நடுவர் பணியில் இருந்து விலகும் பிரஷான்த் ராஜ்கிறிஷ்னா

289

இலங்கையில் அதிகமானவர்களால் மதிக்கப்படும் தலைசிறந்த கால்பந்து நடுவர்களில் ஒருவரான பிரஷான்த் ராஜ்கிறிஷ்னா, தனது நடுவர் பணியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். 

தற்பொழுது 39 வயதை அடைந்துள்ள ராஜ்கிறிஷ்னா தான் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவை அவரது பேஸ்புக் தளத்தின் ஊடாக மக்களுக்கு அறியப்படுத்தியுள்ளார்.

லைட் ஹவுஸ், கொலொன்ஸ் அணிகளின் வெற்றியுடன் ஆரம்பித்த FA கிண்ணம்

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில்…

”கடந்த 3 வருடங்களாக ஆசிய கால்பந்து சம்மேளனத்தினதும், பிஃபாவினதும் நடுவராக இருந்த அதேவேளை, கடந்த 11 வருடங்களாக கடமையாற்றி வந்த இந்த நடுவர் பணிக்கு கடினமான இதயத்தோடு முற்றுப்புள்ளி வைக்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

நடுவர்கள் சங்கத்தில் இடம்பெறுகின்ற உள்ளக அரசியல் விவகாரங்களே, தான் அதிகமாக நேசித்த இந்தப் பணியில் இருந்து விலகிக் கொள்வதற்கான அதிரடி முடிவை ராஜ்கிறிஷ்னா எடுக்க காரணமாக இருந்தது என்று நம்பப்படுகின்றது.   

”நான் ஒரு அரசியல்வாதியல்ல. நான் ஒரு கால்பந்து பிரியன். இது ஒரு கடினமான முடிவு. எனினும் எனக்கு வேறு தெரிவு இருக்கவில்லை” என ராஜ்சிறிஷ்னா கால்பந்து விளையாட்டு மீது வைத்திருந்த காதலை குறிப்பிட்டார்.

அவர் ஆசிய கால்பந்து கூட்டமைப்பினது (AFC) போட்டிகளிலும், பல சர்வதேசப் போட்டிகளிலும் நடுவர் பணியை மேற்கொண்டுள்ளார். உள்நாட்டில், இலங்கையின் மிகப் பெரிய கால்பந்து தொடரான டயலொக் சம்பியன்ஸ் லீக் மற்றும் எப்.ஏ கிண்ணத் தொடர் என்பவற்றில் தனது கௌரவமான பணியை பல வருடங்களாக செய்திருக்கின்றார். இதில் குறிப்பாக 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற எப்.ஏ கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியையும் குறிப்பிடலாம்.

நிர்வாகிகள் வழங்காத நிலையில், தான் நடுவராக ஈடுபடும் போட்டிகளில் தனது சர்வதேச தகவல் பரிமாற்ற சாதனங்களை பயன்படுத்தி பணியை சிறப்பாக மேற்கொண்ட ஒரு நடுவராக இவர் உள்ளார். போட்டி ஒழுங்குகளை மிகவும் கடுமையாக பின்பற்றும் இவர், தீர்ப்புகளையும் சிறந்த முறையில் வழங்கும் ஒருவர்.

இவை அனைத்திற்கும் மேலதிகமாக, அனைத்து வீரர்களும், பயிற்றுவிப்பாளர்களும், ஊடகங்களும் இவரை மதித்தமை ராஜ்கிறிஷ்னா இலங்கையின் முன்னணி நடுவர்களில் ஒருவர் என்பதற்கு சிறந்த உதாரணமாக உள்ளது.  

”என்னோடு கடமையாற்றிய சக நடுவர்கள் மற்றும் AFC யில் பணியாற்றியவர்களுக்கும் நன்றிகள். பிஃபா, AFC மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளனம் என்பவற்றுக்கு எனது வாழ்த்துக்கள். இலங்கையின் கழகங்கள், நடுவர்கள், வீரர்களே.., நான் காண்பித்த அனைத்து மஞ்சள், சிவப்பு அட்டைகளினாலும், எனது தீர்ப்புக்களினாலும் நான் எதிரிகளை சம்பாதித்ததை விட அதிக இதயங்களை வென்றேன் என்பதை நினைக்கும்பொழுது மகிழ்ச்சியடைகின்றேன்.

நான் எனது சகாக்கலோடும், எனது ஊதியுடனுமே களத்திற்குள் நுழைந்தேன். அவ்வாறே களத்தில் கடமையாற்றும் 90 நிமிடங்களையும் சிறந்த முறையில் அனுபவித்தேன். ஒவ்வொரு நாளும் எனது கடமையில் மகிழ்ச்சியடைந்தேன்” என உணர்வுபூர்வமாக அவர் தனது இந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

ஜப்பானிய அணியில் இணையும் பார்சிலோனா ஜாம்பவான் இனியஸ்டா

பார்சிலோனா கால்பந்து கழகத்தின் ஜாம்பவான்…

எவ்வாறிருப்பினும், நான் நீண்ட காலம் விரும்பி வந்த விளையாட்டில் இருந்து ராஜ்கிறிஷ்னா முழுமையாக விடைபெறப்போவதில்லை.

”கால்பந்து எப்பொழுதும் எனது வாழ்வில் ஒரு பகுதி. எனவே, எதிர்காலத்தில் நான் FIFA மற்றும் AFC யின் போட்டி ஆணையாளர் (Match Commissioner) அல்லது நடுவர் மதிப்பீட்டாளராக (or Referee Assessor) கடமையாற்ற எதிர்பார்த்துள்ளேன். அனைவருக்கும் இறைவன் அருள் புரிய வேண்டும்” என்றும் ராஜ்கிறிஷ்னா தெரிவித்துள்ளார்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<