இளம் வீரர் பத்தும் நிசங்கவுக்கு ஆபத்தில்லை

1101

கொழும்பு, NCC மைதானத்தில் இன்று (31) நடைபெற்ற  இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிகளுக்கு இடையிலான முதலாவது பயிற்சிப் போட்டியின் போது தலையில் பந்து தாக்கிய இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியின் இளம் வீரர் பத்தும் நிசங்க ‘ஆபத்தான நிலையில் இருந்து’ வெளியேறியுள்ளார்.

“நாம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று MRI ஸ்கேன் சோதனை செய்தோம். அவர் ஆபத்தான நிலையில் இல்லை. எனினும் 24 மணி நேரத்திற்கு நாம் அவரை கண்காணிப்பில் வைத்துள்ளோம்”  என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உடற்பயிற்சி நிபுணர் ரஞ்சித் நாணயக்கார ThePapare.com க்கு கூறினார்.   

இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நிஷான் பீரிஸ் வீசிய பந்தை, 44 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த இங்கிலாந்து அணியின் உப தலைவர் ஜோஸ் பட்லர் வேகமாக தாக்கி அடித்தார். அப்போது சோட் லெக் (Short-leg) திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிசங்கவின் தலைக்கவசத்தை அந்தப் பந்து தாக்கியது. இங்கிலாந்து இன்னிங்ஸின் 56 ஆவது ஓவரில் வைத்து இது நடந்தது.   

பந்து தாக்கியவுடன் மைதானத்தில் விழுந்த நிசங்க, வலியுடன் இருப்பதை காணமுடிந்தது. அப்போது அங்கு விரைந்த மருத்துவ பணியாளர்கள் அவரது கழுத்தில் பட்டி ஒன்றை வைத்து முதலுதவி தட்டில் வைத்து எடுத்துச் சென்றார்கள்.

நிசங்கவின் தலைக்கவசத்தில் பட்டு வந்த பந்தை லெக் ஸ்லிப் (Leg-slip) திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் பிடியெடுத்து பட்லரை ஆட்டமிழக்கச் செய்தார். தேநீர் இடைவேளைக்கு 10 நிமிடங்களுக்கு முன்னரே இந்த விபத்து இடம்பெற்றது. இதனால், முன்கூட்டியே தேநீர் இடைவேளையை வழங்க நடுவர்கள் தீர்மானித்தனர்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<