பாகிஸ்தானின் லாஹூர் நகரில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள இலங்கை – பாகிஸ்தான் அணிகளிடையிலான தொடரின் மூன்றாவதும் இறுதியுமான T-20 போட்டியில் பங்கேற்க இலங்கை வீரர்களை அந்நாட்டுக்கு அனுப்ப முன்னர் அணியின் பாதுகாப்பு தொடர்பில் அனைத்து விடயங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC)  குறிப்பிட்டுள்ளது.

புதிய வீரர்களோடு பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ள இலங்கை டெஸ்ட் அணி

2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கான சுற்றுப் பயணத்தின்போது லாஹூர் நகரில் உள்ள கடாபி மைதானத்தினை நோக்கிச் சென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் பஸ் வண்டி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடாத்தியிருந்தனர். இந்தக் கோர சம்பவத்தில் இலங்கை வீரர்கள் பலரும் மோசமான முறையில் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தினை அடுத்து முதற்தடவையாக இலங்கை அணி T-20 போட்டியொன்றில் விளையாட பாகிஸ்தான் பயணமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை (21) நடைபெற்ற  ஊடகவியாலளர் மாநாட்டில் பாகிஸ்தானில் இலங்கை அணியின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை கலந்துரையாடும் போது இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

நாங்கள் தொடரின் இறுதிப் போட்டியினை பாகிஸ்தானில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளோம். இரண்டு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த உடனேயே, பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து அதற்கு பின்னர்  நாம் அது தொடர்பான அழைப்பினை விடுக்க எத்தனித்துள்ளோம். மேலும்,  நிலைமைகளை ஆராய பாதுகாப்பு துறையில் கைதேர்ந்த சில நிபுணர்களையும் பாகிஸ்தான் அனுப்ப நாம் உத்தேசித்துள்ளோம். குறிப்பிட்ட நிபுணர்கள் இறுதி T-20 போட்டி நடைபெற இரண்டு வாரங்களுக்கு முன்னர், அந்நாட்டின் களநிலவரங்கள் எவ்வாறு உள்ளன என்பது பற்றிய அறிக்கையை எம்மிடம் சமர்ப்பிப்பர். “  

இலங்கை அணியானது அண்மைய இந்தியாவுடனான தொடரில் மூன்று வகையான கிரிக்கெட் ஆட்டங்களின் 9 போட்டிகளிலும் தோல்வியினை தழுவி மோசமாக செயற்பட்டிருந்தது. இத்தொடர் தோல்விகளிலிருந்து மீள பாகிஸ்தான் அணியுடனான சுற்றுப் பயணத்தை இலங்கை அணி பயன்படுத்தும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்நிலையில், தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை டெஸ்ட் அணி ஞாயிற்றுக்கிழமை (24) ஐக்கிய அரபு இராச்சியம் பயணமாகின்றது.

இலங்கை அங்கு  பங்குபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை அடுத்து பாகிஸ்தானுடன் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர், 3 T-20 போட்டிகள் கொண்ட தொடர் (மூன்றாவது T-20 போட்டி பாதுகாப்பு விடயங்கள் உறுதிப்படுத்தப்படும் நிலையில்)  ஆகியவற்றில் மோதுகின்றது.

இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் நிக் போத்தஸ் பாகிஸ்தானுக்கான தொடரின் முன்பாக கருத்து தெரிவித்திருந்த போது, இந்திய அணியுடனான தொடரில் பாரியதொரு தோல்வியினை நமது வீரர்கள் சந்திருந்த போதிலும், அத்தோல்வியானது எமது வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட ஒரு காரணியாக மாறியுள்ளது. நீங்கள் மெதிவ்சினை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், அவர் இலங்கை அணியின் இளம் வீரர் ஒருவருக்கு (விஷ்வ பெர்னாந்து) உதவி செய்துகொண்டிருந்த நிலையிலேயே உபாதைக்கு ஆளாகியிருந்தார். இவ்வாறாக மூத்த வீரர்கள் இளம் வீரர்களுடன் இணைந்து செயற்படும் விடயமானது எமது அணி எந்தளவு தற்போது ஒருங்கிணைந்து செயற்படுகின்றது என்பதை சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது என்று குறிப்பிட்டு இலங்கை அணி வீரர்கள் பயிற்சி ஆட்டங்களின் போது எவ்வாறு செயற்படுகின்றார்கள் என்பதை நடைபெற்று முடிந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் விபரித்திருந்தார்.

சேனநாயக்க, வன்டர்சேய், மாலிங்க ஆகியோரின் பந்து வீச்சில் வீழ்ந்த டிமோ

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் நேற்று (20) பயிற்சி ஆட்ட வேளையின்போது தொடைத் தசையில் ஏற்பட்ட உபாதை ஒன்றின் காரணமாக பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினை இழந்திருந்தார்.  

சிறப்பான ஆட்டத்தை அண்மைய போட்டிகள் மூலம் காட்டி வந்த மெதிவ்சின் இழப்பு இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவாகும்.  இன்னும், மெதிவ்ஸ் இலங்கை முதற்தடவையாக விளையாடவுள்ள பகலிரவு டெஸ்ட் ஆட்டத்திலும் (பாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி) பங்கேற்பது சந்தேகம் என்பதை இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க பின்வருமாறு  குறிப்பிட்டிருந்தார்.

மெதிவ்ஸ் இலங்கை அணிக் குழாத்துடன் (ஐக்கிய அரபு இராச்சியம்) பயணிக்கவில்லை. அவர் கொழும்பிலிருந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முன்னதாக உடற்தகுதி சோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளார். அச்சோதனையின் முடிவுகள் சரியாக அமையும் எனில், அவர் துபாயில் இலங்கை அணியுடன் இணைந்து போட்டியில் பங்கேற்க முடியும். “

 மேலும் பல விளையாட்டு தொடர்பான செய்திகளை அறிய