எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் 23 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிகளுக்கான 30 பேர் கொண்ட இலங்கைக் குழாம் தற்போது தெரிவு செய்யப்பட்டு வருகின்றது.

இத் தகுதிகாண் போட்டிகள் ஜூலை மாதம் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், இலங்கை அணியானது ஈரான், ஓமான் மற்றும் போட்டிகளை நடாத்தும் கிர்கிஸ்தான் அணிகளுடன் குழு A இல் இடம்பிடித்துள்ளது.

ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ண தகுதிக்காண் போட்டிகளில் இலங்கை குழு B யில்

எதிர்வரும் 2018ஆம் அண்டு இடம்பெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசிய..

கடந்த பருவகாலத்தில் சிறந்த முறையில் திறமையை வெளிக்காட்டி இக்குழாமில் இடம்பெற அதிக வாய்ப்புள்ள வீரர்கள் தொடர்பான ஒரு கண்ணோட்டம் பின்வருமாறு:

நவீன் ஜூட் (ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்)

Naveen Judeறோயல் கல்லூரி வீரரான 19 வயதுடைய நவீன் ஜூட் கடந்த ஒரு வருட காலமாக ஜாவா லேன் அணியின் மிக முக்கிய வீரராகக் காணப்பட்டு வந்துள்ளார்.

2016 ஆம் ஆண்டின் டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் ஜாவா லேன் அணியானது மிக மோசமான ஆட்டத்தின் காரணமாக தொடர் தோல்விகளை சந்தித்து பிரீமியர் லீக் தொடரில் இருந்து டிவிஷன் 1 பிரிவிற்கு தரமிறக்கம் செய்யப்பட்டது. எனினும் 19 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியின் முன்னாள் வீரரான நவீன், தனி ஒருவராக இருந்து சிறப்பாட்டத்தை வெளிக்காட்டியிருந்தார்.

இத்தொடரின் குழுச்சுற்றின் போது, பொலிஸ் அணி மற்றும் சௌண்டர்ஸ் அணிகளுக்கெதிராக 2 கோல்கள், நிவ் யங்ஸ் மற்றும் விமானப்படை அணிகளுக்கெதிராக 1 கோல் வீதம் பெற்று 8 போட்டிகளில் மொத்தமாக 6 கோல்களை அவர் அடித்திருந்தார்.

இவ்வருடம் இடம்பெற்ற FA கிண்ணத் தொடரில் ஜாவா லேன் அணியானது மீளெழுச்சி பெற்று பிரபல அணிகளுக்கு அதிர்ச்சியளித்து அசத்தியது. அத்தொடரிலும் முக்கிய வீரராக நவீன் ஜூட் காணப்பட்டார். கிருலப்பனை யுனைட்டட் மற்றும் ரினௌன் அணிகளுக்கெதிராக 2 கோல்கள் வீதமும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் முறையே சௌண்டர்ஸ் மற்றும் இராணுவப்படை அணிகளுடனான போட்டிகளில் தலா ஒரு கோல் வீதமும் அடித்து 6 போட்டிகளில் மொத்தமாக 6 கோல்களை பெற்றுக்கொண்டார்.

கடந்த வருடத்தின் டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் முன்னணி வீரரான மொஹமட் இஸ்ஸடீன் மற்றும் நவீன் ஜூட் ஆகியோர் குழுச்சுற்றில் வெளிப்படுத்திய திறமையை ஒப்பிடுகையில், இஸ்ஸடீன்  மொத்தமாக 8 கோல்களை அடித்திருந்தார். FA கிண்ணத்தில் கத்துக்குட்டி அணிகளான ஈஸ்வரன் விளையாட்டுக் கழகம் மற்றும் சுப்பர் சன் அணிகளுக்கெதிராக முறையே 5 மற்றும் 3 கோல்களை இஸ்ஸடீன் பெற்றுக்கொண்டதுடன் நவீன் ஜூட் பிரபல அணிகளான கிறிஸ்டல் பெலஸ், ரினௌன் மற்றும் சௌண்டர்ஸ் கழகங்களை எதிர்கொண்டு திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன் மொஹமட் இஸ்ஸடீன் பல வருடங்களாக இலங்கை அணிக்கு விளையாடிய, நீண்ட அனுபவம் மிக்க முன்னணி வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அபீல் மொஹமட் (கொழும்பு கால்பந்துக் கழகம்)

Afeelஇலங்கையின் வளர்ந்து வரும் இளம் வீரர்களில் ஒருவரான அபீல் மொஹமட், மத்திய களம் மற்றும் பின் களத்தில் விளையாடக் கூடிய வீரராவார். தனது பாடசாலை அணி மற்றும் 19 வயதிற்குட்பட்ட தேசிய அணிகள் சார்பில் இவர் மத்திய களத்தில் விளையாடி வந்த போதிலும், மொஹமட் ரூமியின் பயிற்றுவிப்பின்கீழ் கொழும்பு அணி சார்பாக பின் களத்தின் மத்திய நிலையிலேயே விளையாடி வருகின்றார்.

பின் களத்தின் மத்திய நிலையில் அனுபவ வீரரான மொஹமட் ரமீசுடன் சிறந்த இணைப்பாட்டத்தை அபீல் வெளிப்படுத்தியதுடன், கொழும்பு அணி அடுத்தடுத்து இரண்டு தடவைகள் டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் சம்பியன் பட்டத்தை வெல்வதற்கும், இவ்வருடம் FA கிண்ணத்தின் அரையிறுதி வரை முன்னேறுவதற்கும் தன் பங்களிப்பை வழங்கியிருந்தார்.

செரண்டிப் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இஸ்ஸடீன் நியமனம்

இலங்கை தேசிய கால்பந்து அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய இலங்கை..

சம்பியன்ஸ் லீக் தொடரின் குழுச் சுற்றில் கொழும்பு அணி 4 போட்டிகளில் ஒரு கோலைக்கூட எதிரணிக்கு வழங்காது தடுத்ததுடன், மூன்று போட்டிகளில் மாத்திரமே ஒன்றை விட அதிகளவிலான கோல்களை வழங்கியிருந்தது. தொடரின் சுப்பர் 8 சுற்றில் 2 போட்டிகளில் ஒரு கோலைக் கூட வழங்காமலும், ஏனைய ஐந்து போட்டிகளிலும் ஒரு கோலை மாத்திரம் வழங்கி அவ்வணி தமது சிறந்த தடுப்பாட்டத்தை வெளிக்காட்டியிருந்தது. சம்பியன்ஸ் லீக் தொடரில் மொத்தமாக 14 போட்டிகளில் 15 கோல்களை வழங்கிய அவ்வணி, மிகவும் குறைந்தளவில் கோல்களை வழங்கிய அணிகளின் பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ளது.

சிறந்த வேகம் மற்றும் பந்தினை எதிரணி வீரர்களிடமிருந்து தட்டிப்பறிப்பதில் சிறந்து விளங்கும் அபீல், அதன் காரணமாக சிறந்த தடுப்பு வீரராகவும், தனது நிதானமான விளையாட்டுப் பாணி காரணமாக மத்திய களத்திலும் விளையாடக் கூடியவராகவும் காணப்படுகின்றார்.

கவீஷ் பெர்னாண்டோ (நிவ் யங்ஸ் கால்பந்து கழகம்)

Kaveesh Fernandoநிவ் யங்ஸ் கால்பந்து கழகத்தின் கோல் காப்பாளரான கவீஷ் பெர்னாண்டோ, கடந்த வருடம் இலங்கை தேசிய அணியிலும் இடம்பிடித்திருந்தார். ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றகரமான ஆட்டத்தை வெளிக்காட்டி வரும் கவீஷ், வெகு விரைவில் இலங்கை அணியில் சுஜான் பெரேராவின் இடத்தை தட்டிப்பறிக்கக் கூடிய வீரராக காணப்படுகின்றார்.

2016/2017 பருவகால சம்பியன்ஸ் லீக் தொடரில் இவரது அணியின் தடுப்பு வீரர்கள் கைகொடுக்கத் தவறிய போதிலும், பல போட்டிகளின்போது அபாரமாக செயற்பட்டு கோல்களை தடுத்திருந்தார். குழுச்சுற்றின்போது ஒரு போட்டியில் ஒரு கோலைக்கூட வழங்காமலும், நான்கு போட்டிகளில் ஒரு கோலை மாத்திரம் வழங்கியியுமிருந்தார். அத்துடன் ஒரு பெனால்டி உதையையும் தடுத்து அசத்தியிருந்தார்.

ஸர்வான் ஜோஹர் (கொழும்பு கால்பந்து கழகம்)

Zarwanஇலங்கை ரசிகர்கள் மத்தியில் பிரபலமிக்க வீரரான ஸர்வான் ஜோஹர் இவ்வருடம் கொழும்பு கால்பந்து கழகம் சார்பில் இரண்டாவது பருவகாலமாக விளையாடியதுடன், இவரது விளையாட்டுப் பாணி மேலும் முன்னேற்றகரமானதாக காணப்பட்டது.  

சிறந்த கோல் பெற்றுக்கொடுக்கும் ஒரு வீரராக அறியப்பட்டு வந்த ஸர்வான், இம்முறை மத்திய களத்தில் போட்டியை கட்டுப்படுத்துவதிலும் வாய்ப்புக்களை உருவாக்குவதிலும் தான் சளைத்தவரல்ல என்பதை நிரூபித்திருந்தார். தனது அணித் தலைவர் ரௌமி மொஹிடீனைப் போன்று பந்தை பரிமாற்றுவதிலும் இவர் தனது திறமையை வெளிக்காட்டியிருந்தார்.

ஸர்வான், சம்பியன்ஸ் லீக் தொடரின் மூன்று போட்டிகளில் ThePapare.com இன் ஆட்ட நாயகனாக தெரிவாகியிருந்தார். போட்டியின்போது ஒழுக்கமாக ஆட்டத்தில் ஈடுபடுவதனை இவரது பயிற்றுவிப்பாளரான மொஹமட் ரூமி மேலும் வலியுறுத்தினால், இவரது திறமையை மேலும் வெளிக்காட்டக் கூடியதாக இருக்கும்.

சஞ்சுக பிரியதர்ஷன (சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்)

Sajukaசௌண்டர்ஸ் அணியின் பின்களத்தின் மத்தியில் (சென்டர் பேக்) விளையாடும் வீரரான சஞ்சுக பிரியதர்ஷன தடுப்பாட்டத்தில் அசத்தி வருகின்ற மற்றுமொரு வீரராவார். இலங்கை அணியின் பின்களத்தின் மத்திய கள வீரரான துமிந்த ஹெட்டியாரச்சியுடன் சிறந்த இணைப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சஞ்சுக பிரியதர்ஷன, தனது அணியை அரையிறுதிச் சுற்று வரை அழைத்துச் செல்வதில் பெரும் பங்காற்றியிருந்தார்.  

மொரகஸ்முல்ல விளையாட்டுக் கழகம் மற்றும் இரத்தினபுரி விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகளுடன் இடம்பெற்ற போட்டிகளில், எதிரணியினால் கோல் பெற்றுக் கொள்ள இயலாத வகையில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். மேலும், FA கிண்ண அரையிறுதிப் போட்டியில் நவீன் ஜூடை வெற்றிகரமாக எதிர்கொண்டு அவரை தடுப்பதிலும் தனது அணிக்கு உதவியிருந்தார்.

தனுஷ்க மதுஷங்க (கொழும்பு கால்பந்து கழகம்)

Danushka Madushankaஇலங்கை 19 வயதிற்குட்பட்ட தேசிய அணியின் முன்னாள் வீரரான தனுஷ்க மதுஷங்க, 2016ஆம் ஆண்டில் குறித்த அணிக்கு தலைமை தாங்கியிருந்தார். அத்துடன் கடந்த மூன்று வருடங்களாக சம்பியன் பட்டம் வென்ற கொழும்பு அணியின் முக்கிய வீரராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

மிகவும் முக்கியமான போட்டிகளில் அழுத்தத்திற்கு மத்தியில் கோல் பெற்றுக் கொடுக்கும் வீரராகவும், மாற்று வீரராக களமிறங்கி அபாரமான ஆட்டத்தினையும் வெளிப்படுத்தியுள்ளார். பொதுவாக முன்கள வீரராக களமிறங்கும் இவர், மத்திய களத்திலும் வலப்பக்க விங் நிலையிலும் விளையாடக் கூடியவராவார். FA கிண்ணத்தின் காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் கொழும்பு கால்பந்துக் கழகத்தின் மிகவும் சிறந்த வீரராக தனுஷ்க மதுஷங்க காணப்பட்டார்.

சாமர டி சில்வா (ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்)

Chamara De Silvaகடந்த சில மாதங்களாக பலரது கவனத்தையும் ஈர்த்த மற்றுமொரு பின்கள மத்தியநிலை (சென்டர் பேக்) வீரர்தான் சாமர டி சில்வா. சம்பியன்ஸ் லீக் தொடரில் சற்று பின்தங்கிய நிலையிலான ஆட்டத்தையே வெளிக்காட்டிய போதிலும், FA கிண்ணத்தில் பின்களத்தில் பாஹிம் நிஸாம்டீனுடன் இணைந்து கொண்ட இவர் தனது அணியின் வெற்றிநடைக்கு சிறந்த பங்களிப்பை அளித்திருந்தார்.

சிட்டி கால்பந்து லீக் ஜனாதிபதிக் கிண்ணத்திலும் அசத்திய இவர், தனது உயரம் மற்றும் பலத்தை சிறப்பாக பயன்படுத்தி தனது ஆட்டத்தை மேலும் வலுப்படுத்தினால் இலங்கையின் மிகச்சிறந்த பின்கள மத்தியநிலை வீரர்களில் ஒருவராக தனது பெயரை பதிக்கலாம்.

மொஹமட் முஜீப் (ரினௌன் விளையாட்டுக் கழகம்)

Mejeebஅபாம் அக்ரமின் உபாதையின் காரணமாக அணியில் இடம்பிடித்த மொஹமட் முஜீப், ரினௌன் விளையாட்டுக் கழகம் மற்றும் அதன் பயிற்றுவிப்பாளர் மொஹமட் அமானுல்லா ஆகியோரினால் அறிமுகப்படுத்தப்பட்ட அபார வீரர் எனலாம்.

சம்பியன்ஸ் லீக் தொடரின் சுப்பர் 8 சுற்றின் இரண்டாம் வாரப் போட்டியில் அணியில் இடம்பிடித்த ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியின் முன்னாள் வீரரான முஜீப், ஆரம்பம் முதலே பந்தினை கட்டுப்படுத்தல் மற்றும் பரிமாற்றுதலில் அசத்தியிருந்தார்.

தனது இரண்டாவது போட்டியில் கோல் ஒன்றினைப் பெற்றுக்கொண்டதுடன், அப்போட்டியில் ThePapare.com இன் ஆட்ட நாயகனாகவும் தெரிவாகியிருந்தார். உருவத்தில் சிறிய வீரர் என்ற போதிலும், தனது சிறந்த வேகம் மற்றும் பந்தை கட்டுப்படுத்தலின் மூலம் தனது அணியை வலுப்படுத்தக் கூடிய வீரராக இவர் உள்ளார்.

எமது இந்த வீரர்கள் தெரிவில் மாற்றுக் கருத்துகள் இருந்தால் அவற்றைக் கீழே பதிவிடலாம்.