ஜோ ரூட் 2ஆவது இரட்டைச்சதம், பாகிஸ்தான் பெரும் நெருக்கடியில்

227
pakisthan vs england

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி ஓல்டு டிராஃப்போர்டில் வெள்ளிக்கிழமை(22) தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய  இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ஓட்டங்களைக் குவித்தது. தலைவர் அலைஸ்டர் குக் சதம் அடித்து 105 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். இது அவரின் 29ஆவது சதமாகும். குக்கை தொடர்ந்து ஜோ ரூட்டும் சதம் அடித்தார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ரூட் 141 ஓட்டங்களுடனும், கிறிஸ் வோக்ஸ் 2 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 2ஆவது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய வோக்ஸ் அரைச்சதம் அடித்து 58 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து பென் ஸ்டோக்ஸ் களம் இறங்கினார். இவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் 150 ஓட்டங்களைக் கடந்தார்.

தொடர்ந்து பந்துகளை விளாசிய அவர் தனது 2ஆவது இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். 355 பந்துகளை சந்தித்து 22 பவுண்டரிகளுடன் இரட்டை சதத்தை எட்டினார். ஸ்டோக்ஸ 34 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வகாப் ரியாஸின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து ஜோ ரூட் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட்டின் ஆட்டத்தால் இங்கிலாந்தின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 400, 500 என உயர்ந்தது. இறுதியாக அணியின் ஓட்ட எண்ணிக்கை 577ஆக இருக்கும்போது ஜோ ரூட் 254 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இது அவரின் தனிப்பட்ட முறையில் அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும். மறுமுனையில் விளையாடிய பேர்ஸ்டோவ் 58 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அப்போது இங்கிலாந்து அணி 152.2 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 589 ஓட்டங்களைக் குவித்திருந்தது. அத்துடன் முதல் இனிங்ஸை முடித்துக்கொள்வதாக இங்கிலாந்து அணியின் தலைவர் அலைஸ்டர் குக் அறிவித்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளும், அமிர் மற்றும் ரஹத் அலி தலா இரண்டு விக்கெட்டுகளும், யாசீர் ஷா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதன் பின்னர் தமது முதலாவது இனிங்ஸிற்காக ஆடி வரும் பாகிஸ்தான் அணி 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்று பெரும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி சார்பாகத் துடுப்பாட்டத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷான் மஷூட் மட்டும் தனியாக நிலைத்தாடி 30 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற்றுள்ளார்.

அவரைத் தவிர முஹமத் ஹபீஸ் 18 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்து இருந்தார். 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில்  ஷான் மஷூடோடு தலைவர் மிஸ்பா உல் ஹக் ஆட்டம் இழக்காமல் 1 ஓட்டத்தோடு களத்தில் இருந்தார்.

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் பென் ஸ்டோக்ஸ் 11 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும் கைப்பற்றி இருந்தார்கள். தற்போது பாகிஸ்தான் அணி 6 விக்கட்டுகள் மட்டும் கை இருப்பில் இருக்க இங்கிலாந்தை விட 532 ஓட்டங்களால பின்னிலையில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 589/8d

ஜோ ரூட் 254, அலைஸ்டர் குக் 105 , க்றிஸ் வோக்ஸ் 58, ஜொனி பெயர்ஸ்டோவ் 58, பென் ஸ்டோக்ஸ் 34

வஹாப் ரியாஸ் 106/3, முஹமத் அமீர் 89/2 , ரஹத் அலி 101/2

பாகிஸ்தான் – 57/4

ஷான் மஷூட்  30*, முஹமத் ஹபீஸ் 18

கிறிஸ் வோக்ஸ் 18/3, பென் ஸ்டோக்ஸ் 11/1

பாகிஸ்தான் அணி 6 விக்கட்டுகள்  கை இருப்பில் இருக்க 532 ஓட்டங்களால் பின்னிலையில்