இளையோர் ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்ற இளம் வீராங்கனை பாரமி வசந்தி

602

ஆர்ஜெண்டீனாவின் தலைநகர் புவனர்ஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்று வரும் 3 ஆவது கோடை கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நேற்று (15) நடைபெற்ற பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் இளம் வீராங்கனை பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, வெண்கலப் பதக்கம் வென்றார்.

இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட முதலாவது பதக்கம் இதுவென்பதுடன், இலங்கையின் முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனையும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான சுசந்திகா ஜயசிங்கவுக்குப் பிறகு சர்வதேச மட்டத்தில் பதக்கமொன்றைப் பெற்றுக் கொண்ட முதல் வீராங்கனையாகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.

இளையோர் ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பை உறுதி செய்த இளம் வீராங்கனை பாரமி வசந்தி

3 ஆவது கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமாகியது. ஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டிகள், 18 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரம் வீர, வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இலங்கை சார்பில் 13 வீரர்கள் 7 வகையான விளையாட்டுக்களில் பங்கேற்றுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, இம்முறை இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் பிரதான பதக்க எதிர்பார்ப்பாக அமைந்த மெய்வல்லுனர் போட்டிகளில் 4 வீரர்கள் பங்கேற்றிருந்ததுடன், பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டி முக்கிய இடத்தை வகித்தது.

இந்த நிலையில், பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் உலக தரவரிசையில் முதல் 3 இடங்களுக்குள் இடம்பெற்றிருந்த பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டலின் முதல் நிலைப் போட்டியில் பங்குபற்றியிருந்தார்.

பதினேழு வீராங்கனைகள் பங்கேற்ற குறித்த போட்டியை 6 நிமிடங்களும் 33.06 செக்கன்களில் நிறைவு செய்த பாரமி, அதிசிறந்த காலப் பெறுமதியைப் பதிவுசெய்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இது இவ்வாறிருக்க, சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் புதிய விதிமுறைகள் பிரகாரம் 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியின் முதல் நிலையில் பங்குபற்றிய வீரர்கள் அனைவரும் நேற்று நடைபெற்ற 4 கிலோமீற்றர் நகர்வல ஓட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.

கடுமையான குளிருக்கும் மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்குகொண்ட பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, போட்டித் தூரத்தை 13.47.00 செக்கன்களில் நிறைவுசெய்து ஒட்டுமொத்த வீரர்கள் அடிப்படையில் 17 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

குறித்த போட்டியில், கென்யாவைச் சேர்ந்த சிரோனோ பென்சி (12.51 செக்.) முதலிடத்தையும், எத்தியோப்பியாவைச் சேர்ந்த சிக்வொமோய் எஸ்டர் யொகோ (13.13 செக்.) இரண்டாவது இடத்தையும், எத்தியோப்பியாவைச் சேர்ந்த அபீபி மீகிட்ஸ் (13.21 செக்.) மூள்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இளையோர் ஒலிம்பிக் மெய்வல்லுனரில் செனிரு, டிலான் அடுத்த சுற்றுக்குத் தகுதி

இதன்படி, இரண்டு நிலைகளைக் கொண்ட போட்டியாக அமைந்த பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாணடலில் வீரர்கள் பெற்ற ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் 4 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்ட பாரமி, வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.

அத்துடன், முதல் நிலையில் முதலிடத்தையும், நகர்வல ஓட்டத்தில் 3 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்ட சிரோனோ பென்சி தங்கப் பதக்கத்தையும், முதல் நிலையில் 2 ஆவது இடத்தையும், நகர்வல ஓட்டத்தில் 11 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்ட எத்தியோப்பியாவைச் சேர்ந்த அபீபி மீகிட்ஸ் வெள்ளிப் பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டனர்.

சிலாபம் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியில் கல்வி பயின்று வருகின்ற 17 வயதுடைய பாடசாலை மாணவியான பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற 88 ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியை 6 நிமிடங்களும் 37.9 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் (6 நிமி. 59.63செக்.) புதிய போட்டிச் சாதனையுடன் அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இலங்கை 16 வயதுக்கு உட்பட்ட பெண்கள் றக்பி அணிக்காக விளையாடிய பாரமி வசந்தி, ஜப்பானின் ஜிபு நகரில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

இதனையடுத்து, ஆர்ஜென்டீனாவில் தற்போது நடைபெற்று வருகின்ற இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனர் போட்டிகளிலும் அவர் பங்குபற்றியிருந்தார். தாய்லாந்தின் பெங்கொங் நகரில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற குறித்த போட்டித் தொடரில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.

இதன்படி, இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதற்கான வாய்ப்பையும் பாரமி பெற்றுக்கொண்டதுடன், சுமார் ஒரு தசாப்தங்களுக்குப் பிறகு மெய்வல்லுனர் போட்டியொன்றில் இலங்கைக்கான முதலாவது சர்வதேச பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

அத்துடன், மத்திய மற்றும் நீண்ட தூரப் போட்டிகளில் உலக அரங்கில் முன்னிலை வீரர்களாக வலம் வருகின்ற கென்யா மற்றும் எத்தியோப்பிய நாட்டு வீராங்கனைகளையெல்லாம் பின்தள்ளி பாரமி பெற்ற இந்த வெற்றி நிச்சயம் இலங்கையின் மெய்வல்லுனர் துறையின் அடுத்த கட்டத்துக்கான முக்கிய காரணியாகவும் அமையவுள்ளது என்றால் மிகையாகாது.

இது இவ்வாறிருக்க, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் மாதம் அறிவிக்கப்பட்ட இவ்வருடத்துக்கான தேசிய மெய்வல்லுனர் குழாமில் சிறப்புக் குழுவிலும் அவர் முதல் தடவையாக உள்வாங்கப்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

செனிருக்கு 4ஆவது இடம்

இளையோர் ஒலிம்பிக்கில் மெயவ்ல்லுனர் போட்டிகளில் ஞாயிறு (14) நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் பாய்தல் இரண்டாவது நிலைப் போட்டியில் பங்குகொண்ட கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த செனிரு அமரசிங்க, 2.14 மீற்றர் உயரம் தாவி, தனது அதிசிறந்த உயரப் பெறுமதியுடன் 4 ஆவது இடத்தைப் பெற்று ஆறுதல் அளித்தார்.

முன்னதாக கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் பாய்தல் முதல் நிலைப் போட்டியில் பங்குகொண்ட செனிரு அமரசிங்க, 2.05 மீற்றர் உயரம் தாவி 4ஆவது இடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த போட்டியில் சீனாவின் சென் லோங் 2.22 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை வெற்றி கொள்ள, அவுஸ்திரேலியாவின் மியர்ஸ் ஒஸ்கார் (2.22 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், உக்ரைனின் டொரொஸ்ச்சுக் ஒலிஹ் (2.14 வெண்கலப் பதகத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்படி, உலக இளையோர் தரவரிசையில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ள செனிரு, மயிரிழையில் பதக்கம் பெறும் வாய்ப்பை தவறவிட்டார்.

டிலானுக்கு 7ஆவது இடம்

பாடசாலை மட்டத்தில் மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் அண்மைக்காலமாக வெற்றிகளைப் பெற்றுவருகின்ற குருநாகல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல கல்லூரியைச் சேர்ந்த டிலான் போகொட, ஞாயிறு (14) நடைபெற்ற ஆண்களுக்காள 400 மீற்றர் இரண்டாம் நிலை ஓட்டப் போட்டியில் பங்குகொண்டு 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். போட்டியை அவர் 48.52 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

முன்னதாக கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற 400 மீற்றர் முதல் நிலை ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய டிலான், போட்டியை 48.52 செக்கன்களில் நிறைவுசெய்து, தனது அதிசிறந்த காலத்துடன் 3 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

இது இவ்வாறிருக்க, 2 ஆவது நிலையில் நான்கு சுற்றுக்களாக நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் ஒட்டுமொத்த நேரக் கணிப்பீட்டின்படி டிலான் போகொட 7 ஆவது இடத்துடன் ஆறுதல் அடைந்தார்.

குறித்த போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த எவில்ஸ் பெர்ரீரோ தங்கப் பதக்கத்தையும், சம்பியா நாட்டு வீரர் லுச்சிம்பே கெனடி மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் ரமே நிக்கலொஸ் ஆகிய வீரர்கள் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<