புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் பெருமையோடு ஏற்பாடு செய்து நடாத்திக் கொண்டிருக்கின்ற “ட்ரகன்ஸ் லீக் சம்பியன்ஷிப் -2017” போட்டிகளின் 17ஆவது லீக் ஆட்டம் கல்பிட்டி பிரதேசத்தின் ஒரே ஒரு தலை சிறந்த அணியான பேல்ஸ் கழகத்திற்கும் வளர்ந்து வருகின்ற இளம் வீரர்களைக் கொண்ட இளம் அணியான ஒடிடாஸ் விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பேல்ஸ் கழகம் 3 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் இலகு வெற்றி பெற்று புள்ளிக் கணக்கை ஆரம்பித்தது.

போட்டி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பந்து பேல்ஸ் அணியின் வீரர்களின் கால்களுக்கே மாறி மாறி சென்று கொண்டிருந்தது. இதனால் ஆரம்பத்திலேயே ஒடிடாஸ் கழகம் சற்று தடுமாற்றம் காணத்தொடங்கியது.

போட்டியின் 7ஆவது நிமிடத்தில் பேல்ஸ் கழகத்தின் முன்கள வீரர் அஸ்பாக் கொடுத்த நேர்த்தியான பந்து பரிமாற்றத்தைப் பெற்ற சர்பான் இலகுவாக கம்பத்திற்குள் அடிக்க அதை முபாசிக் தடுக்க எத்தணிப்பதற்குள் வேகமாகவே கம்பத்தினுள் பந்து சரணடைய தன் கோல் கணக்கை ஆரம்பித்தது பேல்ஸ் கழகம்.

மேலும் போட்டியின் 14ஆவது நிமிடத்தில் ஒடிடாஸ் கழகத்தின் அஸ்பாக் கம்பத்திற்கு சற்று தொலைவிலிருந்து கம்பம் நோக்கி வேகமாக பந்தினை அடிக்க அது கம்பத்திற்கு மேலால் சென்று ஏமாற்றமளித்தது.

போட்டியின் 18ஆவது நிமிடத்தில் பேல்ஸ் அணியின் அஸ்பாக் வழங்கிய கோல் வாய்ப்பிற்கான பந்துப் பரிமாற்றத்தினை பெற்ற இளம் வீரர் ரிஸ்கான் சிறப்பான முறையில் கம்பத்திற்குள் செலுத்த பந்து முபாசிக்கின் கைகளில்பட்டவாரே கோலாக மாற பேல்ஸ் கழகத்தின் கோல் கணக்கு இரட்டிப்பானது.

இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர்கள் பணி நீக்கம்

 

இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர்கள் பணி நீக்கம்

இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) தேசிய கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர்களை

தோடர்ச்சியாக பந்து பேல்ஸ் வீரர்களின் ஆதிக்கத்தால் அவர்களின் கால்களிலே காணப்பட நிலைகுலைந்து நின்றது ஒடிடாஸ் கழகம்.

போட்டியின் 25ஆவது நிமிடத்தில் ஒடிடாஸ் அணிக்குக் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பினை முர்சித் அடிக்க பந்து உயர சென்று பேல்ஸ் அணியின் கோல் காப்பாளர் ரிபாயின் கைகளில் சரணடைய முயற்சி வீணானது.

மேலும் 36ஆவது நிமிடத்தில் பேல்ஸ் கழகத்தின் அஸ்பாக் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற அல்தாப் இலகுவாக கோல் அடிக்க வேண்டிய பந்தை முபாசிக்கின் கைகளுக்கு தாரை வார்க்க இலகுவான வாய்ப்பு வீணடிக்கப்பட்டது.

43ஆவது நிமிடத்தில் பேல்ஸ் வீரர் சர்பான் கொடுத்த பந்தினைப் பெற்ற ரிஸ்கான் ஒடிடாசின் இரண்டு தடுப்பு வீரர்களை தாண்டி கம்பம் நோக்கி வேகமாக அடிக்க அதை சிறப்பாகச் செயற்பட்டு கைகளால் குத்தி வெயியேற்றினார் முபாசிக்.

முதல் பாதி: பேல்ஸ் விளையாட்டுக் கழகம்  2 – 0 ஒடிடாஸ் விளையாட்டுக் கழகம்.

இரண்டாம் பாதியில் விட்ட தவறுகளை சரிசெய்து கோல் கணக்கை அதிகரிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு பேல்ஸ் கழகம் களமிறங்க ஒடிடாஸ் கழகம் அதை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

போட்டியின் 50ஆவது நிமிடத்தில் ஒடிடாஸ் கழக வீரர் தாசிம் ப்ரீ கிக் உதையினை அடிக்க பந்து கம்பத்திற்கு அருகால் சென்றது.

மேலும் 53ஆவது நிமிடத்தில் பேல்ஸ் அணியின் தடுப்பு வீரர் ரினூஸான் கொடுத்த உயரமான பந்துப் பரிமாற்றத்தை அஸ்பாக் தன் தலையால் முட்டி கோலாக்க முயல பந்து கம்பத்திற்கு மேலால் சென்று ஏமாற்றியது.

போட்டியின் 65ஆவது நிமிடத்தில் பேல்ஸ் கழகத்தின் அஸ்பாக் கொடுத்த சிறப்பான பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற அல்தாப் கம்பம் நோக்கி வேகமாக அடிக்க எந்த வித தடங்களும் இன்றி பந்து கம்பத்தினுள் செல்ல 3 – 0 என முன்னிலை பெற்றது பேல்ஸ் கழகம்.

68ஆவது நிமிடத்தில் பேல்ஸ் அணிக்குக் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பினை அணித்தலைவர் ரில்வான் பொறுப்பேற்று அடிக்க அதை பாய்ந்து தடுத்து வெளியேற்றினார் முபாசிக்.

மீண்டும் போட்டியின் 74ஆவது நிமிடத்தில் ரினூஸான் கொடுத்த பந்தினைப் பெற்ற அஸ்பாக் ஒடிடாசின் மூன்று தடுப்பு வீரர்களை நிலைகுலையச் செய்து கம்பம் நோக்கி உதைக்க அதை இலகுவாகப் பற்றிக் கொண்டார் முபாசிக்.

மேலும் 78வது நிமிடத்தில் பேல்ஸின் அஸ்பாக் கொடுத்த பந்தினைப் பெற்ற ரிஸ்கான் வேகமாக கம்பத்திற்குள் அடிக்க முபாசிக் பிடிக்க முயற்சிக்கும் முன் பந்து கம்பத்திற்குள் செல்ல நடுவர் ஓப் சைட் என அறிவிக்க ஏமாற்றம் அடைந்தனர் பேல்ஸ் கழகத்தின் வீரர்களும் ஆதரவாளர்களும்.

போட்டியின் 84ஆவது நிமிடத்தில் பேல்ஸ் அணியின் அல்தாப் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை நுஸ்கான் கம்பம் நோக்கி உதைக்க, வேகமாக வந்த பந்தை தன் கையால் குத்தி விட்டார் முபாசிக்.

மைதானம் முழுவதையும் பேல்ஸ் அணியின் வீரர்கள் ஆக்கிரமிக்க ஒரு முயற்சியைக் கூட செயற்படுத்த முடியாமல் தவித்து நின்றது இளம் ஒடிடாஸ் கழகம்.

போட்டியின் 88ஆவது நிமிடத்தில் பேல்ஸ் கழகத்தின் ரிஸ்கான் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தை நுஸ்கான் வேகமாக அடிக்க பந்து கம்பத்திற்கு மேலால் சென்று மைதானத்தை விட்டே வெளியேறியது.

பேல்ஸ் கழகம் கோல் கணக்கினை அதிகரிக்க வேண்டும் என்ற முயற்சியில் கடுமையாக விளையடிய போதிலும் ஒடிடாஸ் கழகம் தன் அனைத்து வீரர்களையும் தடுப்பு வீரர்களாக மாற்றியமைக்க பேல்ஸ் கழகத்தின் இறுதி முயற்சிகள் அனைத்தும் வீணாகியது.

இறுதியில் போட்டி நிறைவு பெற்றதாக நடுவர் அறிவிக்க இளம் வீரர்களைக் கொண்ட வளர்ந்து வரும் ஒடிடாஸ் கழகத்தை 3 : 0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வீழ்த்தி தனது நான்காவது போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்து புள்ளிக் கணக்கினை ஆரம்பித்தது பலம் மிக்க பேல்ஸ் கழகம்.

முழு நேரம்: பேல்ஸ் விளையாட்டுக் கழகம்  3 – 0 ஒடிடாஸ் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

பேல்ஸ் விளையாட்டுக் கழகம் – சர்பான் 7’, றிஸ்கான் 18’, அல்தாப் 65’

மஞ்சள் அட்டை

ஒடிடாஸ் விளையாட்டுக் கழகம் – காமீல் 67’