பாகிஸ்தான் பயிற்சியாளருக்கு எதிராக உமர் அக்மல் குற்றச்சாட்டு

223
Image Courtesy - © Getty Images

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ஒழுக்கமற்ற வீரராக கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான உமர் அக்மல், அவ்வணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தன்னை மோசமான மொழியில் வசைமாரி பொழிந்ததாகவும், தேசிய கிரிக்கெட் அகடமியின் வசதிகளைத் தான் பயன்படுத்துவதற்கு தடை விதித்தார் என்று மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டொன்றை நேற்று முன்வைத்தார்.

இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உடனடியாக உமர் அக்மலின் ஆவேசத்தைக் கண்டித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு அவருக்கு பிடியாணை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்கு பின்னர் இடம்பெற்ற தேசிய உயர் செயற்திறன் முகாமில் உமர் அக்மல் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் தனக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் விலக வேண்டும் என்று உமர் அக்மல் வேண்டுகோள் விடுத்திருந்ததுடன், இத்தகவலை தேசிய அகடமியின் பயிற்சியாளர் முஷ்தாக் அஹமடிடமும் முறையிட்டார். அதன்பிறகு மேலதிக சிகிச்சைக்காக இங்கிலாந்து பயணமானார். எதிர்பார்த்ததைவிட மிக விரைவில் அவர் நாடு திரும்பினாலும் குறித்த முகாம் முடிந்துவிட்டது.

ஆனால் மீண்டும் பயிற்சிக்காகச் சென்ற அக்மலை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நுழைவாயிலில் வைத்து வீட்டுக்கு திருப்பி அனுப்ப பாகிஸ்தான் பயிற்சியாளர் நடவடிக்கை எடுத்தார். இதனையடுத்து விரக்திக்கு உள்ளான அக்மல், தனது தொலைபேசியினூடாக ஊடகவியலாளர்களுக்கு குறுந்தகலொன்றை அனுப்பி உடனடியாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் ஏற்பாடு செய்து தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்து ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

”நான் சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்றிருந்தேன். அதன் பிறகு தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சிக்காக சென்றிருந்தேன். ஆனால் பயிற்சியாளர்கள் யாரும் என் கூட இணைந்து பணியாற்றத் தயாராக இல்லை. ஏன் அனைத்து வெளிநாட்டுப் பயிற்சியாளர்களும் என்னுடன் பணியாற்ற மறுக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில் ஒப்பந்தம் பெற்ற வீரர்களுடன் பணியற்ற முடியும் என்றனர்.

2019 உலகக் கிண்ணம் வரை நான் பதவி விலகமாட்டேன் – திலங்க சுமதிபால

இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக…

நானும் பாகிஸ்தான் அணியின் சர்வதேச வீரர்தான். என் உடல்தகுதி பிரச்சினைதான் என்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அதிலிருந்து மீண்டு வர அவர்கள்தானே உதவ வேண்டும்? நான் தெரிவுக்குழுவின் தலைவர் இன்சமாமை அணுகினேன், அவர் மிக்கி ஆர்தரைக் கை காட்டினார். ஆர்தர் என்னை இன்சமாமின் அறைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு என்னை மோசமான வார்த்தைகளால் திட்டினார். அதுவும் இன்சமாம் முன்னிலையிலேயே, இது கீழ்த்தரமான செயல், இதனால் என் மனம் புண்பட்டது. என் உடல்தகுதி விளையாடுவதற்கான நிலையில் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதைத்தான் சரி செய்ய விரும்புகிறேன். ஆனால் எனக்கு உதவ மறுத்ததோடு, தேசிய கிரிக்கெட் அகடமிக்கு என்னை வரச்சொன்னது யார் என்று மிக்கி ஆர்தர் கேட்கிறார். அதுமட்டுமல்லாமல் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு வரக்கூடாது என்றும் கழக மட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும் என்னிடம் கூறினார்.

ஆனால் ஒரு பயிற்சியாளராக அவர் என் மீது வசைமாரி பொழியக்கூடாது. இது பாகிஸ்தானில் உள்ள அனைவரையும் கெட்ட வார்த்தையால் திட்டுவதற்கு சமமானது. எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் அவர் யாரையாவது திட்டிக்கொண்டுதான் இருப்பார். எனவே நான் இதனை பொதுவெளியில் கொண்டு வந்தேன், பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் இதனைப் பொறுப்புடன் அணுக வேண்டும்.

எப்போதும் பயிற்சியாளர் யாராவது ஒரு வீரரைத் திட்டிக் கொண்டேயிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஒரு பாகிஸ்தானியாக என்னால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கிரிக்கெட் அகடமிகள் ஒருவரது தவறைத் திருத்திக் கொள்ளத்தான் இருக்கிறது. என்னிடமிருந்து அனைத்தையும் பறித்து விட்டனர். நான் ஒரு பாகிஸ்தான் வீரர், எனது தவறைத் திருத்திக் கொள்ள விரும்புகிறேன். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே கூறுங்கள்” என்றார்.

இதனையடுத்து மிக்கி ஆர்தரும் அக்மலின் குற்றச்சாட்டு தொடர்பில் கூறும்போது, ”நான் அவரிடம் சில உண்மைகளைக் கூறினேன். அவர் தன் முதுகில் உள்ள அழுக்கைப் பார்க்காமல் எப்போதும் சாக்கு போக்குகளையே கூறிவருகிறார். அவர் ஒப்பந்த வீரர் அல்ல, எனவே அவர் தன் இஷ்டத்துக்கு இங்கு வந்து தனக்குத் தேவையானதை உத்தரவிட முடியாது” என்றார்.

சம்பியன்ஸ் கிண்ண வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஆர்தரின் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், உமர் அக்மலின் வேதனை சுவருக்கு முன்னால் புலம்புவது போல்தான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின்போது மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியும், மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில் கடந்த காலங்களில் பாகிஸ்தான் அணியில் இணைத்துக்கொள்ளப்படாத உமர் அக்மல், சுமார் 2 வருடங்களுப் பிறகு அவுஸ்திரேலிய தொடரில் பாகிஸ்தான் ஒருநாள் அணியில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டார். இதனையடுத்து சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட உடற்தகுதி பரிசோதனையில் அக்மல் தோல்வியடைந்த காரணத்தால், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து அவரை நீக்குவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், அண்மைக்காலமாக கிரிக்கெட் போட்டிகளின் போது ஒழுங்கீனமாக நடந்துகொள்கின்ற உமர் அக்மலை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்திலிருந்து நீக்குவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் உமர் அக்மல், அந்நாட்டு பயிற்சியாளரை பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருப்பது அவருடைய கிரிக்கெட் எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கியுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.