்லை யுனைட்டட் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தினேஷ் அபேரத்னவின் கோலின் துணையுடன் வெற்றிபெற்ற பேருவளை கிரேட் ஸ்டார் அணியை எதிர்த்து ஏறாவூர் யங் ஸ்டார் அணியை பெனால்டியில் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் பாடும்மீன் அணி மோதியது.

கடற்கரையில் ஓடி விளையாடி இளையோர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பாரம

அரையிறுதிப் போட்டியில் கிடைத்த வெற்றியுடன் இரு அணிகளும் அடுத்த பருவகாலத்தில் பிரிவு ஒன்றிற்கு தரமுயர்த்தப்பட்டுள்ள அதேவேளை, இன்றைய தினம் தொடரின் வெற்றியாளர் யார்? என்பதனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது. யாழில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களைக் கொண்ட பாடும்மீன் அணியின் ரசிகர்களிற்கு, சவால்விடும் அளவிற்கு பேருவளை ரசிகர்கள் துரையப்பா மைதானத்தினை பெரும் எண்ணிக்கையில் ஆக்கிரமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விரு அணிகளும் கடந்த வருடமும் பிரிவு 2 அணிகளுக்கு இடையிலான தொடரில் அரையிறுதியுடன் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் 5 ஆவது நிமிடத்தில் பாடும்மீனின் கீதன் மைதானத்தின் இடது பக்கத்திலிருந்து உள்ளனுப்பிய பந்தினை பேருவளை வீரர்கள் வெளியேற்றினர்.

அடுத்த சில நிமிடங்களில் கீதன் அதே திசையிலிருந்து மேற்கொண்ட மற்றொரு முயற்சியின் போதும் பந்து நேரடியாக கோல்காப்பாளரின் கைகளுக்குச் சென்றது.

11 ஆவது நிமிடத்தில் இடது பக்கத்திலிருந்து கோலை நோக்கி உதையப்பட்ட பந்தினை, பாடும்மீனின் கோல்காப்பாளர் பிரதீபன் கைகளால் தட்டிவிட  கிரேட் ஸ்டார் அணியின் இளைய வீரர் அவிஷ்க கவிந்து கோலை நோக்கி உதைய பந்து கோலிற்கு மேலால் வெளியேறியது.

இரு தரப்பினரும் எதிரணியின் கோல் பரப்பினை ஆக்கிரமிக்க முயற்சித்தபோதும் பின்கள வீரர்கள் சிறப்பாக தடுத்தாடினர்.

26 ஆவது நிமிடத்தில் பற்றிக்ஸ் கல்லூரி முன்கள வீரர் ஹேய்ன்ஸ் உள்ளனுப்ப கோல் காப்பாளர் அஜித் குமார சிறப்பாக தடுத்தார்.

சில நிமிடங்களில், கிரேட் ஸ்டான் தினேஷ் அபேரத்யரத்ன மத்திய கோட்டிலிருந்து கோலினை நோக்கி உதைந்த பந்து, மயிரிழையில் கம்பத்திற்கு மேலால் வெளியேறியது.

30 ஆவது நிமிடத்தில் பாடும்மீன் கழகத்தின் சாந்தன் கோலிற்கு உதைந்த பந்து, சற்று உயர்ந்து வெளியேறியது. அடுத்த 5 நிமிடங்களில் பாடும்மீன் அணியினர் தொடர்ச்சியாக கோல் வாய்ப்புக்களை உருவாக்கியபோதும் அவற்றை சிறப்பாக நிறைவுசெய்ய முடியவில்லை.

முதலாவது பாதியில் இரு அணிகளினதும் முன்கள வீரர்கள் கோல் முயற்சிகளை மேற்கொண்ட போதும், எதனையும் சாதகமாக நிறைவுசெய்ய முடியவில்லை.

முதல் பாதி: பாடும்மீன் விளையாட்டுக் கழகம் 0 – 0  கிரேட் ஸ்டார் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதியின் 4 ஆவது நிமிடத்தில் கிரேட் ஸ்டாரின் முன்கள வீரர் வலது பக்கத்திலிருந்து கோலை நோக்கி உதைந்த பந்து பாடும்மீன் அணியின் பின்கள வீரர் கிரிஸ்ரியனில் பட்டு கோலாக மாற, போட்டியில் முதல் கோலை கிரேட் ஸ்டார் பதிவுசெய்தது.

கிரேட் ஸ்டாரின் கோலிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கீதன் கோலை நோக்கி வேகமாக எடுத்துச் சென்ற பந்தினை சாந்தனின் கால்களிற்கு வழங்க, அந்த பந்தை முன்னே நகர்த்த சாந்தன் தவறினார்.

திசரவுடன் இறுதிவரை துடுப்பெடுத்தாடியிருந்தால் போட்டியின் முடிவை மாற்றியிருக்கலாம் – தசுன் சானக

சாந்தன் அடுத்தடுத்து மேற்கொண்ட முயற்சிகளை, கோல்காப்பாளர் அஜித் குமார சிறப்பாக தடுத்தார்.

சிறந்த பந்துப் பரிமாற்றத்தின் மூலம் பாடும்மீனின் கோல் பரப்பினை ஆக்கிரமித்த கிரேட் ஸ்டாரின் முன்கள வீரர்கள் மொஹமட் பைனாஸ் மூலமாக அடுத்த கோலைப் பதிவு செய்தனர்.

64 ஆவது நிமிடத்தில் மத்திய களத்திலிருந்து உதையப்பட்ட பந்தினை, கோல்காப்பாளர் பிரதீபன் பந்தினை முன்னேறி வந்து சேகரிக்க முயன்றபோது, பந்தினை பெற்ற தினேஷ் அபேயரத்ன கோலை நோக்கி தட்டிவிட்டார், எனினும் பந்து கோல் கம்பத்திற்கு அருகாமையினால் வெளியேறியது.

பின்னர் கீதன் கோலை நோக்கி உதைந்த பந்தினை கோல்காப்பாளர் அஜித் குமார சிறப்பாக தடுத்தார்.  

வலது பக்கத்திலிருந்து மயூரன் சிறப்பாக உள்செலுத்திய பந்தினை, கீதன் நேர்த்தியாக பாய்ந்து, தலையால் முட்டி கோலாக்கினார்.

பெறப்பட்ட அந்த கோலுடன், மேலும் ஒரு கோலைப் பெற்று ஆட்டத்தை சமப்படுத்தும் முனைப்புடன் வேகமாக ஆடிய யாழ் தரப்பினர், அடுத்தடுத்து இரு வாய்ப்புக்களை சாந்தன் மூலம் உருவாக்கிய போதும் அஜித் குமார சிறப்பாக தடுத்தார்.

பேருவளை தரப்பினர் தமது வெற்றியை உறுதி செய்யும் நோக்கில், நேர்த்தியான விளையாட்டுக்கு எத்தனித்தனர்.

யாழ் தரப்பினர் பந்தினை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும் அதனை, கோலாக்குவற்கு மேற்கொண்ட முயற்சிகளை பேருவளை வீரர்கள் தடுத்தனர்.

இழப்பீட்டு நேரமாக 5 நிமிடங்கள் வழங்கப்பட, இறுதி நிமிடத்தில் மத்திய கோட்டிற்கு அருகில் கிடைத்த ப்ரீ கிக்கினை சாந்தன் கோலை நோக்கி உதைய, அந்த பந்தை பாடுமீன் முன்கள வீரர் கோலாக்குவதற்கு முயற்சித்தபோதும் பந்து கம்பத்திற்கு மேலால் வெளியேறியது.

தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை நேர்த்தியாக நிறைவு செய்தும், சிறப்பான தடுப்பாட்டத்தினையும் மேற்கொண்ட பேருவளை கிரேட் ஸ்டார் அணியினர் பிரிவு 2 இன் சம்பியன்களாக முடிசூடினர்.

முதல் பாதி: பாடும்மீன் விளையாட்டுக் கழகம் 1 – 2  கிரேட் ஸ்டார் விளையாட்டுக் கழகம்

Thepapare.com இன் ஆட்டநாயகன் – அஜித் குமார (கிரேட் ஸ்டார் வி.க)

கோல் பெற்றவர்கள்

கிரேட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் – கிறிஸ்ரியன் (OG) 49’, மொஹமட் பைனாஸ் 62′

பாடும்மீன் விளையாட்டுக் கழகம் – வின்சன் கீதன் 75′

மஞ்சள் அட்டைகள்

பாடும்மீன் விளையாட்டுக் கழகம் – வின்சன் கீதன் 65′

கிரேட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் – மொஹமட் பைனாஸ் 62′, மொஹமட் றிம்சின் 80’

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<