ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் பெறும் வாய்ப்பை மயிரிழையில் இழந்த இலங்கை வீரர்

110

ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் முதற்தடவையாக வூஷு போட்டிப் பிரிவில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட பெதும் நுவன் பலவர்தன பதக்கமொன்றைப் பெற்றுக் கொள்கின்ற அரிய வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டார்.  

18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா மற்றும் பாலம்பேர்க் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 12,000 இற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.

பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இலங்கை கபடி அணிகள்

18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில்…..

அடுத்த மாதம் 2ஆம் திகதி முடிவடையவுள்ள இந்தப் போட்டியில் இதுவரை நடைபெற்ற எந்தவொரு போட்டிகளிலும் இலங்கை வீரர்களால் சோபிக்க முடியாமல் போனது.

தற்காப்பு கலைகளில் ஒன்றான வூஷு விளையாட்டில் சான்டா பிரிவுகளில் இலங்கை சார்பாக ஒரேயொரு வீரர் மாத்திரம் பங்குபற்றியிருந்தார். குத்துச்சண்டை பாணியில் விளையாடப்படும் இந்தப் பிரிவில் கையால் குத்து விடுவதுடன் காலாலும் உதைத்து இடறி விடுவார்கள்.

முன்னதாக நேற்றுமுன்தினம் நடைபெற்ற காலிறுதிக்கு முன்னைய சுற்றில் கலந்துகொண்ட பெதும் நுவன், லாவோஸ் வீரர் லெட்சபாவோ நௌகித்தை எதிர் கொண்டார். இதில் பெதும் நுவன் 2-0 என வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

இந்த நிலையில் 60 கிலோ எடைப் பிரிவில் ஆண்களுக்கான சந்தா வூஷு காலிறுதிப் போட்டிகள் நேற்று இரவு (21) ஜகார்த்தா சர்வதேச எக்ஸ்போ உள்ளக அரங்கில் நடைபெற்றன.

இதில் உலக தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள மிகவும் வலுவான வியட்நாம் வீரர் வேன் நெகியமை இலங்கை வீரர் பெதும் நுவன் பலவர்தன எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெதும் நுவன் ஆரம்பம் முதல் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், வியட்நாம் வீரர் தொடக்கத்தில் இருந்தே இலங்கை வீரருக்கு பதில் தாக்குதலைக் கொடுத்து முன்னிலை வகித்தார். இந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் சுதாகரித்துக் கொண்டு விளையாடிய வியட்நாம் வீரர் வேன் நெகியம் 2-0 என இலங்கை வீரரை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதிபெற்றார்.

இந்தப் போட்டியில் 2 புள்ளிகளால் அரையிறுதிக்கான வாய்ப்பை பெதும் நுவன் தவறவிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஒருவேளை, இப்போட்டியில் இலங்கை வீரர் பெதுமுக்கு வெற்றி கிடைத்திருந்தால், வெண்கலப் பதக்கமொன்றைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

இந்த நிலையில் போட்டியின் பிறகு பெதும் நுவன் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில், ”இந்தளவு தூரம் வரமுடிந்தமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும், பதக்கமொன்றைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை 2 புள்ளிகளால் தவறவிட்டமை கவலையளிக்கின்றது. உலக தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ளவரும், 2017இல் உலக வூஷு சம்பியன் பட்டத்தை வென்ற வீரருடன் தான் நான் போட்டியிட்டிருந்தேன். இந்த தோல்விக்கு என்னுடைய ஒருசில தவறுகள் காரணமாக இருந்தன. அத்துடன், நேற்றுமுன்தினம் நடைபெற்ற காலிறுதிக்கு முந்திய போட்டியில் எனது காலில் உபாதை ஏற்பட்டது. அதுவும் எனது தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்தப் போட்டியின் முதல் சுற்றில் 1-2 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியைத் தழுவினேன். தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது சுற்றில் எதிரணி வீரரை தாக்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை” என்றார்.

தாய்லாந்து அணியிடம் போராடி தோல்வியை தழுவிய இலங்கை

இந்தோனேசியாவின் ஜகர்த்தா – பலேம்பேங்கில் நடைபெற்று வரும் 18வது…..

உண்மையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதற்தடவையாக பங்குபற்ற கிடைத்தமை மிகப் பெரிய வெற்றியாகும். இதற்கு எனது பயிற்சியாளருக்கும், வூஷு சம்மேளனத்துக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எங்களுக்கு கிடைத்த வளங்களைக் கொண்டு இந்தளவு தூரம் வர முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தொடருக்காக நான் கடுமையான பயிற்சிகளை முன்னெடுத்திருந்தேன். அதற்கான பல்வேறு ஆலோசனைகளை எனது பயிற்சியாளர் வழங்கியிருந்ததுடன், என்னால் இந்தப் போட்டியில் முன்னேறிச் சென்று பதக்கமொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கையும் கொடுத்தார். இறுதியில் உபாதையுடன் போட்டியிட்டு பதக்கமொன்றைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை தவறவிட்டது கவலையளிக்கிறது. எது எவ்வாறாயினும், அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக சம்பியன்ஷிப் வூஷு மற்றும் தெற்காசிய வூஷு சம்பியன்ஷிப் தொடர்களில் சிறப்பாக விளையாடி இலங்கைக்கு பதக்கமொன்றைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பெதுமின் பயிற்சியாளரும், தேசிய வூஷு பயிற்சியாளருமான கபில பத்ரா இதுதொடர்பில் கருத்து வெளியிடுகையில், உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள வீரரை வீழ்த்துவதற்கான வியூகங்களுடன் தான் நாம் போட்டியில் களமிறங்கினோம். இந்த வீரர் இல்லாமல் வேறொருவருடன் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருந்தால், நிச்சயம் எமக்கு பதக்கமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும் என தெரிவித்தார்.

குருநாகலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பெதும் நுவன், தற்போது இலங்கை கடற்படையில் பணிபுரிந்துகொண்டிருக்கின்றார். அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் திறமைகளையும், வெற்றிகளையும் பெற்றுவருகின்ற பெதுமின் எதிர்பார்ப்பு நனவாக வேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<