பவன், பவந்தவின் சதங்களினால் முன்னிலை பெற்ற மஹாநாம கல்லூரி

197

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன்  – 1 பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் கீழ் 3 போட்டிகள் இன்று (01) ஆரம்பமாகின. இதில் கொழும்பு மஹாநாம கல்லூரி வீரர்களான பவன் ரத்னாயக்க, பவந்த வீரசிங்க, குருநாகல் புனித ஆனா கல்லூரியின் தினெத் சந்திமால் மற்றும் காலி மஹிந்த கல்லூரியின் ஹன்சித வலிஹின்ன ஆகியோர் சதங்களைக் குவித்து அசத்தியிருந்தனர்.

மஹாநாம கல்லூரி, கொழும்பு எதிர் ஜனாதிபதி கல்லூரி, கோட்டே

குருநாகல் வெலகெதர மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் ஜனாதிபதி வித்தியாலயத்தின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய மஹாநாம கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவு வரை விளையாடியிருந்தனர். இதன்படி, தமது முதல் இன்னிங்சுக்காக 6 விக்கெட்டுக்களை இழந்து 403 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையை அவ்வணி எட்டியது. அவ்வணிக்காக பாடசாலை அரங்கில் அண்மைக்காலமாக ஜொலித்து வருகின்ற பவன் ரத்னாயக்க 175 ஓட்டங்களையும், பவந்த வீரசிங்க 132 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து வலுச்சேர்த்தனர்.

நாளை போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

மஹாநாம கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 403/6 (95.1) – பவன் ரத்னாயக்க 175, பவந்த வீரசிங்க 132, பெதும் ரொட்ரிகோ 30, ரிபாஸ் மௌருப் 2/84


சென் ஆன்ஸ் கல்லூரி, குருநாகல் எதிர் புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை

புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அந்தோனியார் கல்லூரி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய ஆன்ஸ் கல்லூரி அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடிய தினெத் சந்திமால் 114 ஓட்டங்களையும், ரந்தீர ரணசிங்க 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

இதில் யசிந்து ஜயவீர 5 விக்கெட்டுக்களை அந்தோனியார் கல்லூரி சார்பாக கைப்பற்றியிருந்தார்.

தனன்ஞய, குசலின் சிறப்பாட்டத்தால் இரண்டாம் நாளில் இலங்கை ஆதிக்கம்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அந்தோனியார் கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது ஒரு விக்கெட்டினை இழந்து 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

நாளை போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

சென்ஆன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 294 (79.5) – தினெத் சந்திமால் 114, ரந்தீர ரணசிங்க 51, வனித வன்னிநாயக்க 47, யசிந்து ஜயவீர 5/76, பசிந்து சதுரங்க 2/27

புனித அந்தோனியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 39/1 (13) – ரஷ்மிக மேவன் 21*


மஹிந்த கல்லூரி, காலி எதிர் லும்பினி கல்லூரி, கொழும்பு

மஹிந்த கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மஹிந்த கல்லூரி அணி, எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய லும்பினி கல்லூரி அணி, தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 73 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் மஹிந்த கல்லூரியின் பசன் பெதன்கொட 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மஹிந்த கல்லூரி அணி, ஹன்சித வலிஹின்னவின் சதத்தின் உதவியால் இன்றைய நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் லும்பினி கல்லூரியின் மதுஷங்க சிறினாத 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

நாளை போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

லும்பினி கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) -73 (31.4) – பசன் பெதன்கொட 5/30, கவிந்து எதிரிவீர 2/10

மஹிந்த கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்) – 202/6 (66) – ஹன்சித வலிஹின்ன 107, பினுர திம்சர 27, கவிந்து எதிரிவீர 26, மதுஷங்க சிறினாத 3/70, விமுக்தி குலதுன 2/64