கனிஷ்ட மெய்வல்லுனரில் சாதனை படைத்த பவிதரன், புவிதரன் சகோதரர்கள்

185

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்த 62ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 3ஆவதும், இறுதியும் நாளான நேற்று (04) நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பங்குகொண்ட யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ. பவிதரன் 4.40 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

வட மாகாணத்தைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் பங்குபற்றிய இப்போட்டியின் ஆரம்பத்தில் 4.00, 4.10 மீற்றர் உயரங்களை வெற்றிகரமாகத் தாவிய பவிதரன், 4.21 மீற்றர் உயரத்தை முதலாவது முயற்சியிலேயே தாவினார்

இதன்படி, 2015இல் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியின் கே. நெப்தலி ஜொய்சன் மற்றும் யாழ் மகாஜனா கல்லூரியின் எஸ். டிலக்ஷன் (4.20 மீற்றர்) நிலைநாட்டிய சாதனையை 4 வருடங்களுக்குப் பிறகு பவிதரன் முறியடித்தார்.

எனினும், கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் பவிதரனின் சகோதரனான புவிதரனும் இதே உயரத்தைத் தாவி போட்டிச் சாதனையை சமப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கடும் வெயிலுக்கு மத்தியில் தனது தன்னம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்து முன்னோக்கிச் சென்ற பவிதரன், அடுத்த இலக்காக 4.50 மீற்றர் உயரத்தைத் தெரிவு செய்த போதிலும், அவரால் அந்த இலக்கை அடைய முடியாமல் போனது.

இறுதியில் தேசிய மட்டப் போட்டியொன்றில் 4.40 மீற்றர் உயரத்தைத் தாவிய பவிதரன், முதல்தடவையாகப் போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் முதல் நாளில் வடக்கு வீரர்கள் அபாரம்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்ற ……..

கடந்த வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ் மெய்வல்லுனரில் இதே போட்டிப் பிரிவில் களமிறங்கிய அவர், 3.80 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில், போட்டியின் பிறகு எமது இணையத்துக்கு கருத்து வெளியிட்ட பவிதரன், ”உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது. எனது வெற்றிக்கு உதவி செய்த எனது பயிற்றுவிப்பாளர் கணாதீபன் ஆசிரியருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனது இந்த வெற்றிக்கான அனைத்து கௌரவங்களும் அவரையே சாரும்

அதேபோல எனது பாடசாலைவிளையாட்டுத்துறை ஆசிரியர் மதனரூபன், பழைய மாணவர் சங்கம், எனது அம்மா மற்றும் உறவினர்களுக்கும், எனக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து கோலூன்றிப் பாய்தலில் திறமைகளை வெளிப்படுத்தி தேசிய சாதனையை முறியடிப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன்” எனவும் தெரிவித்தார்

முன்னதாக, கடந்த வார இறுதியில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் களமிறங்கியிருந்த பவிதரன், 4.20 மீற்றர் உயரத்தைத் தாவி 9ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது

இதேநேரம், நேற்று நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த பி. விமலசேன (4.00 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியின் வி. ருஷான் (3.80 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்

இதுஇவ்வாறிருக்க, பவிதரனின் சகோதரரான புவிதரன், 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.40 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இறுதியாக, கடந்த வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ் மெய்வல்லுனர் போட்டியில் 4.70 உயரம் தாவி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற புவிரதனுக்கு இம்முறை போட்டிகளில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியவில்லை.

தேசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் மிதுன்ராஜுக்கு ஹெட்ரிக் பதக்கம்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ……..

அதுமாத்திரமின்றி, இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய அவர், சுமார் ஒருவருட கால இடைவெளிக்குப் பிறகு தேசிய மட்டப் போட்டியொன்றில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை, 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி என்.டக்சிதா (3.20 மீற்றர்) உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தையும், அதே கல்லூரியைச் சேர்ந்த எஸ்.சங்கவி, 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதலில் (35.10 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.  

இதன்படி, தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் பங்குகொண்ட வட மாகாணத்தைச் சேர்ந்த வீரர்கள் 6 தங்கம், 10 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 21 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்

யாழ். ஹார்ட்லிக்கு 4 பதக்கங்கள் 

மைதான நிகழ்ச்சிகளில் பதக்கங்களை வென்று வருகின்ற யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி வீரர்கள் இம்முறை தேசிய கனிஷ் மெய்வல்லுனரில் ஒரு தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களை வெற்றி கொண்டனர்

இதில் மைதான நிகழ்ச்சிகளான குண்டு எறிதல், தட்டெறிதல் மற்றும் ஈட்டி எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருகின்ற எஸ். மிதுன்ராஜ், 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மெட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், குண்டு எறிதல் மற்றும் தட்டெறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும் வெற்றி கொண்டார்

இதேநேரம், 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மெட்டி எறிதலில் அதே கல்லூரியைச் சேர்ந்த டி. சந்தோஷ் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்

மகாஜனா வீரர்கள் அபாரம்

இம்முறை தேசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவர்கள் 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தினை சுவீகரித்தனர்

இதில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் மற்றும் உயரம் பாய்தல் ஆகிய போட்டிகளில் சி. ஹெரினா முறையே முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்டார்

அத்துடன், 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சி. தீபிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்தார்.  

இதுஇவ்வாறிருக்க, 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் எஸ். சுகிகேரதன் வெள்ளிப் பதக்கத்தினை வெற்றி கொண்டார்

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<