பொலிஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற டயலொக் ரக்பி லீக் சுற்றுப் போட்டியின் இறுதி வாரப் போட்டியில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை 23-22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி CR & FC விளையாட்டுக் கழகம் அபார வெற்றி பெற்றது.

கடந்த வாரத்தில் ராணுவப்படை அணியை வீழ்த்திய உத்வேகத்தில் பொலிஸ் அணி இப்போட்டியில் களமிறங்கியது. மறுமுனையில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்விகளை சந்தித்த CR & FC அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெறப் போராடும் என எதிர்பார்க்கப்பட்டது.

போட்டியின் முதல் ட்ரையினை 90ஆவது செக்கனில் அஷான் டி கொஸ்டா CR & FC அணிக்காக பெற்றார். இதன் மூலம் ஆரம்பத்திலேயே CR & FC அணி முன்னிலை பெற்றது. (பொலிஸ் 00 – 05 CR & FC)

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய CR & FC அணிக்கு கயான் ஜயமான்ன இரண்டாவது ட்ரையினை வைத்தார். ஆரம்ப நிமிடங்களுக்குள்ளேயே CR அணி 10 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது. (பொலிஸ் 00 – 10 CR & FC)

எனினும் சுதாரித்து விளையாடிய பொலிஸ் அணி ரதீஷ செனவிரத்னவின் உதவியுடன் ட்ரை ஒன்றை வைத்தார். கன்வெர்ஷன் உதையை ராஜித சன்சோனி சரியாக அடிக்க வித்தியாசம் 3 ஆக மட்டுப்படுத்தப்பட்டது. (பொலிஸ் 07-10 CR & FC)

சன்சோனி, பொலிஸ் அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை சரியாக உதைத்து பொலிஸ் அணிக்கு மேலும் புள்ளிகளை வரவழைத்தார். (பொலிஸ் 10 – 10 CR & FC)

ஆனால் அவற்றிற்கு பதிலடி கொடுக்கும் முகமாக CR & FC அணி ட்ரை ஒன்றினை பிரின்ஸ் சாமரவினால் வைக்க, மீண்டும் CR & FC அணி முன்னிலை பெற்றது. எனினும் ரதிஷ செனவிரத்ன மீண்டுமொரு ட்ரையினை பொலிஸ் அணிக்காக வைத்தார். (பொலிஸ் 15 – 17 CR & FC)

முதல் பாதி நிறைவடைய முன் பொலிஸ் அணிக்காக ஜோயல் பெரேரா மற்றொரு ட்ரையினை வைக்க பொலிஸ் தரப்பு முன்னிலை பெற்றது.

முதல் பாதி: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 22 – 17 CR & FC விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியில் CR & FC அணி ஆதிக்கம் செலுத்தியது. எனினும் பொலிஸ் அணியின் பின்னிலை வீரர்கள் சிறப்பாக செயற்பட்டு CR & FC அணி வீரர்கள் ட்ரை வைப்பதை தடுத்தனர்.

எனினும் CR & FC அணி அவர்களுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தியது. நலின் குமார அடித்த பெனால்டி உதை கம்பங்களினூடாக செல்ல புள்ளிகள் 20 ஆக உயர்ந்தது. (பொலிஸ் 22-20 CR & FC)

போட்டியின் இறுதிக் கட்டம் மிகவும் ஆக்ரோஷமாகவும் விறுவிறுப்பாகவும் சென்றுகொண்டிருந்தது.

ஆட்டத்தின் 80 நிமிடங்கள் கடந்த நிலையில் CR & FC அணிக்கு இறுதி பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. நலின் குமார 45 மீட்டர் பெனால்டி உதையை லாவகமாக உதைத்து CR & FC அணியின் இறுதி நிமிட வெற்றியை நனவாக்கினார்.

முழு நேரம்: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 22 – 23 CR & FC விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் சிறப்பாட்டக்காரர்ரதீஷ செனவிரத்ன

புள்ளி விபரங்கள்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் ரதீஷ செனவிரத்ன 2T, ஜோயல் பெரேரா 1T, ராஜித சன்சோனி 2C 1P

CR & FC விளையாட்டுக் கழகம் அஷான் டி கொஸ்டா 1T, கயான் ஜயமான்ன 1T, கவிந்து பெரேரா 1T, பிரின்ஸ் குமார 1C, நாளின் குமார 2P