தேசிய பரா மெய்வல்லுனர் போட்டிகள் ஜுலை 20இல் ஆரம்பம்

134

டயலொக் ஆசியாட்ட நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன் தேசிய பரா ஒலிம்பிக் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய பரா மெய்வல்லுனர் போட்டிகள் எதிர்வரும் 20ஆம், 21ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.  

உலக கனிஷ்ட மெய்வல்லுனர் இறுதிப் போட்டியில் சோபிக்கத் தவறிய இலங்கை அஞ்சலோட்ட அணி

டென்மார்க்கின் தம்பரே நகரில் இடம்பெற்ற உலக கனிஷ்ட..

இலங்கையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படுகின்ற வருடத்தின் மிகப் பெரிய மெய்வல்லுனர் போட்டித் தொடராக அமைந்துள்ள தேசிய பரா மெய்வல்லுனரில் இம்முறை நாடளாவிய ரீதியில் இருந்து சுமார் 40 விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த 800இற்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக தேசிய பரா ஒலிம்பிக் சங்கத்தின் பிரதித் தலைவரும், பரா மெய்வல்லுனர் பிரிவின் பொறுப்பு அதிகாரியுமான கேர்னர் தீபால் ஹேரத் தெரிவித்தார்.

அத்துடன், 180 பரா மெய்வல்லுனர் போட்டிகளுக்காக நடைபெறவுள்ள இம்முறை போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்கள் அடுத்த மாதம் ஜேர்மனியில் நடைபெறவுள்ள உலக பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் மற்றும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசிய பரா விளையாட்டு விழா என்பவற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றுக் கொள்வர்.  

இதேநேரம், குறித்த போட்டித் தொடருக்கான இலங்கை பரா மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவு செய்வதற்கான முதலாவது தகுதிகாண் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றன.  

>> காணொளிகளைப் பார்வையிட  

நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் 160 வீரர்கள் இந்த தகுதிகாண் போட்டிகளில் கலந்துகொண்டதுடன், இதில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த 44 வீரர்களை தேசிய பரா மெய்வல்லுனர் குழாமுக்காக தெரிவு செய்வதற்கு இலங்கை பரா ஒலிம்பிக் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதேநேரம், குறித்த தகுதிகாண் போட்டிகளில் றியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தையும், கடந்த வருடம் லண்டனில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுனர் போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் ஓய்வு பெற்ற முன்னாள் வீரரான தினேஷ் பிரயன்த ஹேரத், மாற்றுத்திறனாளிகளுக்கான ஈட்டி எறிதலில் 63.70 மீற்றர் தூரத்தை எறிந்து உலகின் 2ஆவது சிறந்த தூரத்தைப் பதிவுசெய்து, உலக சாதனை அடைவுமட்டத்தை அண்மித்திருந்தார்.

  • தினேஷ் பிரயன்த ஹேரத்

இது இவ்வாறிருக்க, பொதுநலவாய விளையாட்டு விழாவுக்காக இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த மார்ச் மாதம் முற்பகுதியில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகளில் இலங்கை பரா மெய்வல்லுனர் அணியின் நட்சத்திர வீராங்கனையான அமரா இந்துமதி பெண்களுக்கான 400 மீற்றரில் பங்கேற்று இவ்வருடத்துக்கான தனது அதிசிறந்த நேரப் பெறுமதியை பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<