அடுத்த ஆண்டு பாகிஸ்தான் சுபர் லீக் தொடரை பாகிஸ்தானில் நடாத்த திட்டம்

170
Image Courtesy - PCB

பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) T20 தொடரின் நான்காவது பருவகாலப் போட்டிகள் நேற்று (17) மிக விமர்சையாக நடைபெற்று முடிந்திருக்கின்றது. இம்முறைக்கான பாகிஸ்தான் சுபர் லீக் T20  தொடரின் சம்பியனாக குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணி நாமம் சூடியிருந்த நிலையில், இத் தொடரின் இறுதிப் போட்டியும், நிறைவு விழாவும் கராச்சியில் இடம்பெற்றிருந்தது.

இத் தொடரின் நிறைவு விழாவின் போது பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) தலைவர் எஹ்சான் மணி 2020ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் போட்டிகள் அனைத்தினையும் பாகிஸ்தானிலேயே நடாத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

முதல் முறை பாகிஸ்தான் சுபர் லீக் சம்பியனான குயேட்டா கிளேடியேட்டர்ஸ்

“அடுத்த ஆண்டு, நாம் பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் போட்டிகள் அனைத்தையும் பாகிஸ்தானில் நடாத்தி உங்களை வரவேற்க எதிர்பார்த்திருக்கின்றோம்.“

பாகிஸ்தானுக்கு 2009ஆம் ஆண்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி மீது தீவிரவாத தாக்குதல் நடாத்தப்பட்ட காரணத்தினால், அங்கு சர்வதேச போட்டிகளில் விளையாட கிரிக்கெட் அணிகள் தயக்கம் காட்டி வந்திருந்தன.

ஆனால், அண்மைக்காலமாக பாகிஸ்தானில் உலக பதினொருவர் அணி, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றிருப்பதால் இந்நிலை மாறிவருகின்றது. அத்தோடு, வெளிநாட்டு வீரர்கள் பங்கெடுக்கின்ற பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் போட்டிகள் சிலவும் கடந்த மூன்று ஆண்டுகளாக பாகிஸ்தானில் இடம்பெற்று வருகின்றது.

இப்படியாக கிரிக்கெட் போட்டிகளுக்கான சாதக நிலைமைகள் உருவாகுவதனாலேயே, அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் அனைத்து பாகிஸ்தான் சுபர் லீக் போட்டிகளையும் நடாத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

“இன்று பாகிஸ்தானிற்கு குறிப்பாக கராச்சி நகருக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஒன்றாகும். பாகிஸ்தான் சுபர் லீக் போட்டிகள் இங்கு இடம்பெற தொடங்கியதன் பின்னர் அதனை 200,000 இற்கும் மேற்பட்டோர் மைதானத்திற்கு வந்து பார்வையிட்டுள்ளதுடன் தொலைக்காட்சி வழியேயும், டிஜிடல் தளங்கள் வழியேயும் மில்லியன் கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்“ எனக் குறிப்பிட்ட எஹ்சான் மணி பாகிஸ்தான் சுபர் லீக் தொடர்  பாகிஸ்தானில் இடம்பெறுவதை பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் பூராகவும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களும் விரும்பியிருப்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.

இதுமட்டுமின்றி எஹ்சான் மணி இந்த ஆண்டுக்கான பாகிஸ்தான் சுபர் லீக் தொடரினை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க உதவிய அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்திருந்தார்.

“இறுதியாக, நான் இந்த தொடரில் பங்கெடுத்த வெளிநாட்டு வீரர்கள், போட்டி உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் ஏனைய அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்கின்றேன். நீங்கள் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் காட்டும் ஆர்வத்தினை பார்த்துவிட்டீர்கள். அடுத்த ஆண்டு நாங்கள் உங்களை பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் அனைத்து போட்டிகளுடனும் இங்கே வரவேற்க உள்ளோம்“ என்றார்.

இலங்கை – தென்னாபிரிக்க தொடரின் பின்னரான புதிய ஒருநாள் தரவரிசை

வழமையாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறும் பாகிஸ்தான் சுபர் லீக் தொடரில் 2017ஆம் ஆண்டு அதன் இறுதிப் போட்டி மட்டும் பாகிஸ்தானில் நடைபெற்றது. அதனை அடுத்து 2018ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாகிஸ்தான் சுபர் லீக் தொடரில் பிளே ஒப் சுற்று, இறுதிப் போட்டி அடங்கலாக நான்கு போட்டிகள் பாகிஸ்தானில் இடம்பெற்றிருந்தது. இதன் பின்னர் இந்த ஆண்டுக்கான பாகிஸ்தான் சுபர் லீக் தொடரில் இறுதிப் போட்டியுடன் சேர்த்து மொத்தமாக எட்டுப் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று முடிந்திருக்கின்றன.

எஹ்சான் மணி ஒருபுறமிருக்க ஐ.சி.சி. இன் நிறைவேற்று அதிகாரியான டேவ் றிச்சர்ட்ஸன் பாகிஸ்தான் சுபர் லீக் உள்ளடங்கலாக, ஏனைய சர்வதேச போட்டிகள் பாகிஸ்தானில் இடம்பெற்றிருப்பதால் பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகளை நடத்துவது தொடர்பான தமது நிலைப்பாட்டிலும் புதிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.

“வெளியில் பாகிஸ்தான் பயணம் செய்வதற்கு ஒரு அபாயகரமான நாடு என்ற கருத்து கடந்த காலத்தில் இருந்து வந்தது. ஆனால் மெதுவாகவும், உறுதியாகவும் அண்மைக்காலமாக இடம்பெற்ற நல்ல செயற்பாடுகள் காரணமாக இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது“ என றிச்சர்ட்ஸன் குறிப்பிட்டார்.

ஐ.சி.சி. இன் நிறைவேற்று அதிகாரியின் இந்த கருத்தினால் பாகிஸ்தான் சுபர் லீக் மட்டுமில்லாது, சர்வதேச போட்டிகளும் பாகிஸ்தானில் வழமையான முறையில் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க